(Reading time: 25 - 49 minutes)

சீனு அங்கு எல்லாப் பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

“அக்கா அஞ்சு மணிக்கு மெஸ் திறக்கும் நேரம். நான் போகவா” அவளின் அனுமதி வேண்டி நின்றான்.

“நீ போயிட்டு வேலை முடிந்ததும் கொஞ்சம் வருகிறாயா” ஹரிணி கேட்க சீனுவோ அவன் எப்போதும் ஹர்ஷாவின் அறையில் தான் பணி முடிந்ததும் இருப்பதாக தெரிவித்தான்.

“பிரின்ஸ் அண்ணா என்னை டுடோரியல்ல சேர்த்து படிக்க வைக்கிறார் அக்கா. மாஸ்டர் கிட்டேயும் சொல்லியிருக்கார். மெஸ் நேரம் முடிந்ததும் என்னை படிக்க விடணும்னு. அங்கே மெஸ்ஸில் எல்லோரும் கதை பேசிகிட்டு சீட்டு ஆடிகிட்டு இருப்பது படிக்க கஷ்டமா இருந்ததால இங்க வந்து தான் தினம் நைட் படிச்சிட்டு தூங்குவேன். அண்ணா நைட் டியூட்டி போனா கூட என் கிட்ட சாவி குடுத்திட்டு போய்டுவார்” சொல்லிவிட்டு சிட்டாக பறந்து சென்றான்.

ஹர்ஷாவை படுக்க சொல்லி அவனது ரத்த நாளத்தில் ஊசியை ஏற்றிக் கொண்டே “குட் ஹரி, சீனுவை நீ படிக்க வைப்பது சந்தோஷமா இருக்கு” என்றாள்.

அவனோ  “ஆஆஹ் அம்மா அய்யோ” என்று கூப்பாடு போட்டான்.

“ஹரி இதென்ன சின்ன பிள்ளையாட்டம்” அவன் முகத்தைப் பார்த்தவள் அவன் வேண்டுமென்றே செய்வதை கண்டுகொண்டதும் முறைத்தாள்.

அறையிலேயே ட்ரிப்ஸ் ஏற்றி அதில் ஆண்டிபயாடிக் மருந்தினை கலந்தாள். பின் சீனு வாங்கி வந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு அவனது மினி கிச்சனில் நுழைந்தாள்.

“ஹரி இதை எப்படி ஆன் செய்யணும்” அவள் அங்கிருந்தே குரல் கொடுக்க ஹர்ஷா சொல்ல சொல்ல கஞ்சி சாதம் தயாரித்து அவனை உண்ண வைத்தாள்.

“இதனென்ன வெறும் ரைஸ் கஞ்சி. சப்புன்னு இருக்கு” ஹர்ஷா குறை கூற  ஹரிணி பதிலுக்கு அவனிடம் வாதம் புரியாமல் அமைதியாக இருந்தாள்.

“ஹரி என் அம்மா நம்பர் சொல்றேன், கொஞ்சம் போன் போட்டுத் தருகிறயா” அவனிடம்  கேட்டாள்.

“இதுக்கு போய் ஏன் என்கிட்டே கேட்டுகிட்டு இருக்க. இந்தா போன். எப்போ வேணும்னாலும் யூஸ் செய்துக்கோ” அவன் அவளிடம் எடுத்துக் கொடுத்தான்.

அப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் இல்லை ஆதலால் பாஸ்வோர்ட் பயன்பாடு எல்லாம் இல்லை. ஹரிணி அவனிடம் இருந்து மொபைலை வாங்கி அவள் அன்னையை அழைத்தாள்.

தன் அன்னையிடம் தான் ஹர்ஷாவின் அறையில் இருந்து அவனது மொபைலில் இருந்து பேசுவதாக சொல்லி அவனது உடல்நிலையை எடுத்துக் கூறி சாப்பிட என்ன கொடுக்கலாம் என்று ரெசிபி கேட்டு அறிந்தாள்.

சீனு இரவு வேலைகளை முடித்து வருவதற்குள் ஹர்ஷாவிற்கு ஏற்ற வேண்டிய மருந்துகள் முடிவடைந்தன.

“சீனு இதுல சுடு தண்ணீர் வச்சிருக்கேன். இதை மட்டும் எடுத்துக் கொடு. நைட் ஜூரம் இருந்தா இந்த டேப்லட் குடு. ஏதேனும் ரொம்ப ப்ராப்ளம்னா என்னை கூப்பிடு” என்றவள் ஹர்ஷாவிடம் திரும்பினாள்.

“நீ இன்னும் ரெண்டு வாரத்தில் ட்ராவல் வேறு செய்யணும், சோ நீ எப்படியும் இன்னும் மூணு நாளைக்கேனும் ரெஸ்ட் எடுக்கணும். நம்ம செப்டிக் வார்டு இன்சார்ஜ் துரை சார் தானாம். நாளைக்கு சாரைப் பார்த்து பேசறேன். நீ ஒழுங்கா ரெஸ்ட் எடு” அவனிடம் உத்தரவாய் சொன்னாள்.

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து ஹர்ஷாவின் காலை மருந்துகளை ட்ரிப்ஸ்ஸில் ஏற்றினாள்.

“நான் ஹேமந்த் இல்ல முரளி கிட்ட கேட்கிறேன் ஹரி, அவங்க யாரேனும் ப்ரீயா இருந்தா மதியம் போட வேண்டிய மருந்துகளை போடச் சொல்லலாம். நான் வர எப்படியும் ஈவனிங் ஆகிடுமே” எனவும் ஹர்ஷாவும் சரி என்றான்.

ஹரிணி ஹேமந்த், முரளி இருவரிடமும் கேட்க இருவருமே தங்களால் முடியாது என்று காரணம் கூறி மறுத்து விட்டிருந்தனர்.

“முரளிக்கு அட்மிஷன் டே. அவனால வர முடியாது.  இந்த ஹேமந்த் பாரு, ஹேமாவோடு மதிய ஷோ மூவி போகிறானாம். அந்த  ஹிந்தி படம் மதியம் தான் ஷோ இருக்காம். உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்றேன்,  ஐ ஆம் சாரி ஹரிணின்னு சொல்றான். நீ அவனுக்கெல்லாம் எவ்வளவு செஞ்சிருப்ப. பொழுதுக்கும் ட்ரீட்ன்னு மொக்கிருக்கான், உன் கார்ல வேற நகர்வலம் போயிருக்கான். அவன் போன சம்மர்ல ஊருக்கு போக டிக்கட் கிடைக்காம இருந்த போது நீ தானே டிக்கெட் எல்லாம் எடுத்துக் கொடுத்த. சினிமா முக்கியம்னு போறான்” பொரிந்தாள் ஹரிணி.

“விடு ஹனி, நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். சீனுவை ஹெல்ப் செய்ய சொல்றேன்”

“இல்ல ஹரி அதுக்கில்ல, லைன் ப்ளாக் ஆனா சீனுவிற்கு சரி செய்து எல்லாம் போட தெரியாதே. சரி நான் ஏதேனும் ஏற்பாடு செய்றேன்” என்று சொல்லிவிட்டு பணிக்கு விரைந்தாள்.

அவளது வார்ட் வேலைகளை சீக்கிரம் முடித்தவள் ஹர்ஷாவின் வார்டுக்கு சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.