(Reading time: 26 - 52 minutes)

‘நான் இங்கே இறங்கிக்கவா? சொல்லு. என்ன செய்ய இப்போ’ தவித்தாள் கீதா. சத்தியமாக உள்ளே சென்று அவர்கள் இருவருக்கும் பிரச்சனைகளை கொடுக்கும் எண்ணம் இல்லை கீதாவுக்கு.

ஆனால் அந்த இருளில் அவளை மட்டும் இறக்கிவிட்டுவிட்டு இவள் உள்ளே செல்ல கண்டிப்பாக மனம் ஒப்பவில்லை அனுவுக்கு.

‘இல்ல நீங்களும் வாங்க உள்ளே’ என்றாள் ஒரு முடிவுடன்.

தான் செய்வது சுவாமிநாதனுக்கு பிடிக்காது ஏன் ஹரிஷுக்கே பிடிக்காது என நன்றாக தெரியும் அவளுக்கு. ஆனாலும் அந்த சூழ்நிலையில் இதை தவிர வேறே வழியும் இல்லை அவளுக்கு.

டாக்சி அந்த பெரிய தோட்டத்தை கடந்து அந்த பெரிய பங்களாவின் போர்டிக்கோவை தொட்ட வேளையில் சரியாக முகம் நிறைய பூரிப்புடன் வெளியே வந்தான் ஹரிஷ்.  அவள் கீழே இறங்க

‘வெல்கம். வெல்கம் மேடம் ’என இவன் அவள் அருகில் ஓடி வர’ தயக்கமே வடிவமாக கீழே இறங்கினாள் கீதா. மொத்தமாய் மாறிப்போனது ஹரிஷின் முகம். கேள்வியாக  அனுராதாவின் முகம் பார்த்தான் அவன்.

‘ஹரிஷ் நான் உள்ளே போய் எல்லாம் சொல்றேன். ப்ளீஸ்...’ அனு கெஞ்ச இப்போது தோழியின் முகம் பார்த்தான் ஹரிஷ்.

அதில் என்ன செய்வது என்றறியாத ஒரு குழப்பம். நிச்சியமாக இதில் எந்த தப்பான உள் நோக்கமோ இல்லை இவர்களை அவமான படுத்தும் எண்ணமோ இல்லை என்று புரிந்தது அவனுக்கு.

இந்த நேரத்தில் அவளை வெளியே போக சொல்லி அங்கே எல்லார் முன்னிலையிலும் ஒரு நாடகத்தை அரங்கேற்றும் எண்ணமும் கண்டிப்பாக இவனுக்கு இல்லை.

ஏற்கனவே பெண் வீட்டிலிருந்து யாரும் ஏன் வரவில்லை என்று ஆயிரம் கேள்விகளும், கிசுகிசுப்புக்களும் அங்கே பரவிக்கிடந்தன. ஏதேதோ சொல்லி சமாளித்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் அதனோடு இதனையும் சேர்க்க அவன் விரும்பவில்லை. எல்லாவற்றக்கும் மேலாக அவனுக்கு முக்கியம் அவனது அனும்மாவின் புன்னகை மட்டுமே.

வேலையாட்கள் வந்து அவர்கள் பொருட்களை எடுத்துக்கொள்ள, டாக்சி டிரைவர் ஷங்கரின் கைப்பேசியை கொடுக்க அப்போதுதான் லேசாக சந்தேகம் துளிர் விட்டது கீதாவினுள்ளே. கைப்பேசியை கூட மறந்துவிடும் அளவுக்கு அப்படி என்ன அவசரம் அவனுக்கு?

‘சரி உள்ளே வா அனும்மா’ என்றபடி நடந்தான் ஹரிஷ். அவன் பின்னால் நடந்தனர் இருவரும்.

நேராக மருத்துவமனையிலிருந்து கிளம்பி இருந்தனர் இருவரும். அப்போது இருந்த பரபரப்பில் எனது திருமணத்திற்கு அல்லவா கிளம்புகிறேன் உடை மாற்றிக்கொண்டு, கொஞ்சமாய் அலங்கரித்துக்கொண்டாவது கிளம்ப வேண்டுமென்ற எண்ணம் கூட தோன்றவில்லை அவளுக்கு. விமானத்தில் அணிந்து வந்த அந்த சல்வாருடனே வந்திருந்தாள் அனுராதா.

அவர்கள் உள்ளே நுழைய அவர்களை திருமணத்திற்கு வந்த உறவினர்கள் எல்லாரும் சூழ்ந்துக்கொள்ள அப்போதுதான்தான் செய்த தவறு உரைத்தது அவளுக்கு. பணமும் அந்தஸ்தும் கௌரவமும் உடைகளும் நகைகளுமே பறைசாற்ற தான் செய்த முதல் தவறு புரிந்தது அனுராதாவுக்கு.

அறிமுக படலம் நடக்க ஆரம்பித்தது. கீதாவையும் சேர்த்து அறிமுக படுத்தி வைக்க வேண்டிய சூழ்நிலை  அவளுடயதானது.

‘அட உங்க அண்ணியா?’ என்றார் அவன் அத்தை. ‘அப்போ நம்ம ஹரிஷுக்கு தங்கை முறையாச்சு. தாலி முடிய ஆள் இல்லையேன்னு நினைச்சேன். எங்க வீட்டிலே எல்லாமே ஆம்பிளை தடியனுங்க’ சிரித்தார் அவர். அவருக்கென்ன தெரியும் இங்கே நடக்கும் கூத்தெல்லாம்.

இவள் அதிர்ந்து போக ஆடித்தான் போனாள் கீதா. சற்றே கலக்கத்துடன் அவள் நண்பனை பார்த்தாள் இவள். அவன் முகத்தில் கடுகளவும் சலனம் இல்லை. அவள் பக்கம் திரும்பவும் இல்லை.

தூரத்திலிருந்து இவர்களை பார்த்துக்கொண்டே இருந்தார் சுவாமிநாதன்.. இவள் தாத்தா பற்றிய கதை எல்லாம் அவர் அறிந்திருக்கவில்லை என்பது வேறு விஷயம். அவர்கள் டாக்சியில் வந்து இறங்கியதே அவருக்கு மிகப்பெரிய அவமானம்.

இதில் அவர்கள் வந்து நின்ற கோலம் அவருக்குள் இன்னமும் கோபத்தை கிளப்பியது. அதற்கு மேல் அங்கே நின்றிருந்த கீதா. பற்றி எரிந்தது அவர் மனம். மற்றவர்கள் எதிரில் எதையும் காட்டிக்கொள்ள விரும்பாமல் அவர்கள் அருகில் கூட வராமல் விலகி சென்றிருந்தார் அவர்.

அவர்களுக்கான அறைக்கு அழைத்து சென்றான் ஹரிஷ். உள்ளே நுழைந்தவுடன் அவன் கேட்ட முதல் கேள்வி

‘தாத்தாக்கு எப்படி இருக்கு அனும்மா?’ வியப்பின் உச்சிக்கு போய் விட்டிருந்தாள் அவள். இத்தனை நடந்துக்கொண்டிருக்கிறது இங்கே. இதையெல்லாம் விட்டு அவனால் எப்படி இப்படி ஒரு கேள்வியை கேட்க முடிகிறது?

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.