(Reading time: 23 - 46 minutes)

அவளை பார்த்து சிரித்தவன் "சாரி எச்சி கையால எடுத்துட்டேனே?", என்றான்.

"பிரண்ட்ஸ்குள்ள அதெல்லாமா பாக்கணும்? சும்மா தாங்க. நீங்க வேணும்னா இந்த தக்காளி சாதம் சாப்பிடுங்க", என்று சொல்லி அவளுடையதை கொடுத்தாள்.

சந்தோசமாக தோசையை கொடுத்து அவளுடையதை வாங்கி கொண்டவனுக்கு திருமண மேடையில் மாலையை மாற்றி கொண்டது போல தோன்றி வைத்தது.

அதை பார்த்து கொண்டிருந்த சூர்யாவும் மதியும் சிரித்து கொண்டார்கள். "நீ கேட்டா அண்ணண் தோசை என்ன? அவங்க சொத்தையே எழுதி கொடுப்பாங்க காவ்யா", என்றாள் மதி.

"ஐயோ பாவம். அவங்களே ரொம்ப கஷ்ட படுறவங்க. அவங்க கிட்ட இருக்குற கொஞ்ச சொத்தையும் நான் பிடுங்க மாட்டேன் பா", என்றாள் காவ்யா.

"கொஞ்ச சொத்தா?", என்று இழுத்தாள் கலைமதி.

"ஆமா, அந்த பெரிய பங்களாவை பாத்துக்குற வேலை தான செய்றார்? அப்புறம் அவருக்கு எப்படி சொத்து இருக்கும்?", என்று கேட்டாள் காவ்யா.

அதை மறுத்து கூற வந்த கலைமதியை விழிகளால் நிறுத்தி பேச விடாமல் செய்தான் ஷியாம் பிரகாஷ்.

அதன் பின் வயிறு நிறைய உண்டு விட்டு பேசி கொண்டிருந்தவர்களுக்கு மனது சந்தோசமாக இருந்தது. 

தன்னுடைய போனில் பேலன்ஸ் இல்லை என்று சொல்லி சூர்யாவின் செல்லை கேட்டாள் காவ்யா.

அவன் அதை வீட்டில் மறந்து வைத்து விட்டு வந்ததால் ஷியாம் தன்னுடையதை கொடுத்தான். அதை வாங்கி தன்னுடைய அம்மா திலகாவை அழைத்து பேசினாள் காவ்யா.

அவள் பேசி முடித்து தந்ததும், அவள் பேசிய எண்ணை "வைப் ஹோம்", என்று பதிந்து வைத்தான் ஷியாம். 

நான்கு மணி அளவில் மழை பெய்வது போல இருந்ததால் வீட்டுக்கு திரும்பி விட்டார்கள். வீடு வந்து சேர்ந்த போது மணி ஆறாகி இருந்தது. அன்று முழுவதும் அலைந்தது அனைவருக்கும் அசதியை கொடுத்தது.

சமையல் கார அம்மாவை எளிதாக எதையாவது செய்ங்க என்று சொல்லி விட்டு மேலே தன் அறைக்கு சென்று விட்டான் ஷியாம்.

அறைக்குள் சென்ற மதியை இறுக்கி அணைத்து கொண்டான் சூர்யா. "அத்தான், நீங்க வர வர சரியே இல்லை. அதுவும் இங்க வந்த அப்புறம் ரொம்ப சேட்டை பண்றீங்க? இப்ப தான் வீட்டுக்குள்ளே வந்துருக்கோம். அதுக்குள்ளே இப்படி செஞ்சா எப்படி?", என்று கேட்ட மதியின் கை விரல்கள் அவனுடைய சட்டை பட்டனை திருகி கொண்டிருந்தது.

"நான் செய்ற சேட்டை உனக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியுமே? அப்புறம் எனக்கு மதியம் சாப்பிடும் போதே இப்படி கட்டிக்கணும்னு தோணுச்சு டி. எப்படி டி சாப்பாடு கொண்டு வரணும்னு ஐடியா தோணுச்சு உனக்கு?"

"இது பெரிய விஷயமா? எனக்கு இப்படி சேர்ந்து ஊரை சுத்தி பாக்க போனா சேர்ந்து உக்காந்து சாப்பிட தோணும். ஆனா இது வரைக்கும் எனக்கு அப்படி ஒரு சந்தோசம் கிடைக்கவே இல்லை. ஷியாம் அண்ணா கிட்ட கேட்டேன். அவங்களும் நான் சொன்னதையே சொன்னாங்க. அப்புறம் சமையல்கார அம்மா காலைல சாப்பாடுக்கு தோசை சுட்டுட்டு இருந்தாங்க. நான் சாதம் வச்சேன். அப்புறம் வேலை ஈஸி தான? சீக்கிரம் முடிச்சிட்டோம். இதுவே ஹோட்டலுக்கு போனா அந்த சாம்பார் சாதத்தை, இல்லைன்னா சத்தே இல்லாத ரொட்டி அது இதுன்னு தின்னு நாலு பேருக்கும் சேத்து ஐநூறு கிட்ட கொடுத்துருக்கணும்? இதுவே இப்படி செஞ்சா நாலு இலையில கட்டி கொண்டு போய் சாப்பிட்ட அப்பறம் இலையை குப்பை தொட்டில போட்டுட்டா முடிஞ்சிருச்சு", என்று சிரித்தாள் கலைமதி.

"வர வர நீ மனசுக்குள்ள நிறைஞ்சு கிட்டே போற கண்ணம்மா. எனக்கு நீ பொண்டாட்டியா வந்தது எனக்கு வரம் டி செல்லம்"

"இல்லை அத்தான். எனக்கு நீங்க கிடைச்சது தான் வரம். நீங்க வந்த அப்புறம் தான் என் வாழ்க்கையில சந்தோசம் அப்படிங்குறதே எனக்கு கிடைச்சிருக்கு. வாழ்க்கையில ஒரு பாதி கஷ்டமா இருந்தா மற்றொரு பாதி சந்தோசமா இருக்குன்னு சொல்லுவாங்க. உங்க கூட சந்தோசமா இருக்கணும்னு தான் ஒரு பாதி வாழ்க்கை எனக்கு அழுகையில் போனது போல? இப்படி அன்பை பொழியுற நீங்க தான் எனக்கு எப்பவும் வேணும்"

"என்னை தர தான் நானும் தவிச்சிட்டு இருக்கேன். எங்க? அதுக்கு தான் இன்னும் நாள் இருக்கே", என்று பெருமூச்சு விட்டான் சூர்யா.

"என்ன அத்தான் சொல்றீங்க?"

"ஒன்னும் இல்லை டி. சரி ஒரே ஒரு முத்தம் கொடுத்துக்கட்டா?"

"அது எப்படி எப்பவும் கொடுக்காத மாதிரியே, கேள்வி கேக்குறீங்க?", என்று சிரித்தாள் மதி.

"நீ செமையா வாய் பேச கத்துகிட்ட டி"

"பேச வைக்கிறதே நீங்க தான?"

"இனி பேசாம வைக்க என்ன செய்யணும்னு தெரியுமே", என்று சொல்லி கொண்டே அவன் முகம் நோக்கி குனிந்தான். சிரிப்புடன் அவனுடைய முத்தத்தை எதிர்பார்த்தாள் கலைமதி. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.