தனிச்சையாய் வி.ஐ.பி அரங்கின் பக்கம் திரும்பிய ஹரிஷின் தலை முதல் கால் வரை புது ரத்தம் பாய்ந்த உணர்வு. அங்கே அந்த அட்டையை பிடித்துக்கொண்டு நின்றிருந்தாள் அனுராதா ‘யூ கேன் டூ இட் ஹரிஷ்’. அது திரையில் தெரிய அரங்கத்தில் உச்சகட்ட கரகோஷம், சந்தோஷ கூச்சல்.
பின்னே ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லட்டும். தன்னவனை விட்டு விலகி விடுவாளா என்ன அனுராதா?’
உற்சாகத்தின் மொத்த உருவமாக மாறிபோனான் ஹரிஷ். அதே நேரத்தில் அவனது விழிகளில் ரகசிய கண்ணீர் துளிகளும் கூட. அடுத்த பந்தில் தெறித்து விழுந்தது பேட்ஸ்மேனின் ஸ்டம்புகள். அரங்கத்தில் ஆனந்த கூவல்கள். மடமடவென தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகள் அவனுக்கு.
அரங்கம் கூவிக்கொண்டிருந்தது ‘யூ கேன் டூ இட் ஹரிஷ்’. இங்கே ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்த அனுராதாவின் விழிகளிலும் சந்தோஷ நீர்த்துளிகள்.
‘அது எப்படி நான் இருக்கும் போது என்னவன் தோற்றுப்போவனாம்?’
அவனது உற்சாகம் அணி வீரர்களையும் தொற்றிக்கொள்ள எதிரணி தடுமாறிப்போய் நின்றது. காற்றில் தாவிப்பறந்து கேட்ச்களை பிடித்தான் ஹரிஷ். இவன் தந்த ஊக்கத்தில் மற்ற பந்து வீச்சாளர்களும் விக்கெட்டுகளை அள்ள இங்கே உச்சகட்ட மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தார்கள் ரகுவும், அனுவும்.
அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா.’ நியாயமாக அவனும் இதே போல் விளையாடி இருக்க வேண்டும் இல்லையா? நானும் அனுவைப்போல் அவனை உற்சாகப்படுத்தி இருக்க வேண்டுமில்லையா? உறுத்தியது அவளுக்கு.
‘ஆனால் ஆட்டத்தில் அப்பாவுக்கு நேர்ந்ததைபோல் அவனுக்கு ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் நான் என்ன செய்வேன்’ அந்த எண்ணம் வந்தவுடனேயே கண்களை இறுக மூடி இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டாள் ஸ்வேதா.
சரியாக நூற்றி ஐந்து ரன்களில் சுருண்டு விழுந்தது எதிரணி. பூரிப்பும், உற்சாகமுமாய் துள்ளினான் ஹரிஷ். இதே பூரிப்பும் உற்சாகமும்தான் அன்று அவளுக்கு தாலி கட்டும் போதும் இருந்தது அவனுக்கு.
திருமணத்தன்று காலை.
அவர்களது பங்களாவை சுற்றி பத்திரக்கையாளர்கள் கூட்டம். ஷங்கர், கீதா பெரியம்மா என அனுராதாவின் வீட்டு உறவு சிக்கல்கள் வெளியில் தெரிய வேண்டாம் என்பதற்காகவே வீட்டளவில் வைத்திருந்தார் இந்த திருமணத்தை. திருமணம் முடித்து மறுநாள் வரவேற்பு பெரிய அரங்கத்தில் என திட்டமிட்டிருந்தார் அவர்.
நெருக்கமானவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கு பெற்றனர். சரியான நேரத்தில் பெரியப்பா வந்து இறங்கியது அவளுக்கு ஆனந்த நெகிழ்ச்சி. ஆனால் அவர் முகத்தில் எப்போதும் இருக்கும் உற்சாகம் இல்லை என்பது அவளுக்கு கொஞ்சம் நெருடல். பெரியம்மா வந்திருக்கவில்லை.
காலை வரை ஷங்கரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்பதே அவர்களது கவலை. அவன் கமிஷனரை பார்க்க செல்லவில்லை என்பது தெளிவாகி இருந்தது அப்போது.
‘அப்படி என்றால் எங்கே அவன்?’ உயிர் வரை நடுங்கியது அவர்களுக்கு. அனுராதாவிடம் காட்டிக்கொள்ளவில்லை பெரியப்பாவும், கீதாவும். அதே நேரத்தில் சுவாமிநாதனை பார்க்கும் போது இவரும் ஹரிஷை காணாமல் அன்று இப்படிதானே தவித்திருப்பார் என்ற எண்ணம் கீதா பெரியப்பா இருவருக்குமே வராமல் இல்லை.
அனுராதாவை பார்த்து பார்த்து அலங்கரித்திருந்தாள் கீதா. மலர்களும், நகைகளும் அவள் சந்தோஷ சிரிப்புடனும், வெட்க பளபளப்புடனும் போட்டிப்போட்டு தோற்று விட அவனது விழிகளின் ரகசிய ரசிப்புகளிலும், விரல்களின் ரகசிய உரசல்களிலும் கரைந்து கனிந்து மகிழ்ந்து அவனருகில் அமர்ந்திருந்தாள் அனுராதா.
என்னதான் இருந்தாலும் நண்பனின் திருமணத்தை பார்க்காமல் போவதற்கு மனம் ஒப்பவில்லை கீதாவுக்கு. ரகுவும் ஸ்வேதாவும் கூட வந்திருந்தனர் திருமணதிற்கு. பெரியப்பா மேடை மேல் இருக்க கீழேயே அமர்ந்திருந்தாள் கீதா.
தாலி கட்டும் நேரம் நெருங்க ஹரிஷின் அத்தையிடமிருந்து கீதாவுக்கு அழைப்பு. மேடை மேலிருந்து ‘கையசைத்து அழைத்தார் அவளை. ‘மேலே வா.’
‘நானா வேண்டாம்’ கொஞ்சம் கலக்கத்துடன் இடம் வலமாக தலை அசைத்தாள் கீதா. அவர் எதற்காக அழைக்கிறார் என்று புரிந்தது இவளுக்கு.
விடவில்லை அவர். மறுபடியும் அவர் அழைக்க, அங்கே இருந்தவர்கள் எல்லாரும் இவளையே பார்க்க, ‘உங்களை மேலே கூப்பிடறாங்க’ ஓரிருவர் சொல்ல வேறு வழி இல்லாமல் மேடை ஏறினாள் கீதா.
‘வா வந்து நில்லு வா. நீதான் தாலி முடியணும்’ இது அத்தை.