“ஹரிணி நீ தான் பிரின்ஸ்ஸோட டேபிள் மேட், யூனிட்,மேட் ஆச்சே, உனக்கு என்ன கிப்ட் குடுத்தான்” சங்கீதா கேட்க ஒரு புன்னகையை மட்டும் பதிலாய் தந்து விட்டு அவசரமாய் வேறு உடை மாற்றி அறையை விட்டு வெளியேறினாள்.
“மூணு வாரம் முன்னாடி பிரின்ஸ்க்கு உடம்பு சரியில்லாம போச்சாமே, ஹரிணி தான் அவனுக்கு ஹெல்ப் செய்தாள்ன்னு ஹேமா சொன்னா. முன்னாடி எல்லாம் எலியும் பூனையுமா இருப்பாங்க, இப்போ செட் ஆகிட்டாங்களா என்ன” சங்கீதா சந்தேகமாய் கேட்டாள்.
“அதெல்லாம் இருக்காது. இப்போவும் ஏதாவது பதில் சொன்னாளா பாரு. அவ மாறவே இல்ல. பிரின்ஸ் யுஎஸ் போய்ட்டா இவ யாருன்னே மறந்திடுவான்” ரேவதி மறுத்துச் சொன்னாள்.
அவர்கள் இவ்வாறு விவாதம் செய்து கொண்டிருந்த போது ஹர்ஷவர்தன் சாஷ்டாங்கமாய் பாண்டிதுரை மீனலோசினி இருவரின் பாதங்களைப் பணிந்து வணங்கினான்.
முன்னதாக அவர்கள் வீட்டிற்கு வர அனுமதி வேண்டியிருந்தான். ஹரிணியோடு அவர்கள் இல்லம் சென்று அவர்களின் ஆசிகளைப் பெற்றான்.
ஹர்ஷா ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை, பூ, பழம் இனிப்புகள் மற்றும் கிப்ட் பேப்பர் சுற்றிய ஒரு சிறு பேழை சகிதம் வைத்து இருவரிடமும் கொடுத்தான்.
அவன் கொண்டு வந்திருந்த பரிசுப் பேழையில் ஸ்கேல்பல் எனப்படும் சர்ஜரி செய்ய உதவும் கத்தியும் அதிநவீன ஸ்டேதேஸ்கோப்பும் இருந்தன.
அவன் ராஜவம்சத்தை சேர்ந்தவன், ராஜகுமாரன். இவ்வளவு பணிவோடு குருவணக்கம் செலுத்துவான் என்று எதிர்பார்க்காத பெரியவர்கள் இருவருக்கும் ஆச்சரிய பூரிப்பு. நிறைந்த ஆசிகளை வழங்கினர். அவர்கள் மனநிறைவைக் கண்டு ஹரிணி தான் அதிகம் மகிழ்ந்தாள்.
“எவன் ஒருவன் மாதா பிதா குருவை மனதார மதித்து வணங்குகிறானோ அவனுக்கு வாழ்க்கையில் எப்போதும் நன்மைகளும் வெற்றிகளும் தேடி வரும்” ஹர்ஷாவை பார்த்தபடி மனம் நிறைந்தாள்.
அந்த நொடி அவளுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
‘மாதா பிதாவாக என் அம்மா அப்பாவை மதித்து போற்றுகிறேன் தான், ஆனால் என்னைக் கருவில் ஈரைந்து மாதம் சுமந்து தன்னுயிர் கொடுத்து ஈன்ற தாயை நினைத்துப் பார்க்கவில்லையே. உயிர் கொடுத்த தந்தையை எண்ணவில்லையே. எந்த சூழலில் நான் தத்தெடுக்கப் பெற்றேன் என்று அறியாத போது என் பெற்றவர்களைப் பற்றிய தேடல் இல்லை எனும் போதும் இந்த உலகத்திற்கு என்னை கொண்டு வந்து சேர்த்தமைக்கு, பாரதி ஜெயராஜன் மகளாய் நான் வளர காரணமாய் இருந்தவர்களுக்கு மனதினிலாவது நன்றி செலுத்த வேண்டுமே, ஹரி நீ அறியாமலேயே எனக்கு மாபெரும் நன்மையை செய்திருக்கிறாய் தெரியுமா’ அவள் ஹர்ஷாவை பார்த்தபடியே சிந்தனையில் ஆழ்ந்து விடவும் தனது முழங்கையால் அவளது தோளை லேசாக இடித்து நனவுக்கு இழுத்து வந்தான்.
இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களது பட்டமளிப்பு விழா நடைபெற இருந்த நிலையில் அவர்களின் டீனாக டாக்டர் பாண்டிதுரை பதவி உயர்வு பெற்றது குறித்து ஹர்ஷா ஹரிணி இருவருமே மகிழ்ந்தனர்.
பட்டமளிப்பு விழா கூடவே ஜூனியர் மாணவர்கள் சீனியர்களுக்கு பேர்வெல் கொடுக்கும் பார்ட்டி என்று கல்லூரி களை கட்டியது.
பட்டமளிப்பு விழாவிற்கு என்று சில விதிமுறைகள் இருந்தன. கல்லூரியின் அரங்கத்தில் நடைபெறுவதால் ஒரு பட்டம் பெரும் மாணவருக்கு நான்கு விருந்தினர் அனுமதி சீட்டு தான் வழங்கப்படும்.
ஹரிணி தனது குடும்பத்தினர் அனைவரும் பட்டமளிப்பு விழாவிற்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அவளது பெற்றோர் தங்கைகள் என ஐந்து அனுமதி சீட்டுகள் வேண்டியிருந்தன.
யாரிடமாவது கேட்கலாம் தான், ஆனால் எப்படிக் கேட்பது என்று குழப்பமாக இருந்தாள்.
“ஹனி நான் ரூம் ஷிப்ட் செய்றேன். அம்மா கிராஜுவேஷனுக்கு வருவதால அடையாரில் இருக்கும் எங்க பங்க்லோவிற்கு திங்க்ஸ் எல்லாம் ஷிப்ட் செய்துட்டு அங்கேயே இருக்க போறேன்” ஹர்ஷா அவளிடம் வந்து சொன்னான்.
பட்டமளிப்பு விழா வரை அங்கே விடுதியில் தங்கிக் கொள்ள அனுமதி இருந்தது.
“உனக்கு அடையாரில் வீடு இருக்கா” ஹரிணி அவனைப் பார்த்து கேட்டாள்.
“நான் இங்க ஜாயின் செய்யும் போதே எனக்கு ஹாஸ்டலில் இருக்க சிரமமாக இருந்தால் தங்க வீடு வேண்டும்னு என் தாதாஸா ஒரு பங்க்லோ ஏற்பாடு செய்திருந்தார். அது சும்மா பூட்டியே இருந்தது. இப்போ எப்படியும் இங்க நாம காலி செய்தாகணும் அதனால அங்க இப்போவே ஷிப்ட் செய்திடலாம்னு இருக்கேன்” ஹர்ஷா விளக்கம் சொன்னான்.
“அப்போ சரி ஹரி நான் உன்னை பங்க்ஷன்ல பார்க்கிறேன்” புன்னகையோடு சொன்னாள்.
“என்ன இப்போவே டாட்டா சொல்ற. நானே உன்கிட்ட ஹெல்ப் கேட்கலாம்னு இருந்தேன்”
“சொல்லு என்ன ஹெல்ப் வேணும். என்னால முடிந்தால் கண்டிப்பா செய்யறேன்” என்றாள்.
ஹர்ஷா அமெரிக்கா செல்லும் முன் தனது அன்னையோடு சிறிது நாட்கள் தனிமையில் இருக்க விரும்பினான். அதனாலேயே அவரை ஒரு வாரம் முன்னதாக வரச் சொல்லியிருந்தான். ஆனால் அவனுக்கு இங்கே நிறைய வேலைகளும் இருந்தன. மெடிகல் கவுன்சிலில் பதிய வேண்டும் கூடவே ஹாவர்டில் சேருவதற்கான ஆவணங்களை தயார் செய்ய வேண்டியிருந்தது.