(Reading time: 26 - 52 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 17 - வத்ஸலா

Kannathil muthamondru

பெங்களூரின் தட்பவெப்பம் தாலாட்டிக்கொண்டிருந்தது. நாளை ஐ.பி.எல் இறுதி ஆட்டம் என்பதால் அவனது அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தான் ஹரிஷ்.

எதிரணி வீரர்களும் அங்கே ஆடிக்கொண்டிருக்க, அதிலும் இந்திய அணி வீரர்கள் உண்டு என்பதால் அங்கே உற்சாகத்துக்கும், துள்ளலுக்கும் பஞ்சமில்லாமல்  இருந்தது.

இது கேப்டனாக அவன் விளையாடும் முதல் ஆட்டம். அதுவும் இறுதி போட்டி என்பதால் மிகப்பெரிய பொறுப்பு அவன் தலை மீது அமர்திருந்தது. ஆனாலும் பதற்றம் இல்லை அவனிடத்தில். வாழ்கை அவனை அந்த அளவிற்கு பக்குவப்படுத்தி இருக்கிறதே.

இன்னமும் அவன் திருமணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் அவன் கண்முன்னே வந்து போய்க்கொண்டேதான் இருக்கின்றன. அப்படி  ஒரு பக்குவம் மனதில் வரவில்லை என்றால் அவன்

‘நீ எவ்வளவு பெரிய ஆள் ஆனாலும் சரி உன் கல்யாணத்திலே நான்தான் உன் பொண்டாட்டிக்கு தாலி முடிவேன். சொல்லிட்டேன். ஞாபகம் வெச்சுக்கோ’ கீதா  முன்பு சொன்னதை.’ நிறைவேற்றி இருப்பானா?’ அனுவுக்கு தாலி முடியும் உரிமையை அவளுக்கு கொடுத்திருப்பானா?

அதற்கு மேல் ஷங்கருக்கு கிடைத்த அந்த தண்டனை அவனுக்கு இன்னும் பல விஷயங்களை தெளிவு படுத்தி இருக்கிறதே. இயற்கையும், காலமும் கணக்குகளில் எதையும் மிச்சம் வைப்பது இல்லை உடனக்குடன் தீர்த்து கொள்கின்றன என்று புரிந்ததே.

ஆனால் அதே நேரத்தில் இதே பக்குவம் அவனது தந்தைக்கும் இருக்க வேண்டும் என அவன் எதிர்பார்ப்பது பெரிய தவறுதானே. அதற்கு கொஞ்சம் கால அவகாசம் வேண்டும்தானே.

‘இணைவேன். என்னுடயவளுடனும் நான் கூடிய விரைவில் இணைவேன். அதற்கும் வழி பிறக்கும்’ சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே. அப்பாவுக்கும் எங்கள் மனம் புரியாதா என்ன?

அழகான சிரிப்புடன் அணியினரை உற்சாக படுத்திக்கொண்டே உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தான் ஹரிஷ்.

ஆனால் அந்த நேரத்தில் அவன் மனம் ஏங்கியது அந்த ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். நான் கேப்டனாக விளையாடுவதை அவள் நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான். அவள் முகத்தில் மின்னும் ஆனந்த மின்னல்களை அவன் பார்த்து ரசிக்க என்பதற்காக மட்டும்தான்.

‘வருவாளா அவள்?’ கேள்வி அவனுக்குள் சுற்றிய வேளையில் இன்னொரு கேள்வியும் அவனை நெருடியது. இந்த ஐ.பி.எல் ஆட்டம் தொடங்கிய நிலையிலிருந்து வலைதளங்களில் அவளை பற்றிய விமர்சனங்கள் நிறையவே வர ஆரம்பித்திருந்தன.

தொடரின் ஆரம்பத்தில் இவன் சற்று சரியாக ஆடவில்லைதான். பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலுமே கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. அணியுமே இரண்டு மூன்று ஆட்டங்களில் தோற்றுப்போனது

இவர்கள் இருவரும் திருமணதிற்கு பிறகும் பிரிந்து வாழும் கதை இங்கமங்கும் அரசல் புரசலாக பரவியும் இருந்தது. இவனது தடுமாற்றங்களுக்கு காரணம் அவளே என்று தொடங்கியது ஒரு கும்பல். .

‘அது எப்படி இவன் செய்யும் தவறுக்கெல்லாம் அவள் பொறுப்பாவாளாம்’ என உள்ளம் குமைந்தாலும் இப்போது ஐ.பி.எல் போட்டிகள் நடக்கும் தருணத்தில் அவனால் வலைதளங்களில் பதிவுகள் எதுவும் இடவும் முடியாது. அது விதிகளுக்கு புறம்பானது. அதனால் இது எதையும் மறுத்து பேசும் வாய்ப்பும் இவனுக்கு கிட்டவில்லை..

அவ்வபோது அவள் வருவாளோ எனும் நப்பாசை இவனுக்கு எழுந்து எழுந்து மறைந்தாலும் அவள் அங்கேயே இருப்பதுதான் அவளுக்கு பாதுகாப்பு என்றும் ஒரு எண்ணம் அவனுக்குள் சுற்றாமல் இல்லை.

‘ஜெயிக்க வேண்டும். அவளுக்காகவேனும் இவன் ஜெயித்தே ஆக வேண்டும். நூறாவது முறையாக சொல்லிக்கொண்டான் தனக்குள்ளே.

தே நேரத்தில் அங்கே ரகுவின் வீட்டில்

ஏதேதோ எண்ண ஓட்டங்களுடனே கட்டிலில் அமர்ந்து இரண்டு நாளைக்கு வேண்டிய துணி மணிகளை பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தாள் ஸ்வேதா. கதவில் சாய்ந்து நின்று கொஞ்ச நேரம் அவளையே ரசித்துக்கொண்டிருந்த ரகு அவள் .அருகில் வந்தான்.

‘அட அட அட...’ என்றபடியே கட்டிலில் அவள் அருகில் படுத்துக்கொண்டான்.

‘அடையும் இல்ல வடையும் இல்ல... ‘என்று பழிப்பு காட்டிவிட்டு திரும்பிக்கொண்டாள் ஸ்வேதா. அவளை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டான் ரகு. அவன் இதழ்கள் அவள் முகத்தில் விளையாடின. நெகிழ்ந்து கனிந்தாள் ஸ்வேதா.

சில நிமிடங்கள் கழித்து ‘போதும்... போதும்... ‘ சின்ன வெட்க சிரிப்புடன் விலகினாள் அவனை விட்டு. மறுபடி பெட்டியில் எல்லாவற்றையும் அவள் எடுத்து வைக்க ஆரம்பிக்க

‘பெங்களூர் வரமாட்டேன்னு சொன்னாங்க யாரோ. இப்போ டிரஸ் எல்லாம் எடுத்து வெச்சு கிளம்பறாங்க’ என்றான் ரகு.

‘ஆமாம். என்ன செய்ய? உங்களை விட்டு ரெண்டு நாள் இருக்கறதை விட கூட வர்றது பெட்டெர்னு தோணிச்சு. அதான்’ சலித்துக்கொள்வதைப்போல் சொன்னாள் அவள். ஆனால் உண்மை அதுவல்ல.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.