(Reading time: 25 - 49 minutes)

அங்கே இருந்த அலமாரியில் கண்ணாடி கிளாஸ், பீங்கான் தட்டு, கிண்ணம், காபி கப், கத்தி, ஸ்பூன் இவை தான் இருந்தன.  காபித்தூள்,  உப்பு, மிளகு, சர்க்கரை, நாலு மேகி பாக்கெட் மற்றும் ஒரே ஒரு பால் பாத்திரம் நாங்களும் உள்ளோம் என்று அவளுக்குத் தெரிவித்தன. அங்கே இருந்த ப்ரிட்ஜை திறந்து ஆராய்ந்தாள்.

இன்னொரு பேப்பர் பேனாவை எடுத்து அதில் ஏதோ எழுதி இரண்டு காகிதங்களையும் சீனுவிடம் கொடுத்தாள்.

அவள் செய்கை யாவையும் ஹர்ஷா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

“சீனு  முதல்ல சுபம் மெடிகல்ஸ் போ. இதில இருக்கும் மருந்துப் பொருட்கள் எல்லாம் வாங்கிட்டு வா. ஏதேனும் குழப்பமா இருந்தா ஹர்ஷா நம்பருக்கு போன் செய்ய சொல்லு” என்றவள் ஹர்ஷாவிடம் அவனது மொபைல் எண்ணை கேட்டு அதிலே குறித்துக் கொடுத்தாள்.

“ப்ரின்ஸ் அண்ணா நம்பர் எனக்கு மனப்பாடமா தெரியும்கா” பெருமை தொனிக்க வேறு சீனு சொல்லி வைத்தான்.

“சரி சரி அப்படியே பக்கத்தில் இருக்கும்  லக்ஷ்மி ஸ்டோர்ஸ்ல  இந்த சாமான் எல்லாம் வாங்கிட்டு சீக்கிரம் வா” என்றவள் ஹர்ஷாவிடம் பணம் கொடுக்குமாறு சொன்னாள்.

 “பர்ஸ் டேபிள் மேல தான் இருக்கு நீயே எடுத்துக் கொடு” அவன் சொல்ல அவனது பர்ஸை எடுத்துப் பணத்தை சீனுவிடம் கொடுத்து அவனை அனுப்பினாள்.

“இவங்க உன் அப்பாவா” அவனது பர்சில் சிரித்துக் கொண்டிருந்த அவனது தந்தையைக்  காட்டி கேட்டாள்.

“ம்”

“உன் அப்பா போட்டோ மட்டும் வச்சிருக்க, உன் அம்மா கோச்சுக்க போறாங்க” விளையாட்டாய் சொன்னவள் அதை மீண்டும் மேஜை மீது வைத்தாள்.

இப்போது அவன் போர்வையை உதறி விட்டு எழுந்து அமர்ந்தான்.

“அதெல்லாம் கோச்சுக்க மாட்டாங்க, ஏன்னா என் அப்பாவை போட்டோவில் மட்டும் தானே பார்க்க முடியும்” கம்மி ஒலித்தது அவன் குரல்.

ஹரிணி எதுவும் பேசவில்லை. அவனை ஒரு நொடி தீர்க்கமாய் பார்த்தாள்.

“நமக்கு ரெண்டு விதமான கண்கள் இருக்கு உனக்கு தெரியுமா” ப்ரிட்ஜை திறந்து அங்கிருந்த எலுமிச்சை பழத்தை எடுத்தபடியே அவள் கேட்க அவனோ புரியாமல் விழித்தான்.

“ஒன்று  இந்த புறக்கண்கள், வெளியுலகத்தைப் பார்க்க. மற்றொன்று அகக்கண்கள், உன் மனதில் பதிந்துள்ளதைப பார்க்க. உன் அப்பாவை தான் உன் அகக் கண்கள் மூலமா பார்த்துக் கொண்டிருப்பாயே. அப்புறம் என்ன போட்டோவில் மட்டும் தான் பார்க்க முடியும் என்று சொல்ற” இயல்பாக கூறியவள் எழுமிச்சை சாற்றில் சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து ஜூஸ் தயாரித்து அவனைப் பருகச் சொன்னாள்.

இன்னொருவராக இருந்தால் ‘அச்சச்சோ உனக்கு அப்பா இல்லையா, நீ பாவம் என்றிருப்பார்கள்’ அல்லது, ‘ஒஹ் ஐ ஆம் சாரி’ என்று வருத்தம் தெரிவித்திருப்பார்கள். ஆனால் அவள் ஹரிணி!! ஹரியின் ஹனி!!

எப்படி அவளது மனதின் தடுமாற்றத்திற்கு அவளுக்கு தக்க தீர்வை சொல்லி தெளிவைத் தந்தானோ அதையே தான் அவள் இப்போது அவனுக்குத் திரும்ப தந்து கொண்டிருக்கிறாள்.

அந்நேரம் அவனது மொபைல் ஒலிக்க திரையில் “அம்மா” என்று ஒளிர அவனிடம் மொபைலை நீட்டினாள்.

அவன் அன்னையிடம் தமிழில் பேசியதை ஆச்சரியமாகப் பார்த்தாள். அதைவிட தான் நலமாக இருப்பதாக வேறு சொன்னான். கூடவே தாதிஸாவிற்கு எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தான். அவன் போன் பேசி முடித்ததும் அவனிடம் கேட்டே விட்டாள்.

“உன் அம்மாகிட்ட தமிழில் பேசுற”

“என் அம்மா தமிழ்நாட்டை சேர்ந்தவங்க தான்” என்று சொன்னவன் அவனது பெற்றோரின் கதை முழுவதையும் அவளிடம் சொன்னான்.

“தாதிஸா ஐ மீன் என் பாட்டி  போன வாரம் வழுக்கி விழுந்துட்டாங்க. ஹேர்லைன்  ட்ரோகண்டர் ப்ராக்ஸர். அம்மா தான் அவங்களை கவனிச்சிட்டு இருக்காங்க. இப்போ தான்  என் தாதிஸாவிற்கு என் அம்மாவின் அருமை புரிந்து அவங்களை  ராணியாக ஏற்றுக் கொண்டிருக்காங்க. என் அம்மாகிட்ட பொய் சொல்ல மாட்டேன். முதல்முறையா  நான் நல்லா இருக்கேன்னு பொய் சொல்லியிருக்கேன். திருவள்ளுவரே  சொல்லியிருக்காரே பொய்மையும் வாய்மையிடத்து”

ஹரிணி அப்படியே மலைத்துப் போய் நின்று விட்டாள்.

‘இவனைப் போய் எப்படி எல்லாம் தவறாக நினைத்தோம். ராஜகுமாரன் என்று திமிர் என்றெல்லாம் நினைத்தோமே’ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

“என்னைப் போலவே நீயும் அதிர்ஷ்டசாலி” என்று மட்டும் சொன்னாள்.

இப்போது அதிர்ஷ்டம் எங்கிருந்து வந்தது என்று கேள்வியாய் பார்த்தான்.

“நம்ம ரெண்டு பேருக்கும் அருமையான பெற்றோர் கிடைச்சிருக்காங்க. உலகத்தில் எவ்வளவு அதிர்ஷ்டம் கொட்டி கிடைத்தாலும் இதற்கு ஈடு இணை ஆகாது”

அவள்  ஆழ்ந்த குரலில் உணர்ந்து சொன்னாள். அவன் பரந்த புன்னகையில் நிறைவாய் அமோதித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.