(Reading time: 13 - 25 minutes)

“இருக்கட்டும் அண்ணாச்சி.. நீங்க வந்ததே சந்தோஷம் தான்.. “ என்றவர், அவர்கள் பேசிக் கொண்டு இருந்த போது சமையல் கட்டை விட்டு வெளியில் வந்த கணேசன் மனைவியும், வேலன் மனைவியையும் அவர்களுக்கு அறிமுகபடுத்தினார்.

“அவங்களுக்கு குடிக்க, கொள்ள எடுத்துட்டு வாங்க” என, இருவரும் உள்ளே செல்ல முயல,

அப்போது செழியன்

“பாட்டி.. ரெண்டு வீட்டுக்கும் நீங்கதான் பெரியவங்க மாதிரி தெரியுது.. நானே உங்ககிட்டே நேரடியா கேக்குறேன்.. உங்க பேத்தி மலர எங்க வீட்டு மருமகளா அனுப்பி வைக்கறீங்களா?” என்று கேட்க,

அங்கிருந்த அனைவரும் திகைத்து நின்றார்கள்.

செழியன் அப்பா, அம்மா நினைத்தது, இங்க இவங்க பொண்ண பார்க்க வந்துட்டு, மலர் பத்தி பேசினா அது நல்லா இருக்காது.. அதனால் கொஞ்ச நாள் ஆறப் போட்டு பிறகு வேலனிடம் பெண் கேட்கலாம் என்று எண்ணியிருந்தனர்..

வேலனுக்கோ செழியன் நேரடியாக இப்படி கேட்பான் என்ற எண்ணம் இல்லாததால், என்ன சொல்ல என்று தெரியாத நிலை.. அதோடு தன் தாயின் மனதில் வேறு ஒரு நினைப்பு இருப்பதும் அவருக்கு தெரியும்.. அதனால் அவருக்கு திகைப்பாக இருந்தது.

வடிவேலுவிற்கும் செழியன் அப்பா போல், இந்த இடத்தில வச்சு இந்த பையன் கேப்பான்னு நினைக்கலையே.. என்ற எண்ணம்.. கணேசன் என்ன நினைக்கிராறோ என்று சங்கடமாக இருந்தது.

அங்கிருந்த பெண்களுக்கு எதுவும் சொல்ல முடியாத நிலை..

வடிவு ஆச்சிக்கோ “இந்த பையன் இப்படி நேரடியா கேட்டுட்டானே.. இதற்கு இப்போது பதில் என்ன சொல்ல? என்ற திகைப்போடு கூடிய யோசனை..

இத்தனையிலும் அங்கிருந்த அனைவரின் மனத்திலும் ஒரு சிறு நிம்மதி.. நடக்கின்ற எதுவும் அந்த பெண்களுக்கு தெரியாது என்று.. ஆனால் அவர்கள் அங்கேதான் இருந்தார்கள் என்று யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை.

எல்லோரும் அமைதியாக இருக்க, செழியன் மீண்டும்

“பாட்டி.. மலர எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.. ப்ளீஸ் எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க.. “ என்று கேட்டான்..

தவறி கூட , மலரும் தன்னை விரும்புகிறாள் என்று அவன் சொல்லவில்லை.. அவர்கள் வீட்டில் கேட்டால் மலர் சொல்லிக் கொள்வாள். தன்னால் அவளுக்கு சங்கடம் ஏற்படக் கூடாது என்று எண்ணினான்..

இப்போது சற்று சங்கடத்தோடு “இல்லை தம்பி.. அது நடக்காது..” என,

“ஏன் பாட்டி..? உங்களுக்கு என்னைய பிடிக்கலையா? இல்லை.. என் குடும்பத்தில் உள்ளவர்கள் பற்றி ஏதாவது யோசிக்கிறீங்களா? நாங்க நிச்சயம் மலர நல்லா பார்த்துக்குவோம் “ என

“ஐயோ.. உன்னை பத்தியோ, இல்லை உன் குடும்பத்தை பத்தியோ எனக்கு எந்த குறையும் இல்லை.. ஆனால் நான் இப்போ இத நடத்திக் குடுக்க முடியாத சூழ்நிலைலே இருக்கேன்”

அப்போது “அப்படி என்ன சூழ்நிலை ஆச்சி?” என்ற மலரின் குரல் கேட்க, அங்கிருந்த அனைவரும் இப்போது தடுமாறினார்.

செழியனே இப்படி ஒரு நிலைமை எதிர்பார்க்கவில்லை.. ஏற்கனவே பேசி வைத்து இருவரும் சேர்ந்து குடும்பத்திடம் பேசுவது வேறு.. ஆனால் வந்த இடத்தில் திடீர் என்று பேசுவது சரியான முறை அல்ல.. இதில் நாம் மலரையும் இழுக்கக் கூடாது என்று எண்ணியிருக்க, மலரோ அவளின் ஆச்சியை எதிர்த்து கேள்வி கேட்கிறாளே , இது சரியாக வருமா என்ற எண்ணம் தோன்றியது..

ஆச்சியோ “மலரு.. இங்கன பெரியவங்க பேசுற இடத்தில உங்களுக்கு என்ன வேலை?” என்று மலரை கிளப்ப எண்ணினார்..

“தண்ணி தாகமா இருந்துச்சு.. மேலே இல்லை. அதான் கீழே வந்து எடுத்துட்டு போலாம்ன்னு வந்தோம்.. கொஞ்சம் முன்னாடியே வந்துட்டோம்.. சரி பெரியவங்க பேசிட்டு இருக்கீங்கன்னு ஒதுங்கி நின்னோம்.. “

“அதான் தெரியுதுல்ல.. மேலே போயிருக்க வேண்டியது தானே.”

“அது சரி.. நீங்க பேசுறது எங்க கல்யாணம் பத்தி.. இதுலே என்னன்னு தெரிஞ்சிக்க நான் நிக்க கூடாதா?” என்று குரல் உயர்த்தினாள்.

“அதுக்கு பெரியவங்க கிட்டே வம்பு வளர்ப்பியோ” என்று பதிலுக்கு அவரும் சற்று உரக்க பேசினார்.

“பேச்சை மாத்தாதே ஆச்சி.. செழியன் கேட்டதுக்கு நடக்க முடியாத சூழ்நிலையினு ஏன் சொன்ன?” என்று மடக்க,

இப்போது ஆச்சி என்ன சொல்ல போகிறார் என்று எல்லோரும் அவரை பார்த்தனர்.

“பேச்சி.. “ என்று ஆரம்பிக்க, வேலன் மனதுக்குள் “போச்சு.. ஏற்கனவே அவ சாமி ஆட ஆரம்பிச்சுட்டா.. இதில் அம்மா வேற உடுக்கை அடிக்குதே.. இனி மலை ஏறாம இருக்க மாட்டாளே?” என்று புலம்பினார்.

அவரின் எண்ணம் சரியாக

“ஆச்சி.... “என்று பல்லை கடித்தவள் “எத சொல்ல வந்தியோ அத சொல்லு.. தேவை இல்லாம பேசாத”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.