(Reading time: 12 - 24 minutes)

தொடர்கதை - என் அருகில் நீ இருந்தும்!!! - 06 - பூஜா பாண்டியன்

En arugil nee irunthum

வாட்கின்ஸ் கிளன் இல் இருந்து கிளம்பி, வாஷிங்டன் வந்து சேர்ந்தனர் ஐந்து மணி நேர பயணத்தில். இரவு அறைக்கே சாப்பாடு வரவழைத்தான் அபிமன்யு. சாப்பிட்டு முடித்த பின்.....

“சரி சொல்லுடா, உனக்கு  எப்பொழுதில் இருந்து  என்னை பிடிக்கும்?” என்று ஆரம்பித்தான்.

“எனக்கு கால் ரொம்ப வலிக்குது அபி,  வாட்கின்ஸ் இல் அவ்வளவு தூரம் நடந்ததால், எனக்கு தூக்கம் வருது. ப்ளீஸ் நாளைக்கு சொல்றேனே.” என கெஞ்சலாக கேட்டாள் உத்ரா.

அபி எழுந்து சென்று பெட்டியில் இருந்து ஒரு மாத்திரை எடுத்து வந்து உத்ராவிடம் கொடுத்து, தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தான். வாங்கி சாப்பிட்ட உத்ரா “இன்னும் வலிக்குதே”  என்றாள். அவள் பாதத்தை பிடித்து மெல்ல அமுக்கி விட ஆரம்பித்தான் அபி.

“ஐயோ, என்ன செய்யறிங்க அபி. வேண்டாம் ப்ளீஸ், எனக்கு கால் கூச்சமா இருக்கு” என்று கூறி காலை மடக்கிக் கொண்டாள். “இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிங்களே. ஆனால் என்னோட பாட்டி சொல்வாங்க, ரொம்ப நல்லவனா காண்பித்துக் கொள்ளும் ஆண் பிள்ளையை நம்பக் கூடாது என்று” என்று கூறி முடித்தாள் உத்ரா.

“உன்னோட பாட்டி கதை எல்லாம் விடு, நம்ம கதைக்கு வா. சொல்லு உன்னோட ஒரு தலை விருப்பத்தை” என்று கதை கேட்கும் ஆவலில் படுக்கையில் சாய்ந்து படுத்துக் கொண்டான் அபி.

“ஒரு நாள் பள்ளி விடுமுறைக்கு நான் வசு அத்தை வீட்டிற்கு வந்திருந்த பொழுது நீங்களும் அங்கு வந்து இருந்தீங்க. அப்பொழுது  நான் ஆசையாய் வளர்த்த பூனைக் குட்டி, அத்தை வீட்டில் இருந்த மா மரத்தில் ஏறிவிட்டு , இறங்கத் தெரியாமல் கத்திக் கொண்டு இருந்தது.  நான் அழுததைப் பார்த்து நீங்கள் தான் மெதுவாக மரத்தில் ஏறி, அந்த பயந்த பூனைக் குட்டியை, பிடித்து வந்து என்னிடம் கொடுத்தீர்கள்.” என கனவுலகில் மிதந்தபடி கூறினாள் உத்ரா.

“இதில் என்னடா என்னை பிடிப்பதற்கு இருக்கு? என கேட்டான் அபி.

“எனக்காகத் தான் நீங்கள் மரத்தில் ஏறி சாகசம் புரிந்ததாய்,  நினைத்துக் கொண்டேன் அந்த சின்ன வயதில்.” என்று கூறிய பொழுது அவளது கை பேசி அழைத்தது அவளை.

அவளது அம்மா தான் அழைத்தார்கள். “உத்ரா, உனக்கு ஒரு சர்ப்ரைஸ், நான் இப்பொழுது எங்கு இருக்கிறேன் என்று சொல் பார்ப்போம்” என்று கேட்டார் சுனைனா.

“அம்மா, எங்க வீட்டு வாசலில் இருக்கோம் என்று சர்ப்ரைஸ் கொடுக்காதீங்க, நாங்களே அங்க இல்லை.” என்று கூறினாள் உத்ரா.

