இரண்டு மூன்று நாட்களாகவே அவளையும் அழைத்துக்கொண்டேதான் இருக்கிறான் உடன் வரச்சொல்லி. நீ வரலன்னா நானும் போக மாட்டேன் என்று கூட சொல்லிக்கொண்டிருக்கிறான்..
வேண்டாம் வேண்டாம் என நினைத்தாலும் மனம் கேட்கவில்லை.
‘அவன் இத்தனை நேரம் ஹரிஷை போல் விளையாடிக்கொண்டிருக்க வேண்டும். அவளுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து விட்டு. ஒரு தனியார் நிறுவனத்தில் கிடைத்திருக்கும் வேலைக்கு செல்ல தயாராகிக்கொண்டிருக்கிறான்.
இப்போது ஹரிஷ் விளையாடும் ஆட்டத்துக்கு சென்று அவனை உற்சாகப்படுத்த வேண்டுமென்று ஒரு ஆசை ஆவனுக்கு. அதையும் கெடுத்துவிட வேண்டுமா என்று ஒரு தவிப்பு அவளிடத்தில். அதனாலேயே கிளம்பிக்கொண்டிருந்தாள் அவள்.
அதே நேரத்தில் ஹரிஷின் தந்தையும் கிளம்பிக்கொண்டிருந்தார் பெங்களூருக்கு.
அவர்கள் வீட்டு கூடத்தின் சுவற்றில் ஹரிஷும் அனுவும் அவர்கள் திருமண வரவேற்பில் ஒன்றாக நிற்கும் புகைப்படம். இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்து பூரித்து பொங்கும் சிரிப்புடன் அவன் கரத்தை இவள் கரம் சுற்றி வளைத்து, அவன் தோளில் லேசாக தலை சாய்ந்து நிற்கும் புகைப்படம்
‘அவர்கள் திருமணம் முடிந்து மறுநாள் வரவேற்பு நடந்த நேரத்தில் அத்தனை அழுத்தம் அவர்கள் இருவரின் மனதிலும். அதற்கு இவரும் ஒரு காரணம்தான். இருந்தாலும் அவர்கள் இருவரிடத்திலும் முகம் கொள்ளா சந்தோஷமும், சிரிப்பும்.
‘எது வந்த போதும், என்ன நிகழ்ந்த போதும் உனக்கென நான் எனக்கென நீ’ என்பதாய் ஒரு நெருக்கம் இருவரிடத்திலும்.
என்னதான் இவர் தனக்கு எந்த உணர்வும் இல்லை என்று காட்டிக்கொண்டாலும், விறைப்பாக நடந்துக்கொண்டாலும் இந்த புகைப்படத்தை பார்த்த மாத்திரத்திலேயே அவர் உள்ளம் நிறைந்துதான் போகிறது’. ஹரிஷுக்காகவே பிறந்தவள் அனுராதா என திரும்ப திரும்ப பறைசாற்றுகிறது அவர் உள்ளம்.
இரண்டு நாட்களாக அவரை இறுதி ஆட்டத்துக்கு போக சொல்லி வறுபுறுத்திக்கொண்டே இருக்கிறாள் பெரிய மருமகள். இவர் தான் இறங்கி வருவதாக இல்லை. அவர் அனுமதி இல்லாமேலே அவர் போவதற்கான ஏற்பாடுகளையும் செய்தும் விட்டிருந்தாள். இப்போது போய்விட்டு வந்தால் என்ன என்று இவருக்கும் தோன்றுகிறது.
அவர் மனம் முழுவதும் அனுராதா ஆட்சி செய்துக்கொண்டிருந்தாள். ஒரு வகையில் அவளை பார்த்து கொஞ்சம் பிரமிப்பும் கூட. வலைதளங்களில் அவளை பற்றிய விமர்சனங்கள் வருவதும் அவருக்கு தெரியும். ஆனாலும் கொஞ்சமும் தனது உறுதியிலிருந்து அவள் மாறவில்லை. இந்த நிமிடம் வரை அவள் ஹரிஷுடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்பது அவருக்கு உறுதியாக தெரியும்.
‘நடந்த நிகழ்வுகளால் நியாயமாக ஹரிஷும் அவரிடம் கோபம் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவனும் எப்போதும் போலவே இருக்கிறான் அவரிடத்தில். அதற்கும் அவளே காரணமாக இருக்க கூடும். அப்பாவிடம் கோபத்தை காட்டாதே என அவள்தான் சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டும்’
‘இருந்தாலும் அவளை மறுபடியும் வீட்டுக்குள் அழைத்துக்கொள்ள, அவள் முன் சென்று வீட்டிற்கு வா என்று சொல்ல அவரது சுயகௌரவம் இடம் கொடுக்கவில்லை. இது அவளது வீடுதானே. வேண்டுமென்றால் அவளே வரட்டுமே என்றே தோன்றியது. யோசித்துக்கொண்டே அவர் அந்த புகைப்படத்தையே பார்த்துகொண்டு நிற்க
‘கிளம்பிட்டீங்களா மாமா? அவரை கலைத்து கேட்டாள் அவரது பெரிய மருமகள். ‘வரும்போது நீங்க ரெண்டு பேரையும் வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுங்க. நான் ஆரத்தி கலந்து வெச்சு ரெடியா இருப்பேன்’
‘என்னது ரெண்டு பேரையுமா? அதெல்லாம் நடக்காது’ என்றார் முகத்தை அழுத்தமாக வைத்துக்கொண்டு.
‘அதெல்லாம் நடக்கும் கண்டிப்பா அனு ஃபைனல்ஸ் வருவா. அவளை அப்படியே கையோட கூட்டிட்டு வந்திடுங்க’ சொல்லிவிட்டு நிற்காமல் நகர்ந்துவிட்டாள் அவள்.
மறுநாள் மாலை. மாலை ஏழு மணிக்கு துவங்க இருந்தது ஆட்டம்.
இறுதி ஆட்டத்துக்கு இவனை அணித்தலைவனாக அறிவித்ததில் இரு விதமான விமர்சனங்களும் வந்துக்கொண்டிருந்தன. அவனுக்கு அனுபவம் இல்லை என்றும் சிலர் சொல்லிக்கொண்டிருந்தனர் வலைதளங்களில்.
அவனுக்கு பதற்றம் இல்லை என்றாலும் அனுவுக்கு நிறைய இருந்தது. அவன் ஜெயிக்க வேண்டும். தான் ஒரு சிறந்த அணித்தலைவன்தான் என நிரூபித்து விட வேண்டும். வேண்டிக்கொண்டே இருந்தாள் அவள்.
ஏதோ ஒரு பெரிய திருவிழாவுக்கு இணையான கோலாகலத்துடன் மைதானம் நிரம்பி இருக்க, வி.ஐ.பி அரங்கில் வந்து அமர்ந்தார் சுவாமிநாதன். அவர் ஹரிஷின் தந்தை என்பதால் அவருக்கு அங்கே நிறையவே மரியாதை. மகன் விளையாடும் போது மைதானத்தில் அவர் வந்து அமர்வதும் இதுவே முதல் முறை.