(Reading time: 25 - 49 minutes)

சிறிது நேரம் இருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.

“ஆங் சொல்ல மறந்துட்டேனே. சர்ஜரி ஹெட் லீவ்ல போயிருக்காராம். துரை சார் தான் ஆக்டிங் ஹெட். உங்க செப்டிக் வார்டும் சார் தான் இன் சார்ஜ்ன்னு  சர்குலர் போட்டிருக்காங்க”

“அப்படியா, அப்போ சார் கிட்ட தான் லாக் புக் சைன் வாங்கணுமா”

“ஆமாம் ஆனால் உனக்கு என்ன கவலை. நீயும் ப்ரின்சும் தான் சாருக்கு பிடித்தமானவர்கள் ஆயிற்றே”  அவன் குரலில்  சிறிதளவு பொறாமை கலந்து ஒலித்ததை  ஹரிணி கவனித்தாலும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அவனோடு சிறிது நேரம் உரையாடி விட்டு தனது அறைக்குத் திரும்பினாள்.

அவள் உள்ளே வந்த சிறிது நேரத்தில் ரஞ்சனி வெளியே கிளம்பி விட்டாள். இப்போதெல்லாம் அவள் அறையில் தங்குவதே இல்லை. அவ்வப்போது யாரேனும் அவளைத் தேடி அறைக்குள் பிரவேசம் செய்து சிறிது புரளி பேசிவிட்டு செல்வதை தான் அவள் வெகுவாக வெறுத்தாள்.

ஹரிணி  இதை எல்லாம் கண்டுகொள்வதில்லை தான். ஆனாலும் உள்ளுணர்வு என்று ஒன்று இருக்கிறதே. ரஞ்சனியின் செயல்பாடுகளையும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறாள்.

நட்பிற்கு ஓர் எல்லை உண்டு, அதே சமயம் நட்பிற்கு பொறுப்பும் உண்டு. ரஞ்சனியின் தனிப்பட்ட செயல்பாடுகளில் தலையிடுவது, அதிலும் உண்மை யாதென தீர அறியாமல் ஏதேனும் முடிவிற்கு  வருவது சரியன்று. அதே சமயம் தோழிக்கு தீமையாக முடியும்  என அறிந்த போதும்  தக்க சமயத்தில் அறிவுறுத்தாமல் போவதும் நல்ல நட்பிற்கு அழகன்றே.

ஏனோ அவள் மனம் இன்று மிகவும் பாரமாக இருந்தது. எதனால் இப்படி உணர்கிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை. தான் இன்னும் கைப்பேசி வாங்கிக்கொள்ளவில்லை என்ற போதும் அன்னைக்கு ஒன்றை வாங்கித் தந்திருந்தாள்.

கீழே சென்று பொது தொலைபேசியில் அன்னையை அழைத்து நலம் விசாரித்து அனைவரும் சுகமே என அறிந்து அமைதி அடைந்தாள். ஆனாலும் ஏனோ இன்னும் முழுமையாக நிம்மதி ஏற்படவில்லை. ஓர் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு அதில் மூழ்கினாள்.

இரவு நேரம் சென்றே அறைக்குத் திரும்பினாள் ரஞ்சனி.  சாப்பிட்டாயா என்று ஹரிணி கேட்க வெளியிலேயே சாப்பிட்டுவிட்டதாக சொல்லி படுக்கையில் சாய்ந்தாள்.

இந்த வார இறுதியில் அவளிடம் பேச வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டாள் ஹரிணி.

மறுநாள் வழக்கம் போல தனது பணிக்கு சென்று வேலைகளை எல்லாம் முடித்து விட்டு ஆண்கள் பிரிவில் எட்டிப் பார்க்க அன்றும் ஹர்ஷா தென்படவில்லை. இவளைப் பார்த்ததும் அங்கே பொறுப்பில் இருந்த சரளா சிஸ்டர்  இவளை நோக்கி விரைந்து வந்தார்.

