(Reading time: 25 - 49 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 13 - மது

AT THE END OF INFINITY

Heart

செப்டிக் வார்டில் பணியில் இருந்தனர் ஹர்ஷாவும் ஹரிணியும். ஆண்களுக்கு, பெண்களுக்கு  என்று தனித்தனி வார்டுகளாக அருகருகே இருந்தன. முதல் பதினைந்து நாட்கள் ஹர்ஷாவிற்கு ஆண்கள் வார்டிலும் ஹரிணிக்கு பெண்கள் வார்டிலும் என்று பணி அட்டவணை கூறியதை ஏற்று இருவரும் பணிக்கு சென்றனர். ஆண்கள் பிரிவை விட பெண்கள் பிரிவில் குறைந்த நோயாளிகளே இருந்தனர். எனவே தான் ஹர்ஷாவிற்கு அவன் பெண்கள் பிரிவில் பணிபுரியும் சமயம் விடுப்பு அனுமதிக்கப்பட்டிருந்தது.

“ஹரிணி நீ லக்கி தான். கடைசி போஸ்டிங் செப்டிக் வார்டில். ப்ரீ போஸ்டிங் தான். எனக்கு கடைசியிலா லேபர் வார்ட் அமைய வேண்டும்” சங்கீதா அலுத்துக் கொண்டே சொன்னாள்.

“செப்டிக் வார்டை போய் ப்ரீ போஸ்டிங் என்று ஏன் சொல்றா” ரஞ்சனியிடம் சந்தேகம் கேட்டாள் ஹரிணி.

“சீல் வைத்து ரணமாகிப்  போன புண்களுக்கு டிரஸ்ஸிங் செய்வது மட்டும் தான் நம் பணி. மற்றது எல்லாம் சர்ஜரி பிஜி செய்வாங்க” ரஞ்சனி விளக்கம் சொன்னாள்.

முதல் நாள் பணிக்கு சென்ற ஹரிணிக்கு அப்படி ஒன்றும் ப்ரீ போஸ்டிங் இல்லை என்றே தோன்றியது.

நீரழிவு நோயின் காரணமாக gangrene என்று சொல்லப்படும் மதுமேகப் புண், அறுவை சிகிச்சை தொடர்ந்து தொற்றுக் கிருமிகளால் சீல் கோர்த்துக் கொண்ட புண் என பாதிக்கப்பட்ட நோயாளிகளை காண்கையில் மனம் வெதும்பிப் போனாள்.

ரண வேதனை என்னவென்று அங்கு தான் அறிந்தாள்.

“டாக்டரம்ம்மா என் காலை எடுத்துடுவாங்கன்னு நர்ஸ் சொல்றாங்களே. உங்களால சரி செய்திட முடியாதா” நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்.

அந்த நோயாளியின் மருத்துவக் குறிப்பேட்டை பார்த்தவள் நோயின் தீவிரத்தை அறிந்தாள். கால் எடுக்கவில்லை எனில் உயிரே போய்விடும் ஆபாயம் இருந்தது.

இந்த உண்மையை நோயாளிக்குச் சொல்லாமல் இருக்கவும் முடியாது. ஏனெனில் காலை எடுத்துவிட்ட பிறகு நோயாளிக்கு மனஉளைச்சல் மற்றும் பாதிப்புகள் நிறைய வரும். அதை எதிர்கொள்ளும் திடம் நோயாளிக்கு வேண்டும்.  நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமன்றி அவர் உடல் நலத்தோடு மன நலத்துடனும் வாழ வழி செய்வதும் மருத்துவரின் கடமை அல்லவா.  

கால் இல்லை என்றால் அது ஒரு குறையல்ல. செயற்கை கால் பொருத்தி நடனமாடி சாதித்தவர் இல்லையா என பல உதாரணங்கள் மேற்கோள் காட்டி அந்நோயாளிக்கு நம்பிக்கை அளித்து நிதர்சனத்தை உணர்த்தி அவரை  தயார் படுத்தினாள்.

“முன் செய்த வினையின் பலன் தானம்மா. தினம் இரவு கால் பிடித்து விடும் என் மருமகளை இதே காலால் எட்டி உதைத்திருக்கேன். பையன் என் சொல் மீறி ஏழைப் பொண்ணை கல்யாணம் செய்துகிட்டு வந்துட்டான்னு  அவளை இல்லாத கொடுமைகள் செய்தேன்.  இப்போ என் மருத்துவ செலவுக்கே இருந்த பணம் எல்லாம் போச்சு. மருமகள் தான் எனக்கு பணிவிடை செய்து கொண்டிருக்கா. அவளுக்கு நான் இன்னும் பாரம் ஆகி விடக் கூடாதும்மா” கண்ணீருடன் சொன்ன அந்த நோயாளியை தேற்றி விட்டு அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

‘வாழ்க்கை’  பலருக்கு அது மருத்துவமனையின் படுக்கையில் தான் புரிபடுகிறது. பிணியும் அதன் வலியும் எவ்வித பேதமும் அறியாது. என்ன பணம் படைத்தவன் அதே வலியை குளிரூட்டப்பட்ட ஸ்பெஷல் அறையில் அனுபவிக்கிறான். இல்லாதவன் பொது மருத்துவமனையின் வார்டில் உணர்கிறான்.

மனிதன் தோன்றிய காலம் தொட்டே நோயும் அதன் வலிகளும் உடன் பயணித்துக் கொண்டே தான் இருக்கின்றன. நவீன மருத்துவ முறைகள் எத்தனை வந்தாலும் புதிது புதிதாக பிணிகளும் தான் பிறவி எடுக்கின்றன.

ஹரிணி மற்ற நோயாளிகளுக்கும் உரிய சிகிச்சை அளித்து விட்டு அங்கே இருந்த குறிப்பேட்டில் கையெழுத்து இட்டு தனது லாக் புக்கிலும் பதிவு செய்தாள்.

“நானும் இங்க இருபது வருஷமா வொர்க் செய்றேன். எத்தனையோ பயிற்சி மருத்துவர்களை பார்த்திருக்கேன். அந்த பேஷன்ட்டிடம் நீங்க உண்மையான நிலைமையை எடுத்துச் சொன்ன விதம், உங்க பொறுமையான அணுகுமுறை  இப்படி  ஒரு மெச்சியூர்ட் ஹவுஸ் சர்ஜன் இப்போ தான் பார்க்கிறேன். இப்படியே எப்போவும் இருங்க டாக்டர்” அங்கே தலைமை பொறுப்பில் இருக்கும் செவிலியர் கூற ஒரு புன்னகையுடன் நன்றி சொல்லிவிட்டு ஆண்கள் பிரிவில் எட்டிப் பார்த்தாள். ஹர்ஷா அங்கு இல்லாது போகவே தனது விடுதி அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்தாள்.

“ஹரிணி ஹாய்” வழியில் முரளி அவளை எதிர்கொண்டான்.

“ஹாய் முரளி, எப்படி போயிட்டு இருக்கு உன்னோட போஸ்டிங்”

“ஒன் மந்த் தான் ஓடிப் போயிடும். நீ இன்டர்ன் முடிச்சிட்டு என்ன செய்யலாம்னு இருக்க” ஹரிணியிடம் வினவினான்.

“கொஞ்ச நாளைக்கு ஏதேனும் ஹாஸ்பிடலில் மெடிகல் ஆபிசராக சேர்ந்து வொர்க் செய்துட்டு கூடவே பிஜி எக்ஸாம்க்கு தயார் செய்யணும்” ஹரிணி கூற முரளியும் தன்னுடைய முடிவும் அதுவே என தெரிவித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.