(Reading time: 25 - 49 minutes)

ஒரு வாரத்தில் நன்றாக தேறியிருந்தான். 

“அமெரிக்கா போகும் வரை வெளியில் சாப்பிட வேண்டாம். நான் சமைத்துத் தருகிறேன் ஹரி”

“ஹ்ம்ம் ஒன்று செய், எனக்கு சமைக்க கற்றுக் கொடு. யுஎஸ்ல எல்லாம் நாமே நம் வேலைகளை செய்ய வேண்டுமே”  என்று அவன் சொல்ல அடுத்த ஒரு வாரமும் ஹரிணி சொல்ல சொல்ல ஹர்ஷாவின் நளபாகம் தயாரானது.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள் ஹர்ஷாவிற்கு ப்ளைட்.

இருவரும் தங்கள் வார்ட் பணிகளை விரைவாக முடித்துவிட்டு விடுதிக்கு வந்தனர்.

“பேகிங் எல்லாம் செய்துவிட்டாயா ஹரி”

“என்ன பேக் செய்யணும். டாகுமன்ட்ஸ் மட்டும் தானே”

“ஒரு வாரத்துக்கு ட்ரஸ் எல்லாம் வேண்டாமா, எங்க ஸ்டே? சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும்?”  அவள் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக அவன் புன்னகைத்தான்.

“நியூயார்க்ல எங்களுக்கு ஒரு வில்லா இருக்கு. அங்க எங்களுடைய பணியாளர்கள் எல்லாம் இருக்காங்க.  மற்ற இடங்களில் இன்டர்வியூ போகும் போது அவங்களும் கூட வருவாங்க.  எங்க செக்ரட்டரி எல்லா ஏற்படும் செய்திடுவார்.  ப்ரின்ஸ் ஹர்ஷவர்தன் மூட்டை தூக்காம ஜாலியா போகலாம்”  கேலி ததும்ப அவன் சொல்ல “நான் ஒன்றும்..” என்று ஆரம்பித்தவள் பாதி வாக்கியத்திலேயே நிறுத்திக் கொண்டாள்.

“நீ  ராஜகுமாரன் தான், வருங்கால ராஜா  தான் ஹரி. ஆனால் அது உன் பிறப்பால் வந்த அடையாளம். ராஜா என்றால் மக்களைப் போற்றி பாதுகாப்பவன். தனது பிரஜைகளின் நலம் ஒன்றையே முதன்மையானதாய் கொண்டிருப்பவன். என்று நீ உன் சுயமுயற்சியால் அந்த நிலைக்கு உயர்கின்றாயோ அன்று தான் என் மனம் உன்னை ராஜகுமாரனாக ஏற்கும்” மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

இவர்கள் விடுதிக்கு நுழைந்த பொழுது ஹேமாவும் ஹேமந்தும் எதிர்ப்பட்டனர்.

“அன்று தான்  உதவி செய்ய வரவில்லை. அதன் பின் நலம் விசாரிக்கவேணும் வந்து பார்த்தானா. இப்போது என்னத்துக்கு கை அசைத்து ஹாய் சொல்றான்” ஹர்ஷாவிடம் ரகசியமாய் சொன்னாள்.

“ப்ரின்ஸ் நாளையில் இருந்து நீ லீவாமே, ஜெய்ப்பூர் போறியா. எனக்கு ஒரு ஹெல்ப் வேணுமே” ஹேமந்த் கேட்க ஹரிணிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

“ஜெய்பூர் போகலை. வெகேஷன் போறேன்” மேற்கொண்டு எந்த தகவலும் சொல்லாமல் நிறுத்திக் கொண்டான் ஹர்ஷா.

“ஒஹ் அப்படியா. எனக்கு உன் கம்ப்யுட்டரில் கொஞ்சம் வேலை செய்யணும். உன் ரூம் சாவி குடுத்துட்டு போயேன்” அவன் கேட்க ஹரிணி, ஹர்ஷா என்ன சொல்ல போகிறான் என்று அவனை நோக்கினாள்.

“ரூம் சீனுவின் பொறுப்பில் தான் விட்டுட்டு போறேன். அவனிடம் அனுமதி பெற்று உபயோகித்துக் கொள்”

“சீனுவா. மெஸ்ல வேலை செய்யும் பொடியனா” சந்தேகமாய் கேட்டான் ஹேமந்த்.

“ஆமா அவன் தான்” என்று ஹர்ஷா சொல்லவும் ஹேமந்த் சரி என்று சொல்லி ஹேமாவுடன் விடைபெற்று சென்றான்.

“இப்போ கூட அவன் நீ எப்படி இருக்க அப்படின்னு ஒரு வார்த்தை கேட்கலை, அவனுக்கு வேண்டியதில் தான் குறியாக இருக்கான். அதெல்லாம் கம்ப்யூட்டர்  தர முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே.  எல்லோருக்கும் விழுந்து விழுந்து வேண்டிய உதவி செய்கிறாய்.  உனக்கு ஒரு ஹெல்ப் தேவைப்படும் போது யாரு இருக்கா ” ஆதங்கத்துடன் சொன்னாள்.

நடந்து கொண்டிருந்தவளின் கரம் பற்றி நிறுத்தி அவளது முகத்தை நோக்கி மெதுவாக சொன்னான்.

“நீ இருக்கிறாயே”

முடிவிலியை நோக்கி ...

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1137}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.