(Reading time: 26 - 52 minutes)

எதிரணி தலைவனுடன் டாஸ் போட வந்து நின்றான் ஹரிஷ். அப்பாவின் முகத்தில் வார்தையில் வடிக்க முடியாத ஒரு பெருமிதம்.

காசு சுண்டப்பட அது தரையில் வந்து விழுந்த நொடியில் வி.ஐ.பி அரங்கில் வந்து அமர்ந்தாள் அனுராதா. அவளுடன் ரகுவும், ஸ்வேதாவும் கூட. அவர்களுக்கு இடப்பக்கம் இருந்த வரிசையில் நான்கு இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்தார் சுவாமிநாதன்.

‘தோல்வி!’ டாசில் தோற்றிருந்தான் ஹரிஷ். இவள் முகம் சட்டென வற்றிப்போனது. எதிரணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து இருந்தது. அன்றைய நிலவரப்படி முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம்..

ரசிகர்களிடம் கொஞ்சம் ஏமாற்றம் பரவ டாசில் தோற்றத்தில் அப்பாவின் முகத்தில் இருந்த புன்னகையுமே மறைந்து போயிருந்தது. நிறைய யோசனை நிறைய கணக்குகளுடன் ஹரிஷ் திரும்ப தன்னையும் அறியாமல் அவன் விழிகள் சென்று விழுந்தன அவள் மீது.   

‘ஹேய் அனும்மா..’ அவன் உதடுகள் மெதுவாய் உச்சரிக்க முழுமதியாய் மலர்ந்தது அவன் முகம். இரண்டு மாதங்களாகிறது அவளை பார்த்து, அவளுடன் பேசி.

‘இரண்டு மாதங்களில் இப்படி இளைத்து போய் விட்டதே என் அனும்மா’ என்று அவனுக்கு தோன்ற அதே எண்ணம்தான் அவளுக்கும்.

அவனது  முக மலர்ச்சியை பார்த்தவராக அப்பா அந்த பக்கம் திரும்ப அப்போதுதான் கவனித்தார் அவளை. அவளும் அதே நேரத்தில் அவர் பக்கம் திரும்ப துளியிலும் துளி கோபம் கூட இல்லாத மிக அழகான புன்னகை அவள் முகத்தில்.

உணர்வுகள் துடைத்த பாவத்துடனே அவளை பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டார் சுவாமிநாதன். அதே நேரத்தில் அவனும் அப்பாவை பார்த்துவிட அவர்கள் திருமண நாளின் நினைவுகளே மூவர் மனதிலும்.

சரி சீக்கிரம் வாடி பொண்டாட்டி. நான் வெயிட் பண்ணிட்டே இருக்கேன்’ அவன் சந்தோஷ குரலில் சொன்னானே அப்போது அவனும் அறிந்திருக்கவில்லை அதன் பிறகு காத்திருந்த பூகம்பங்களை.

காரில் அவளுடன் பயணித்துக்கொண்டிருந்த ஷங்கரும் அறியவில்லை. ஒரு போலிஸ் அதிகாரியாக அவன் நியாயமாக செய்து வைத்திருந்த ஒரு காரியம் அவனுக்கு எதிராக திரும்பி நிற்கும் என நினைக்கவில்லை அவன்.

அந்த நெடுஞ்சாலையில் இவர்கள் டேக்ஸி நகர்ந்துக்கொண்டிருக்க அதை முந்திக்கொண்டு சென்ற ஒரு போலிஸ் வாகனம் அவர்கள் வாகனத்துக்கு முன்னால் சென்று வழியை மறித்துக்கொண்டு நின்றது.

நின்றது இவர்களது டேக்ஸி. பெண்கள் இருவரும் உள்ளேயே அமர்ந்திருக்க புருவங்கள் நெறிபட இறங்கினான் ஷங்கர்.

‘சென்னை போலிஸ் கமிஷனர் உங்களை கூட்டிட்டு வர சொன்னார். வண்டியிலே ஏறுங்க’ என்றான் அந்த வண்டியிலிருந்து. காவல்துறை உடையுடன் இறங்கிய ஒருவன்.

‘கமிஷனரா என்ன விஷயமா கூட்டிட்டு வர சொன்னார்’ முகம் நிறைய கேள்விகளுடன் அவர்களை பார்த்தான். அவர்கள் பேசிய விதத்தில் இருந்தே நிச்சயமாய் வந்தவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் இல்லை என ஓலமிட்டது அவனது போலிஸ் மூளை.

‘அதெல்லாம் தெரியலை சார். அங்கே வந்து பேசிக்கோங்க. வண்டியிலே ஏறுங்க’ அவன் சொல்ல

‘நான் கமிஷனருக்கு போன்லே பேசிக்கறேன்’ என்றபடியே இவன் கைப்பேசியை தேட அது அவனிடம் இல்லை. அது டாக்சியில் அல்லவா கிடந்தது?’ அவன் யோசித்தபடியே திரும்ப அவன் முதுகில் பதிந்தது ஒரு துப்பாக்கி.

‘வண்டியிலே ஏறுடாங்கிறேன் என்னமோ கதை பேசுற?’ அவனை அழுத்தமாக மிரட்டியது பின்னாலிருந்தவனின் குரல். அந்த இருளில் இவனை ஒருவன் மிரட்டுகிறான் என்ற சந்தேகம் கூட வரவில்லை அனுவுக்கும் கீதாவுக்கும். இப்போது ஷங்கரின் துப்பாக்கி கூட அவன் கைவசம் இல்லை.

‘மரியாதையா இப்போ நீ அவங்ககிட்டே போய் நான் முக்கியமான வேலையா நான் கிளம்பறேன்னு சொல்லிட்டு நீ எங்க கூட வரலை நான் பேச மாட்டேன் என் துப்பாக்கிதான் பேசும்’ என்று துப்பாக்கியை வைத்து அவனை நகர்த்திக்கொண்டே இவர்கள் டேக்ஸி அருகில் வந்தான் அவன்.

கீதாவின் முகம் பார்த்தான் ஷங்கர். அந்த இருளில் அவன் முகபாவத்தை  வைத்தெல்லாம் எதையும் கணிக்க தெரியவில்லை அவளுக்கு.

‘ஒரு முக்கியமான விஷயமா  நான் இவங்க கூட போய் கமிஷனரை பார்த்திட்டு வரேன். நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க’ என்றான் இயலாமை அழுத்தும் குரலில்.

‘நீங்க இல்லாம நான் மட்டும் எப்படி அங்கே? அப்படி என்ன முக்கியமான வேலை?’ கீதா தவிப்புடன் கேட்க

‘புரிஞ்சுக்கோ. இப்போ நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க. அதுதான் நல்லது’ என்றான் அழுத்தமாக. அவர்கள் இருவரையும் எந்த ஆபத்தும் தொட்டு விடக்கூடாது என்பதே அவனது அப்போதைய கவலையாக இருந்தது.

வேறு வழி இல்லமால் இவர்கள் டேக்சி நகர அவனை துப்பாக்கியுடன் நகர்த்திக்கொண்டு நகர்ந்தான் வந்தவன். கடந்து போகும் டாக்சியை இயலாமையோடு பார்த்துக்கொண்டே நின்றான் ஷங்கர் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.