“இவள் என் அண்ணன் மகள், ஸ்வாதிகா” சாரதா அவளை அறிமுகம் செய்து வைக்க அனைவருக்கும் நமஸ்தே என்று கரம் கூப்பினாள் ஸ்வாதிகா.
ஸ்வாதிகாவிற்கு தமிழ் தெரியாது என்பதால் ஆங்கிலத்திலேயே உரையாடினார்கள்.
சாரதாவின் புடவையும் ஹரிணியும் புடவையும் ஒரே மாதிரி இருக்கிறது என்ற தனது ஆச்சரியத்தை வெளிப்படையாக சொன்னாள் ஸ்வாதிகா.
ராஜவர்தன் ஹர்ஷாவை சாரதா கருவில் சுமந்து கொண்டிருந்த போது வளைகாப்பிற்காக வாங்கிக் கொடுத்த புடவை. ஹர்ஷாவை தனது மடியில் முதன்முதலில் ஏந்திக் கொண்டதும் இந்தப் புடவை தான். அதே சிவப்பு கரையிட்ட பச்சை வண்ண காட்டன் புடவையில் முதன்முறை ஹரிணியைப் பார்த்த போது தான் அவளில் அவன் அன்னையைக் கண்டான்.
“இந்தப் புடவையை அணிந்து கொண்டிருப்பது என் கணவர் உடன் இருப்பது போல் ஒரு உணர்வு, இவன் டாக்டராக வேண்டும் என்பது அவரின் கனவு” சாரதா விளக்கம் சொன்னார்.
ஹரிணிக்கும் அவள் அணிந்திருந்த புடவை மிகவும் முக்கியானது தான். அவள் தந்தை அவளுக்கு என பார்த்து பார்த்து வாங்கிப் பரிசளித்த முதல் புடவை. எப்போதும் ஏதேனும் முக்கிய நிகழ்ச்சி என்றால் அதை தான் அணிந்து கொள்வாள்.
“சாரும்மா அக்காவைப் போல ஹர்ஷா அண்ணாவும் நீங்களும் மேட்சிங்” என்று ப்ரீத்தி சொன்ன போது தான் ஹர்ஷா ஸ்வாதிகா இருவரும் ஒரே வண்ணத்தில் உடை அணிந்திருப்பதை கவனித்தனர்.
“ஷாஸாவோட செலக்ஷன் இந்த சாரீ” ஸ்வாதிகா சொல்ல சாரதா ஹரிணியைப் பார்த்து புன்னகைத்தார்.
“அவனுக்கு இந்த நீல நிறம் என்றால் மிகவும் பிடித்தம். ஆகாயம் கடல் இரண்டின் வண்ணம்” என்றார்.
அதே வண்ணத்தை அவனுக்காக ஹரிணி தேர்வு செய்த போது ஹர்ஷா அவளிடம் தெரிவித்திருப்பான் என்றே நினைத்தார். ஆனால் ஹர்ஷா அவரிடம் அவள் பரிசளித்த ஷர்ட்டை காட்டி ஆச்சரியம் கொள்ளவே அவர்களின் ஒத்த எண்ண அலைவரிசை கண்டு வியந்தார்.
ஸ்வாதிகா சிறுபிள்ளையில் சாரதாவிற்கு உரிய மரியாதையை செலுத்த தவறியதை எண்ணி மிகவும் வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கோரியது ஹர்ஷாவை மிகவும் நெகிழ்த்தி இருந்தது.
மாளிகையில் பெரிய ராணி உட்பட அனைவரும் சாரதாவை மதிப்பாக வைத்திருந்ததும் ஹர்ஷாவிற்கு மிகுந்த மனநிறைவை கொடுத்திருந்தது.
ஸ்வாதிகாவை தனது பட்டமளிப்பு விழாவிற்கு வருமாறு அவன் தான் அழைத்திருந்தான். அவளது ஷாஸா அவனாக முதல் முறை அழைத்ததும் இல்லாமல் அவளுக்கு ஆடை ஆபரணங்களையும் பரிசளித்தது அவளுக்கு மிகுந்த ஆனந்தம்.
ராஜகுடும்பங்களில் இப்படி பரிசுகள் கொடுப்பது வழக்கம் எனும் போதும் ஹர்ஷா அவனாகவே தேர்வு செய்திருந்தான் என்று அறிந்தவள் ஆகாயத்தில் மிதந்தாள்.
குடும்பத்தினர் அனைவரையும் அரங்கத்தில் அமர செய்துவிட்டு தங்களது இருப்பிடத்திற்கு சென்றனர் ஹர்ஷாவும் ஹரிணியும்.
பெயர் வரிசைப்படி அமர்ந்திருந்தபடியால் ஹர்ஷா ஹரிணி இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். விழா தொடங்கவிருக்க இன்னும் சில மணித்துளிகள் இருந்த போது ஹர்ஷா ஏதோ ஹரிணியிடம் சொல்ல அவள் ஹர்ஷா புறம் சற்றே சாய்ந்தாள். அவர்கள் இருவரையும் கண்ட சாரதாவின் மனம் ஓர் அமைதியில் நிறைந்தது.
தனதருகில் அமர்ந்திருந்த ஸ்வாதிகாவை அவர் நோக்க அவளோ எந்த வித சலனமும் இன்றி புன்னகையும் பூரிப்புமாய் அவர்களைப் பார்த்திருந்தாள்
ஹர்ஷாவின் பால் சிறுவயதில் இருந்தே ஸ்வாதிகா கொண்டிருக்கும் பிரேமை அவர் அறியாமல் இல்லை. அதே சமயம் மகனும் அவள் மேல் ப்ரியம் கொண்டிருப்பதையும் அறிவார். ஆனால் ஹரிணி மேல் மகன் என்ன மாதிரியான உணர்வைக் கொண்டிருக்கிறான் என்று அவருக்குமே புரியாத புதிராக தான் இருந்தது.
ஸ்வாதிகா இன்று அழகாய் உடுத்திக் கொண்டு வந்த போது மகனின் கண்களில் அந்த மின்னலும் அதே சமயம் ஹரிணியைப் பார்த்ததும் அவன் முகத்தில் தெரிந்த ஓர் அமைதியான நிறைவும் அவரை மிகவும் குழப்பியது.
காலம் தான் அனைத்திற்கும் பதில் சொல்லும் என விழாவில் கவனம் செலுத்தினார்.
மருத்துவர்களின் பட்டமளிப்பு விழா என்பதால் அந்தத் துறையில் உயர்ந்த நிலையில் இருந்த சிறந்த மூத்த மருத்துவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பட்டிருந்தனர்.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை எல்லாம் முடிந்து புதிதாக பட்டம் பெற்று சமுதாயத்தில் இனி சேவை புரிய இருக்கும் மருத்துவர்களை வாழ்த்தி சிறப்பு விருந்தினர்கள் உரை ஆற்றினர்.
அனைவருக்கும் பட்டம் அளிக்கும் சம்பிரதாயம் தொடங்கியது. ஒவ்வொரு பெயராக மேடைக்கு அழைக்க பலத்த கைதட்டல்களின் நடுவில் தங்கள் கனவு நனவாகும் அந்தத் தருணத்தைப் பொக்கிஷமாய் உணர்ந்தனர்.