(Reading time: 27 - 53 minutes)

அவர்கள் அனைவரும் சென்ற பின் சாரதா மகனிடம் ஹரிணிக்கு ஏதும் வாங்க வேண்டாம் என்று ஏன் சொன்னாய் என்று கேட்டார்.

“எனக்கு வாங்கிக் கொடு ஹரி என்று அவளாக என்னிடம் என்று கேட்கிறாளோ அன்று அவளுக்கு வாங்கிக் கொடுப்பேன்” மனதில் நினைத்துக் கொண்டான் என்ற போதும் அன்னையிடம் அவள் அதை எல்லாம் விரும்ப மாட்டாள் என்று மட்டும் சொல்லி வைத்தான்.

ன்று காலை மிக அழகாக விடிந்தது.

தனது பெற்றோர் அதிகாலையில் வந்துவிடவே அவர்களை ஹர்ஷாவின் அறையில் தங்க வைத்தாள் ஹரிணி.

 “அம்மா அப்பா இவன் சீனு. ஹர்ஷாவோட கெஸ்ட்டா இவனும் பங்க்ஷனுக்கு வருவான். இந்தாங்க பாஸ். நம்ம குட்டீஸ் மூணு பேரும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாங்க, ஏதேனும் வேணும் என்றால் சீனுவை கேளுங்க”  சீனுவை பெற்றோரிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

ஹர்ஷாவின் சார்பில் மூன்று பேர் வருவதாக சொன்னான். அவன் அம்மாவும் சீனுவும் தவிர அந்த மூன்றாவது நபர் யார் என்று ஹரிணி அவனிடம் கேட்கவும் இல்லை, அதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை.

ரஞ்சனியின் பெற்றோர் வந்திருந்ததால் ஹரிணியும் ஹர்ஷாவின் அறையிலேயே தான் பெற்றோருடன் இருந்தாள்.

“ரஞ்சனி அம்மா அப்பாவைக் காணோம். எங்கேனும் போயிருக்காங்களா தெரியவில்லையே” என்று சொல்லிக் கொண்டே எதிரே வந்த முரளியையும் அவனது பெற்றோரையும் கண்டு வணக்கம் சொல்லி நலம் விசாரித்தாள்.

“நீ தான் என் பையனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தியாமே. நல்லா இருக்கணும் கண்ணு” முரளியின் தாய் அவள் கையைப் பற்றிக் கொண்டு சொல்லவும் ஹரிணி நெகிழ்ந்து போனாள்.

“நான் ஒன்னும் பெருசா செய்திடலை மா. மீனா மேடமுக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும்” என்று பணிவாக கூறினாள்.

பெண்கள் அனைவரும் பட்டுப் புடவையிலும் நகையிலும் ஜொலிக்க ஆண்கள் சூட் அணிந்து கம்பீரமாக காட்சி தந்தனர்.

“இந்த பங்க்ஷனுக்கு போடவே சூட் வாடகைக்கு கிடைக்கிறது” யாரோ யாரிடமோ சொன்னது ஹரிணி காதுகளில் விழுந்தது.

அனைவரும் அரங்கத்தின் முன்  இருந்த பெரிய மைதானத்தில் பெற்றோர் நட்புக்களோடு கூடியிருந்தனர். வானத்தில் இங்கும் அங்குமாய் கருமேகம் சூழ்ந்திருக்க மழை வரக் கூடுமோ என்று மாணவர்கள் தங்கள் பெற்றோரை அரங்கத்திற்குள் செல்லுமாறு கூறிக் கொண்டிருந்தனர்.

 அப்போது அங்கே ரஞ்சனி அவளது பெற்றோருடன் வந்த போது ஹரிணி அவர்களை நோக்கி செல்ல எத்தனிக்க  சீனு ‘பிரின்ஸ்’ என்று கூவினான்.

ஹரிணி அவன் வந்த திசையை நோக்கி திரும்பினாள். ஹர்ஷாவும் அப்போது அவளைத் தான் பார்த்தான். வானம் தனது வாழ்த்துக்களை மழைப்பூக்களாய் தூவியது.

ஹர்ஷா அவள் வாங்கிக் கொடுத்திருந்த அந்த ஆகாய நீல வண்ண ஷர்ட் அணிந்து  சூட்டில்  கம்பீரமாக நடந்து வந்தான். ஆனால் ஹரிணியின் பார்வை சாரதாவை விட்டு விலகவில்லை.

தன்னை ஒரு முறை குனிந்து பார்த்துக் கொண்டு அவரையும் பார்த்து ஆச்சரியத்தில் விழி விரித்திருந்தாள்.

ஆனால் அங்கிருந்தோரின் மொத்த பார்வையும் ஹர்ஷாவின் இடது புறம் நோக்கியே இருந்தது.

ஆகாய நீல நிறத்தில் வெள்ளி சரிகை இழையோட ஆங்காங்கே நட்சத்திரங்காளாய் கற்கள் தெளித்த டிசைனர் புடவை, மெல்லிய ஆபரணம் என்றாலும் வைரம். இவை அணிந்த காரணத்தினால் அவளின் அழகு ஜொலித்ததா இல்லை அவள் இவற்றை அணிந்ததால் அவைகளின் அழகு மெருகேறியதா என்று அனைவரும் குழப்பம் கொள்ளும் வண்ணம் தேவமங்கையென ஹர்ஷாவின் கரம் பற்றிக் கொண்டு வந்தவளை கண்டு அவள் யாராக இருக்கக் கூடும் என்று சலசலவென விவாதத்திலும் ஈடுபட்டனர்.

அதற்குள் ஹர்ஷா ஹரிணியை நோக்கி வந்து அனைவரின் முன்பும் வடஇந்திய பாணியில் அவளது பெற்றோரின் கால்களை தொட்டு  வணங்க வானத்து மின்னலைக் காட்டிலும் அனைவர் முகத்திலும் ஆச்சரிய மின்னல்கள்.

மழை வரும் போல, உள்ளே போயிடலாம் என்றவன் அவனே ஹரிணியின் தந்தை அமர்ந்திருந்த சக்கர நாற்காலியைப் பற்றிக் கொண்டு அரங்கம் நோக்கி செலுத்தினான்.

அரங்கத்தின் வாயிலை அவர்கள் அடையவும் சாராதாவிற்கு தனது பெற்றோரை அறிமுகம் செய்து வைத்தாள் ஹரிணி.

“போனில் பேசினோம், நேரிலே இப்போது தான் பார்க்கிறோம்” என்று ஏற்கனவே தோழிகள் போல பாரதியும் சாரதாவும் உரையாடிக் கொண்டதைக் கண்டு ஹர்ஷா ஹரிணி இருவருமே அதிசயித்தனர்.

“அக்கா நீங்க கதைகளில் வரும் தேவதைன்னு நினைச்சுட்டோம்” பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்திருந்த போதும் இன்னும் குழந்தைகளாகவே இருந்த வரூதினியும் ப்ரீதியும் ஹர்ஷா உடன் வந்திருந்த பெண்ணைப் பார்த்து சொல்ல அவளோ சாரதாவையும் ஹர்ஷாவையும் நோக்கி திருதிருவென விழித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.