(Reading time: 27 - 53 minutes)

தொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 14 - மது

AT THE END OF INFINITY

Heart

ம் அவள் இருக்கிறாள். அவனுக்காக அவள் இருக்கிறாள். இக்கட்டான சூழல்களில் எல்லாம் ரட்சிக்கும் தேவியாக அவனுக்கு அவள் இருக்கிறாள். அவனை ஹரியாக மட்டும் பார்க்கும் அவனது ஹனியாக அவள் இருக்கிறாள். இன்றைய தினத்தில், நிகழ்காலத்தில் அவள் இருக்கிறாள் தான். 

எங்கோ தொடங்கிய அவர்களின் பாதைகள் இங்கே சங்கமித்து பயணித்துக் கொண்டிருக்கின்றன. எது வரை இணைந்தே பயணிக்கக் காத்திருக்கின்றன என்பதை காலம் தான் சொல்லும்.

ஹரிணி வழக்கம் போல தனது பணிகளை செய்து கொண்டிருந்தாள். இன்னும் பத்தே நாட்கள் தாம். அதன் பிறகு அவள்  டாக்டர் ஹரிணி வைதேகியாகி விடுவாள்.

பணியில் இருந்து விடுதிக்கு அப்போது தான் திரும்பியிருந்தாள். அன்று அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

அவளுக்கு வேலை கிடைத்து விட்டிருந்தது. டாக்டர் மீனலோசினி தான் அவளது வேலைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பகுதி நேர ஷிப்ட் பணி , கூடவே நல்ல சம்பளமும்.   இன்னொரு ஷிப்ட்டிற்கும் டாக்டர் தேவை என்றறிந்தவள் முரளியை பரிந்துரை செய்தாள்.

அவள் விடுதிக்கு திரும்பிய போது சீனு ஹர்ஷாவின் மொபைல் போனை வைத்துக் கொண்டு மெஸ்ஸின் வாசலிலேயே காத்திருந்தான்.

“அக்கா பிரின்ஸ் அண்ணா போன் செய்திருந்தாங்க, உங்ககிட்ட பேசணுமாம், மொபைல் உங்ககிட்ட தர சொன்னாங்க” என்று அவளிடம் மொபைலை கொடுத்து விட்டு சென்றான்.

“மொபைலை இங்கேயே வைத்து விட்டு போயிட்டானா, இப்போ எதுக்கு கால் செய்யறான். நாளை திரும்பி வர போகிறானே” என்று யோசித்தபடி அறைக்குள் நுழைந்ததுமே மொபைல் சிணுங்கியது.

“ஹலோ” என்று இவள் ஆன் செய்து முகமன் கூற “ஹனி” என்ற  ஆழ்ந்த குரல் அவள் செவிகளில் பாய்ந்தது.

 “ஹரி உன் வாய்ஸ் ரொம்ப டீப் வாய்ஸ், போன்ல உன் குரலை கேட்கும் போது தான் கவனிக்கிறேன். நீ பாடினா ரொம்ப நல்லா இருக்கும். உனக்குப் பாடத் தெரியுமா”

மறுமுனையில் அவன் சிரிப்பது அவளுக்குக் கேட்டது.

“ஏன் சிரிக்கிற” இவள் சந்தேகமாய் கேட்டாள். தான் என்ன சொல்லிவிட்டோம் என்று இப்படி சிரிக்கிறான் என்று யோசித்தாள்.

“ஒரு சிங்கரைப் பார்த்து பாடுவியான்னு கேட்டுடியே” அவன் பலமாய் சிரித்தான்.

“என்னைக் கலி தீர்த்தே உலகில் ஏற்றம் புரிய வந்தாய்” போனிலேயே பாடினான்.  

ஓரிரு மணித்துளிகள் அவளிடம் நீடித்தது மௌனம். பின் மெல்லிய குரலில் அவள் அவனிடம் கேட்டாள்.

“ஹரி இங்க வந்தததும் எனக்கு முழு பாட்டும் பாடுவியா”

உலகத்தின் தலைசிறந்த பல்கலைகழகங்களில் ஒன்றான ஹாவர்ட்டில் அறுவை சிகிச்சை பிரிவில் மேற்படிப்பு படிக்க தேர்வு பெற்றிருந்த மகிழ்ச்சியை அவளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டியே  அவன் போன் செய்திருந்தான். ஆனால் அதை விட அதிகமான சந்தோஷத்தை அவனுக்கு அவள் தந்து விட்டிருந்தாள்.

உன் பாடல் நன்றாக இருக்கிறது, ஆஹா ஓஹோ என்றெல்லாம் அவள் சொல்லவில்லை தான். மாயக்கண்ணன் குழல் போல மயக்கும் உன் குரல் என மற்றவரைப்  போல அவள் பாராட்டி விடவில்லை தான். ஆனாலும் அவனிடம் முதல் முறையாக எனக்கு  இதை செய்கிறாயா என்று கேட்டிருக்கிறாள்.

“கண்டிப்பா பாடுறேன் ஹனி” என்று மட்டும் அவளிடம் சொன்னான். கூடவே ஹாவர்டில் தேர்வு பெற்றதையும் தெரிவித்தான்.

“ஹாவர்ட் தான் ஹாப்பியா இருக்கணும் ஏன்னா அங்க படிக்க நீ அதை சூஸ் செய்திருக்க” அவள் சொல்லவும் அவன் ஒரு கணம் ஸ்தம்பித்துப் போனான். ஒரு மணி நேரம் முன் அவன் அன்னையிடம் அவன் தெரிவித்த போது கிட்டத்தட்ட இதே வார்த்தைகளை தான் அவரும் சொன்னார்.

இரண்டு நாட்கள் கழித்து நிறைய பரிசுப்பொருட்களோடும் சாக்லேட் டப்பாக்களோடும் வந்து சேர்ந்தான் ஹர்ஷவர்தன்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அவனோடு பயணித்த நண்பர்கள், பேராசிரியர்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மற்றும் விடுதியில் பணிபுரிவோர், வார்டில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் என அனைவருக்கும்  இனிப்புகளையும் சிறு சிறு பரிசுகளையும் கொடுத்து தனது நன்றியை தெரிவித்தான்.

அவன் ஹாவர்டில் தேர்வு பெற்றதை அனைவரும் பெருமையாக பேசியது ஒரு புறம் என்றால் அவனது பரிசுகள் பற்றிய அலசல்கள் தாம் அதிகமாக இருந்தன.

“உனக்கும் பெர்பியூம் தானா” சங்கீதா ரஞ்சனியிடம் கேட்டுக் கொண்டிருந்த போது தான் ஹரிணி உள்ளே வந்தாள்.

“கர்ல்ஸ் எல்லோருக்கும் பெர்பியூம்  அண்ட் சாக்லேட்ஸ் தான். பசங்களுக்கு கூலர்ஸ் பெர்பூம் வேலேட்ன்னு வகை வகையா கிப்ட் கிடைச்சிருக்கு” ரேவதி கூடுதல் தகவல்களை தந்து கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.