“டாக்டர் இன்னிக்கு ப்ரின்ஸ் டாக்டர் வரலை. நேற்றும் அவசரமாய் முடித்துவிட்டு போயிட்டார். சின்ன டிரஸ்ஸிங் எல்லாம் நானே செய்துட்டேன். சர்ஜரி முடித்த பேஷண்ட்ஸ்க்கு டாக்டர்ஸ் தான் செய்யணும். நீங்க கொஞ்சம் இன்னிக்கு செய்துவிடுவீங்களா” நர்ஸ் சொல்ல ஹரிணி அவரிடம் மருத்துவ குறிப்பேட்டை எடுத்து வருமாறு பணித்தாள்.

“அவனுக்கு என்ன பேரா இல்ல, அதென்ன பிரின்ஸ் டாக்டர். எங்க போய் தொலைந்தான். எப்போவுமே இப்படி செய்ய மாட்டானே. வரவே இல்லைன்னு நர்ஸ் சொல்றாங்க. என்கிட்டயாச்சும் தகவல் சொல்லியிருக்கலாம் தானே” மனதில் அவளை வறுத்து எடுத்தவள் அவனது வார்டின் பணிகளையும் முடித்து விட்டு விடுதி திரும்ப நான்கு மணி  ஆகி விட்டது.

அவளது அறைக்கு வந்தவள் குளித்து விட்டு நேராக மெஸ் சென்றாள். அவளிடம் காபித் தூள் தீர்ந்து போயிருந்தது. மெஸ்ஸில் காபி கிடைக்குமா என்று பார்க்க சென்றாள்.

மெஸ் மூடி இருந்தது. ஐந்து மணிக்குத் தான் மாலை சேவைகள் ஆரம்பம் ஆகும். சீனு இருந்தால் கடைக்குச் சென்று காபி பொடியாவது வாங்கி வரச் சொல்லலாம் என்று எண்ணி அவனைத் தேடினாள். சீனுவையும் அங்கு காணவில்லை.  வெளியே வந்தவள் பக்கவாட்டில் இருந்த ஹர்ஷாவின்  அறையை நோக்கினாள்.

‘வெளிப்பக்கம் பூட்டு தொங்கவில்லை. அப்படி என்றால் அறையில் தான் இருக்கிறானா’ அவள் தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டிருக்கையில் அவனது அறையில் இருந்து சீனு வெளியே வந்தான்.

இவளைப் பார்த்தவன் இவளிடம் ஓட்டமாய் ஓடி வந்தான்.

“அக்கா, பிரின்ஸ் அண்ணா இந்த மெடிசன் வாங்கிட்டு வர சொன்னார். நம்ம சுபம் மெடிகல்ஸ்ல கிடைக்குமா ” அவன் ஒரு காகித துண்டை நீட்டினான்.

அவனிடம் இருந்து அந்த சீட்டை வாங்கிப் பார்த்தாள். அதைப் பார்த்த மாத்திரத்திலேயே என்ன நோய்க்கான மருந்து என்று அவள் அறிந்து கொண்டாள்.  

“உங்க அண்ணா இதை ஏன் வாங்கிட்டு வரச் சொன்னார். யாருக்கு இது” புருவம் சுருக்கினாள் ஹரிணி.

“பிரின்ஸ் அண்ணாக்கு தான், அவருக்கு ஒரே ஜூரம், வயிற்று கோளாறு போலவும் தெரியுது ” அவன் சொல்ல அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஹர்ஷாவின் அறை நோக்கி சென்றாள்.

“ஹர்ஷவர்தன் ” கதவை பலமாக தட்டியபடியே அவனை அழைத்தாள். அவளது குரலை அவன் அடையாளம் கண்டு கொண்டான்.

“கதவு திறந்து தான் இருக்கு. வா” அவனது குரலின் கம்பீரம் குறையாமல் ஒலித்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.