(Reading time: 25 - 49 minutes)

முதன்முறை ஒரு ஆணின் அறைக்குள் நுழைகிறோம் என்ற தயக்கம் அவள் மனதிலும் இல்லை. முதல் முறையாக ஒரு பெண் அவனது அறைக்குள் பிரவேசம் செய்கிறாள் என்ற சங்கடம் அவனுக்கும் இல்லை.  அவள் தந்தை இருக்கும் அறைக்குள் நுழைய அவள் என்றேனும் தயக்கம் கொண்டதுண்டா. இல்லை  அவன் அறைக்குள் அவனது அன்னை வருவதை அவன் சங்கடமாகப்  பார்த்ததுண்டா.

அங்கிருந்த விடுதி அறைகள் எல்லாம் ஒரே மாதிரி அமைப்பை கொண்டவை தான். ஆனால் ஹர்ஷா அவனது அறையில் சகல வசதிகளும் செய்திருந்தான்.

கீழே கார்பெட் , டிவி, குட்டி ப்ரிட்ஜ், சிறிய வாசிங் மெஷின், ஏசி, கம்பியூட்டர் என அது உண்மையில் இளவரசனின் அறையாக தான் தோற்றம் அளித்தது.

ஆனால் அதில் எதிலும் ஹரிணியின் பார்வை பதியவில்லை.

அங்கிருந்த போம் மெத்தையில் இழுத்து போர்த்திக் கொண்டு படுத்திருந்தவன் தான் கண்ணுக்குத் தெரிந்தான். அவனருகில் இருந்த மேஜையில் மதியம் அரைகுறையாய் சாப்பிட்ட  மெஸ் தட்டு, ஒரு பெப்சி பாட்டில் இருந்ததையும்  கவனித்தாள்.

ஏசி ஓடிக் கொண்டிருக்க குளிருக்குப் போர்த்திக் கொள்ளும் ரஜாயில் சுருண்டிருந்தான்.

நேராக அவனருகில் சென்று அவன் நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள். அனலாய் கொதித்தது.

“நாக்கை நீட்டு” அவனிடம் கூறிக்கொண்டே அவன் கைகளை உயர பிடித்து பல்ஸ் பார்த்தாள். அவன் இதயத்துடிப்பு வேகமாக  தீனமாக இருந்ததை அறிந்தவள் அவனிடம் எப்போதிருந்து இப்படி இருக்கிறது என்று கேட்டாள். அவன் நேற்று மதியத்தில் இருந்தே வயிறு சரியில்லை. இரவில் ஜூரம் பிடித்துக் கொண்டது என்று பதில் சொன்னான்.

“அறிவிருக்கா உனக்கு. நீயெல்லாம் டாக்டரா” அவள் போட்ட சத்தத்தில் சீனுவும் மிரண்டு போய்விட்டான்.

நல்ல வேளை அவளது குரல் வெளியில் யாருக்கும் கேட்க வாய்ப்பில்லை.

“ஏன் என்னாச்சு” அவள் ஏன் இவ்வளவு கோபம் கொள்கிறாள் என்று அவனுக்குத் தெரியவில்லை.

“நேற்றிலிருந்து இப்படி இருக்கு. முழுசா டி ஹைடிரெட் ( உடம்பில் நீர் சத்து குறைந்து போவது) ஆகியிருக்க. எமர்ஜன்சி போகாம  இங்க ஏசி போட்டுட்டு இழுத்து போர்த்திகிட்டு படுத்துட்டு இருக்க.  உன் வார்டிலும் நீ வரலைன்னு தகவல் சொல்லலை” அவள் குரலில் இப்போது கோபம் குறைந்து ஆற்றாமை தொனித்தது.

“மானு கிட்ட போன் செய்து உனக்கு சொல்ல சொன்னேனே. எனக்கு பீவர், இன்னிக்கு என்னோட வார்டை  ஹரிணியை பார்த்துக்க சொல்லுன்னு அவள்கிட்ட சொன்னேன். மத்தபடி டேப்லட் போட்டா சரியாகிடும்னு நினச்சேன்”

“எப்போ சொன்ன ரஞ்சனிகிட்ட”

“நைட் ஒரு ஒன்பது மணியிருக்கும். வெளியிலே இருக்கேன். அறைக்குப் போனதும் சொல்றேன்னு சொன்னாள்” அவன் சொல்ல இப்போது ஹரிணிக்கு ரஞ்சனி மேல் கோபம் வந்தது. அவளது கவனம் இப்போதெல்லாம் மிகவும் அலைபாய்ந்து கொண்டிருப்பதை உணர்ந்தாள்.

“சிவியர் புட் பாய்சனிங் ஆகியிருக்கு உனக்கு. வா எமர்ஜன்சி போகலாம். உன்னால எழ முடியுமா, இல்லை வேறு யாரையேனும் கூப்பிடவா ஹெல்ப்க்கு” என்று அவள் சொல்ல அவன் தலையசைத்து மறுத்தான்.

“எமர்ஜன்சி போனா அட்மிட் செய்திடுவாங்க. அஞ்சு நாளைக்கு ஆண்டிபயாடிக் போடுவாங்க. லீவ் எடுக்க முடியாதுன்னு உனக்குத் தெரியுமே. நான் டேப்லட் போட்டுட்டு நாளைக்கு வார்டுக்கு வந்திடுறேன்” அவளிடம் பேசிக் கொண்டே இருந்தவன் பாத்ரூமிற்கு விரைந்தான்.

ஹரிணிக்கும் அது சற்று சிக்கலானது என்று புரிந்தது. ஹவுஸ் சர்ஜன் பயிற்சி காலத்தில் மாதம் ஒரு நாள் கணக்கில் பன்னிரண்டு நாட்கள் விடுமறை இருந்த போதும் ஒரே போஸ்டிங்கில் பத்து  நாட்களுக்கு மேல் விடுமுறை எடுத்தால் நீட்டிப்பு அளித்து விடுவார்கள்.  ஏற்கனவே ஹர்ஷா அமெரிக்கா செல்ல ஏழு நாட்கள் விடுப்பு எடுக்கவிருந்த நிலையில் அவன் மேற்கொண்டு ஐந்து நாட்கள் விடுப்பு எடுத்தான் எனில் எக்ஸ்டென்சன் அளிக்கப்படும்.

ஹர்ஷாவிற்கு அவ்வறு நீட்டிப்பு அளிக்கப்படுமானால் அவன் அமெரிக்கா சென்று மேற்படிப்பு மேற்கொள்வதில் சிக்கல்கள் எழலாம் . அவள் இவ்வாறு யோசித்துக் கொண்டிருந்த போதே தளர்ந்த நடையோடு வெளியே வந்தான் ஹர்ஷா.  அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தாள் அவள்.

அங்கிருந்த மேஜையில் ஒரு பேப்பர்  பேனாவை எடுத்து மளமளவென அதில் ஏதோ எழுதினாள்.

“சீனு  மெஸ்ல தனியா கஞ்சி சாதம் வைச்சு தருவாங்களா”

“தெரியலக்கா. மாஸ்டர் கிட்ட தான் கேட்கணும். பிரின்ஸ் அண்ணா கிட்ட தான்  கரண்ட் அடுப்பு இருக்கே, இதுலேயே செய்யலாமே” என்று அங்கே பால்கனி பக்கமாய் கையை நீட்டினான்.

அங்கு மாடுலர் கிச்சனே இருந்தது. இன்டக்ஷன் அடுப்பு, மைக்ரோவேவ், ஜூசர், சான்ட்விச் டோஸ்டர் என்று அவள் இது வரை கண்டிராத பொருட்கள் இருந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.