ஹரிணியின் பெயர் அழைக்கப்பட ஹரிணியின் தங்கைகளோடு ஸ்வாதிகாவும் உற்சாகமாய் கை தட்டினாள்.
வரூதினி ப்ரீத்தியை விட ஒரு வயதே மூத்தவள் ஆகையால் அவர்களோடு நன்றாக ஒட்டிக் கொண்டாள்.
டாக்டர் ஹரிணி வைதேகி என்று கேட்டதும் பாரதி ஜெயராஜன் இருவரின் விழிகளிலும் ஆனந்த கண்ணீர் ஒருபுறமிருக்க அவள் கரங்களில் பட்டதைக் கொடுத்த டீன் டாக்டர் பாண்டிதுரையும் நெகிழ்ந்து போனார்.
ஆனால் அவளோ பட்டம் வாங்கிய போது சற்றே பின் திரும்பி தனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த ஹர்ஷாவைப் பார்த்து புன்னகைத்து விட்டு சென்றாள்.
அடுத்து ஹர்ஷா பட்டம் பெற வந்த போது முன்னே சென்ற ஹரிணி சற்றே நின்று அவன் பட்டம் பெறுவதை கண்களில் நிறைத்துக் கொண்டாள். அதே சமயம் அரங்கத்தில் அமர்ந்திருந்த சாரதவையும் பார்த்துப் புன்னகைத்தாள்.
“உங்கள் கனவு நனவானது. ஆனால் என் கனவு இப்போது தான் தொடங்கி உள்ளது” என்று அவரைப் பார்த்து மானசீகமாக அவள் சொன்னது அவருக்கு எட்டியதோ அவரும் இவளைப் பார்த்து தலையசைத்தார்.
அனைவரும் பட்டம் பெற்று விட இப்போது டீன் டாக்டர் பாண்டிதுரை “ஹிப்போக்ரடிக் பிரமாணம்” செய்து வைத்தார். புதிதாக பட்டம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
இப்போது ஒவ்வொரு பிரிவிலும் தங்கப் பதக்கம் பெற்றவர்களை அறிவித்தனர்.
முதலில் ஹர்ஷாவின் பெயர் அழைக்கப்பட மேடை ஏறியவன் இறங்க எத்தனிக்க மீண்டும் மீண்டும் அவன் பெயரே அழைப்பட அங்கிருந்த சிறப்பு விருந்தினரில் மூத்த மருத்துவர் ஒருவர் அவனை அங்கேயே நிற்கும் படி சொல்லி பாராட்டினார்.
முரளி நான்கு பதக்கங்கள் பெற்றான். ஹரிணி கைதட்டுவதை நிறுத்தவே இல்லை. சாரதா கண்களில் ஆனந்த கங்கை வெள்ளம் பெருக்கெடுக்க ஸ்வாதிகா விழிகள் விரித்து பெருமையும் பூரிப்போடும் பார்த்திருந்தாள்.
அது வரை ராஜகுமாரனாக அவளது ஷாஸாவாக அவள் அறிந்திருந்தவன் இன்று டாக்டர் ஹர்ஷவர்தனாக அவள் மனதில் பதிந்தான்.
விழா கோலாகலமாக நிறைவு பெற அனைவரும் சிற்றுண்டி ஸ்டால்களை நோக்கிப் படையெடுத்தனர்.
ஹரிணி ஹர்ஷா குடும்பத்தினரை ஓர் இடத்தில் அமரச் செய்து சீனு ஓடிச் சென்று அவர்களுக்குத் தேவையானதை கவனித்தான்.
நாங்களும் சீனுவிற்கு உதவுகிறோம் என்று ப்ரீத்தி வரூதினி சுகீர்த்தி கிளம்ப தானும் செல்வதாக கூறிச் சென்றாள் ஸ்வாதிகா.
ஹர்ஷாவும் ஹரிணியும் இவர்களை நோக்கி அப்போது தான் வந்து கொண்டிருந்தனர்.
இரு கைகளிலும் தட்டுக்களை ஏந்தி வந்து சாராதவிடமும் பாரதியிடமும் தந்து கொண்டிருந்த ஸ்வாதிகாவையே பார்த்துக் கொண்டிருந்த ஹர்ஷாவை திரும்பிப் பார்த்தாள் ஹரிணி.
ஹர்ஷா ஹரிணி இருவரையும் பார்த்த ஹரிணியின் தங்கைகள் ஹர்ஷா அண்ணா விதுக்கா என்று கூறிக்கொண்டே அவர்களை நோக்கி வர ஸ்வாதியும் ஷாஸா விதுக்கா என்றாள்.
“உனக்கும் நான் விதுக்கா ஆகிவிட்டேனா” ஸ்வாதிகாவின் கன்னத்தில் லேசாக தட்டி அவளது கரத்தைப் பற்றிக் கொண்டாள் ஹரிணி.
எப்போதும் தனது தங்கைகளுக்கு இன்னொரு தாயாகவே இருந்து வந்திருக்கிறாள் ஹரிணி. அதே உணர்வோடு அவள் ஸ்வாதியை அணுகியதையும் ஸ்வாதி ஹரிணியை அன்போடு கொண்டாடியதையும் கண்ட ஹர்ஷா மலர்ந்து புன்னகைத்தான்.
சாரதாவும் ஸ்வாதிகாவும் அன்றிரவு விமானத்திலேயே ஜெய்பூர் புறப்படுவதாக இருந்தது. ஹரிணியின் குடும்பத்தினரும் ஊருக்கு திரும்பிச் செல்வதாக கூறினர்.
“ஹரிணி டேக்சி ஏற்பாடு செய்திருக்கா. சுகியை ஹாஸ்டலில் விட்டுவிட்டு நாங்க ஊருக்கு கிளம்பறோம்” பாரதி ஜெயராஜ் இருவரும் சாராதவிடம் விடை பெற்றனர்.
“ஹர்ஷா அண்ணா, நீங்க பிரின்ஸ்ன்னு எங்ககிட்ட ஏன் சொல்லவே இல்லை” வரூதினியும் ப்ரீதியும் குறைபட அவர்களை நோக்கி குனிந்த ஹர்ஷா, “உங்களுக்கு எப்போவும் ஹர்ஷா அண்ணா தான்” என்று கூற அன்று ஹரிணி பல முறை சந்தோஷமாய் பூரித்தாள்.
குடும்பத்தினரை அனுப்பி விட்டு சீனுவையும் சென்று ஓய்வெடுக்க சொன்னான் ஹர்ஷா.
சீனு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தான். அவனின் தூரத்து உறவினரான மெஸ்ஸின் முதலாலியிடம் பேசி போர்டிங்கில் சேர்த்து விட்டிருந்தான் ஹர்ஷா.
இரவு டிஜேவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர் ஜூனியர்கள். அப்படியே ஆட்டம் கொண்டாட்டாம் விருந்து என களை கட்டும்.
குடும்பத்தினர் அனைவரும் ஒவ்வொருவராக விடை பெற சக மாணவர்கள் ஹர்ஷாவை தங்கள் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைத்துக்கொண்டிருந்தனர்.
அத்தனை தங்கப் பதக்கம் வாங்கியவன் உண்மையில் ராஜவம்சத்தை சேர்ந்தவனா என்று அனைவரும் ஆஹா ஓஹோ என்று புகழாரம் சூட்ட ஹர்ஷாவுமே சற்று சங்கடமாய் தான் நெளிந்தான். ஹரிணியோ கேட்டவே வேண்டாம். விட்டால் ஓடிச் சென்றிருப்பாள். ஹர்ஷா தான் அவளைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்தான்.