“அது தான் எனக்கு தெரியுமே. நானும், அப்பாவும் இங்கு அமெரிக்க தூதரக வாசலில் இருக்கோம். எங்களுக்கு விசா கிடைத்து விட்டது.” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

“எப்பொழுது இங்கு வருகிறீர்கள் அம்மா?” என ஆவலுடன் கேட்டாள் உத்ரா.

“அப்பாவுக்கு தான் உன்னை வந்து பார்க்க வேண்டும் என்று மிக ஆவலாக இருக்கிறது. இரு அப்பாவே உன்னிடம் பேசுகிறார்” என்று கைபேசியை அவரிடம் கொடுத்தார் சுனைனா.

“உத்ரா எப்படிடா இருக்க? என்று கேட்ட அப்பா பால்கியின் குரலில் சந்தோசமே இருந்தது.

“நல்லா இருக்கேன் அப்பா. நீங்களும் அம்மாவும் எப்பொழுது இங்கு வருகிறீர்கள்?

“அடுத்த வாரம் டிக்கெட் எடுக்கலாம் என்று நினைக்கிறேன் உத்ரா. உன்னை திடீர் என்று கல்யாணம் செய்து அனுப்பியதால் ஒரு முறை நேரில் வந்து, நீ சந்தோசமாக தான் இருக்கிறாய் என்று பார்த்தால் தான் எனக்கு மனம் அமைதி ஆகும் உத்ராம்மா” என்று தழுதழுக்க கூறினார் பால்கி.

“அப்பா, நான் சந்தோசமாகத் தான் இருக்கிறேன்.” எனக் கூறிய உத்ராவின் குரலும் உருகித் தான் இருந்தது.

“அதை நானே நேரில் வந்து பார்த்து சந்தோஷப்படத் தான் உத்ராம்மா அங்கு வருகிறோம்.” எனக் கூறி சுனைனாவிடம் போனை கொடுத்து விட்டு காரைக் கிளப்பினார் பால்கி.

நல்ல வேளையாக இப்பொழுது வருகிறார்கள், என்று இருந்தது உத்ராவிற்கு. அந்த மகிழ்ச்சியை அபியிடம் சொல்ல திரும்பிய பொழுது, அவன் நன்கு உறங்கி இருந்தான். பாவம் அவனும் அவ்வளவு தூரம் நடந்து வந்து, பின் இவ்வளவு தூரம் காரும் ஒட்டி வந்தான். அவனுக்கும் அலுப்பாகத் தானே இருக்கும், என்று நினைத்தபடி உத்ராவும் உறங்க தொடங்கினாள்.

று நாள் காலை கிளம்பி, முதலில் வெள்ளை மாளிகையை பார்க்கச் சென்றனர். சற்று தள்ளியே காரை நிப்பாட்டி விட்டு, நடக்க ஆரம்பித்தனர்.

“அபி நேற்று இரவு, அம்மாவும், அப்பாவும் விசா கிடைத்த விபரத்தை கூறினார்கள்.” என்று கூறிய உத்ராவிடம்.....

“அது எனக்கு தெரியும்டா. நான் தான் மாமாவிடம் சொல்லி விசா எடுக்க சொன்னேன். அதை விடு, எனக்கு தெரியாததை சொல்லு. பூனை குட்டி கதைக்கு பின் வேறு என்ன கதை, அதை சொல்லு முதலில்.

சற்று யோசித்த உத்ரா, “ நீங்க ஒரு முறை என்னை நல்லா திட்டினீங்க, அப்போ எனக்கு ரொம்ப பிடித்தது உங்களை.” என்றாள்.

“உன்னை திட்டினேனா? எனக்கு நியாபகம் இல்லையே. அப்படியே திட்டினாலும் உனக்கு கோபம் தானே வரணும். அதில் எப்படி பிடித்தது என்னை?” என்று ஆச்சரியமாகக் கேட்டான் அபி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.