(Reading time: 27 - 53 minutes)

இதில் ஸ்வாதிகாவைப் பற்றி வேறு அங்கு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

“எங்கேயாச்சும் போகலாம் ஹரி” அவள் ஹர்ஷாவிடம் சொன்னாள்.

“கார் அம்மா எடுத்துட்டு போய்ட்டாங்க. இங்க ஹாஸ்டல் பார்க்கிங்ல என் பைக் தான் இருக்கு” என்று சோகமாய் சொல்லவும் அதனால் என்ன என்று அவள் கேட்க உற்சாகமானான்.

அது வரை அவ்வப்போது லேசாக தூவிக் கொண்டிருந்த வானம் பலமாய் பொழிந்தது.

ஓடிச் சென்று மழையோடு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாள் ஹரிணி. அவளை இப்போது அருகில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்தான் ஹர்ஷா.

இதே போன்றதொரு தருணம் இன்னும் பல வருடங்கள் பிறகு திரும்பி வரக் கூடும் என்று அப்போது இருவரும் நினைத்தும் பார்த்திருக்கவில்லை தான்.

மழை சற்றே ஓய்ந்து விட அங்கிருந்து கிளம்ப முற்பட்டனர். அப்போது முரளி எதிர்பட அவனுக்கு தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்கள் இருவரும்.

அப்போது தனது பெற்றோருடன் அங்கே வந்த ரஞ்சனி ஹர்ஷாவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ஹரிணி அவர்கள் இருவரையும் பார்த்து சந்தோஷமாய் வணக்கம் தெரிவித்தாள்.

“ஏனம்மா எப்போதும் பசங்க கூடவே தான் சுத்திட்டு இருப்பியா. உன்னால எங்க பெண்ணுக்கும் இல்ல கெட்ட பேர் வந்து சேர்ந்திருக்கு. ஊரெல்லாம் ஏதோ இவள் தான் கண்ட பசங்களோட பீச் சினிமான்னு சுற்றுகிறாள்ன்னு புரளி சொல்லிட்டு இருக்காங்க, உன்னை நல்ல பெண் என்று நினைச்சோம். ஏதோ புத்தி கெட்டு போயிருச்சு போல. அந்த ஆகாஷ் நல்லவன் இல்லையாமே. கேள்வி பட்டோம், பார்த்து நடந்துக்கோ” ரஞ்சனியின் தாய் பட்டென்று சொல்லிவிட ஒரு கணம் அனைவருமே திகைத்துப் போயினர்.

ஹர்ஷா ஏதோ சொல்ல எத்தனிக்க அவன் கரம் பற்றி தடுத்து நிறுத்தினாள் ஹரிணி. அவள் அவன் கரம் பற்றியதை முகச் சுளிப்போடு பார்த்த ரஞ்சனியின் பெற்றோர் அவளை அழைத்துக் கொண்டு சென்றனர்.

 ரஞ்சனியின் முகத்திலும் திகைப்பு தான். தனது அன்னை இப்படி அனைவரின் முன்பும் சொல்லிவிடுவார் என்று அவளும் எதிர்பார்த்திருக்கவில்லை தான். ஆகாஷ் பற்றி யாரோ அவளின் பெற்றோரின் செவிகளில் பற்றி வைக்க  அவளது பெற்றோர் கொதித்துப் போயிருந்தனர்.  என்ன சொல்லி தப்பிப்பது என்று தெரியாமல் அவன் ஹரிணியின் நண்பன் என்று மட்டும் சொல்லி வைத்தாள். ஆனால் தன் அன்னை ஹரிணியை இப்படி மொத்தமாக பழிக்கக் கூடும் என்று எதிர்பாராமல் அந்த சூழலில் எதுவும் மறுத்தும் பேசாமல் அவர்களோடு சென்றுவிட்டாள்.

 “ஹரிணி சாரி ஹரிணி வெரி சாரி” முரளி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருந்தான்.

“அவள் செய்ததற்கு நீ ஏன் மன்னிப்பு கேட்கிறாய்” ஹர்ஷாவின் குரல் ரௌத்திரமாய் ஒலித்தது.

ஹரிணி ஹர்ஷாவின் கரத்தினை அழுத்தமாகப் பற்றினாள்.

“என்னை இங்கிருந்து எங்கேனும் அழைத்துச் செல்” என்று சொல்லாமல் சொல்லியது அவன் கரத்தில் பதிந்த அவளது ஸ்பரிசம்.

“முரளி அப்புறம் பார்க்கலாம்” என்று அவனிடம் இருந்து விடைபெற்று நேராக தனது பைக் நிறுத்தியிருந்த இடம் நோக்கி சென்று தனது மொத்தக் கோபத்தையும் அதன் மீது காட்டினான்.

அவன் பைக்கை உயிர்ப்பிக்க அது சீறியது.  பிடிமானம் தேடியவள் எதுவும் கிடைக்காமல்ஒற்றைக் கரத்தினால் அவனது தோளைப் பற்றிக் கொண்டாள்.

அன்று முழுவதும்  ஆச்சரிய சந்தோஷங்களும் பூரிப்படையும் தருணங்களும்  ஆனந்த ராகங்கள் இசைத்திருந்த வேளையில் நட்பின் ஓர் இழை அறுந்திட  ஒலித்தன அபஸ்வரங்கள்.

அவன் அவளை அழைத்துச் சென்றது  அவனது புகலிடமான கடலிடம்.

அவன் அதிகம் கூட்டமில்லா தனிமையை தான் எப்போதும் தேடிச் செல்வது வழக்கம் ஆகையால் அங்கு தான் அவளையும் அழைத்துச் சென்றிருந்தான்.

கடல் மீண்டும் மீண்டும் அவர்களிடம் ஓடி வந்து என்னவாயிற்று என்று கேட்டுக் கொண்டே இருந்த போதும் இருவரும் மௌனத்தை பிடித்துக் கொண்டிருந்தனர்.

அலையடித்துக் கொண்டிருந்த அவள் மனதை அமைதி படுத்தினாள். மௌனத்தை உடைத்தாள்.

மெல்ல அவனை திரும்பிப் பார்த்தாள். அவன் வதனத்தில் குறையவில்லை சினம்.

“ஹரி, கோபம் ஒரு நெருப்பு பந்து போல, இன்னொருத்தர் மேல அதை எறியும் முன் நம் கை எரிந்து போகும்” அவள் சொல்ல அவளைத் திரும்பிப் பார்த்தான்.

“அந்த மானு அவங்க பேரன்ட்ஸ் உன்னைப் போய்” ஆத்திரம் குறையாமல் சீறினான்.

“அவங்க யாரோ, அவள் இனி யாரோ. என்னுலகத்தில் இனி அவளுக்கு இடமில்லை. இந்த நிமிஷம் என்னைப் பொறுத்த வரை ஒரு நட்பு இறந்து போயிற்று” என்று சொல்லிக் கொண்டே ஒரு பிடி மணலை எடுத்து கடலின் மடியில் சேர்த்து அதன் நீரை தனது சிரசில் தெளித்துக் கொண்டாள்.

‘எப்படி இருக்க முடிகிறது அவளால். எப்பேர்பட்ட பழியை அவள் மேல் சுமத்திச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு அமைதியாக இருக்கிறாள். ஒன்றுமில்லை என்று விட்டுவிடச் சொல்கிறாள்’ அவளையே விழி அகலாமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அவளது இந்த அமைதி மிகவும் பலமான ஆயுதம் என்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.