அனுராதாவும் அறியவில்லை அண்ணன் அப்படி ஒரு இக்கட்டில் மாட்டிக்கொண்டிருப்பதை. ஏனோ அந்த நிகழ்வை இப்போது நினைத்தாலும் உடல் நடுங்குகிறது அவளுக்கு.
இங்கே ஆட்டம் துவங்கி இருக்க எதிரணியின் ஆட்டம் சற்று பலமாகவே துவங்கி இருந்தது. இங்கே ரகுவின் கைகளை கோர்த்துக்கொண்டு ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தாள் ஸ்வேதா. அவனது அருகாமையில் அப்பாவின் நினைவுகள் அத்தனை அழுத்தவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
எதிரணி நான்கு ஓவர்கள் முடிந்திருந்த நிலையில் ஒரு விக்கெட்ட்டை கூட இழக்காமல் நாற்பது ரன்கள் எடுத்திருந்தது. இவர்களது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம். ஆனால் ஒரு கேப்டனாக அணியை மிக அழகாக ஊக்குவித்துக்கொண்டுதான் இருந்தான் ஹரிஷ்.
ஹரிஷின் சென்ற ஓவரில் எதிரணி மூன்று சிக்ஸர்கள் விளாசிவிட அவன் மீதுமே எரிச்சலில் இருந்தனர் ரசிகர்கள். இப்போது இரண்டாவது ஓவர் வீச வந்தான் ஹரிஷ். முதல் பந்தில் பந்து பறந்தது. சிக்ஸர்.
சற்றே தளர்ந்து நின்றான் ஹரிஷ். இடம் வலமாக தலை அசைத்துக்கொண்டார் சுவாமிநாதன். இப்போது அங்கிருந்த அந்த பெரிய திரையில் வந்தது அனுராதாவின் முகம். ஒரு முறை அதை திரும்பி பார்த்துக்கொண்டு மறுபடியும் அவன் பந்து வீச இப்போது நான்கு ரன்கள். எதிரணியின் ரசிகர்கள் மத்தியில் ஆனந்த கொண்டாட்டம்.
அடுத்த பந்தை இவன் மறுபடியும் வீச ஓடி வந்த வேளையில், அவளது முகம் மறுபடியும் திரையில். பேட்ஸ்மேன் அடித்த பந்து நேராக இவன் கைக்கு அருகில் வர ஏதோ ஒரு தடுமாற்றத்தில் நழுவியது பந்து. அழகான கேட்ச்சை தவற விட்டிருந்தான் ஹரிஷ்.
இப்போது ரசிகர்களின் ஏமாற்றம் உச்சத்தை எட்டி இருக்க, இவள் முகத்திலும் நிறையவே குழப்ப ரேகைகள். ‘என்னவாயிற்று இவனுக்கு?’ அவனது அந்த ஓவர் முடிந்திருக்க அடுத்த ஓவரின் இரண்டு மூன்று பந்துகள் வீசப்பட்டிருக்க அப்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்தது அந்த அட்டை. ‘கோ அவே அனுராதா’
அது அப்படியே அந்த பெரிய திரையில் தெரிய சற்றே திகைத்துப்போனாள் அனுராதா. கொஞ்ச நாட்களாகவே அவள் மீது அவன் ரசிகர்களுக்கு கோபம் என்று தெரியும் அவளுக்கு. ஆனால் இப்படி வெளியே போ என சொல்வார்கள் என நினைக்கவில்லை அவள்.
‘எப்படி இப்படி மனசாட்சி இல்லாம ஹரிஷை விட்டு இருக்கீங்க? ஹீ லவ்ஸ் யூ எ லாட் யூ நோ? ஹரிஷ் தகுதிக்கு நீங்க ஒண்ணுமே இல்லை தெரியுமா?’ இவள் விமானத்தில் வரும் பயணிகள் கூட ஒரு சில நேரம் இவளிடம் .வெடிப்பார்கள். அதை ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து விடுவாள் அனுராதா.
ஆனால் இது அத்தனை பேர் மத்தியிலும் இப்படி ஒன்று நடக்க அவமானத்தில் மனம் கசங்கி கூசியது. அனுராதாவுக்கு. ‘பேசாமல் இங்கிருந்து கிளம்பி விடுவோமா?’ என்றுக்கூட தோன்றியது ஒரு முறை.
அந்த அட்டையை கவனித்த ஹரிஷின் முகத்திலும் ரௌத்திரம்.
‘யார்? என் மனைவிக்கு எதிராக இப்படி செய்ய யாருக்கு தைரியம்?’ ரத்தம் கொதித்தது.
‘பெயர் சொல்லும் பிரபலமாக இருப்பதில் இருக்கும் மிகப்பெரிய அசௌகரியமா இது? பொங்கியது அவன் உள்ளம்.
ஆனாலும் இப்போது எதையும் செய்து விட முடியாத கையறு நிலை. கோபத்தை காட்டும் சூழ்நிலை அங்கே இல்லை இப்போது. அணித்தலைவன் என்ற மிகப்பெரிய பொறுப்பு வேறு அவன் மீது அமர்ந்திருக்கிறது. அப்படியே சில நொடிகள் இறுகி நின்றவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.
‘இப்போது அணியின் வெற்றி ஒன்றே குறிக்கோள். அதன் பிறகு எல்லாவற்றையும் சரி செய்யலாம்’
அந்த ஓவர் முடிந்திருக்க, அனு யோசனையுடனே தலை குனிந்து அமர்ந்திருக்க, அவள் விழிகளில் கண்ணீர் கோடுகள் சேர்ந்திருக்க ரகுவும் ஸ்வேதாவும் அவளை சமாதான படுத்திக்கொண்டிருக்க மெதுவாக திரும்பி அவள் பக்கம் பார்த்தார் சுவாமிநாதன். அவளது கண்ணீர் அவரை என்னவோ செய்தது.
ஹரிஷின் மீது உயிரையே வைத்திருக்கும் பெண் இவள் என்று நன்றாக அறிந்தவர்தானே சுவாமிநாதன். ‘ஒரு வகையில் அவளது இந்த அவமானத்திற்கு நானும்தானே காரணம்?’ உறுத்தியது அவருக்கு.
‘இவர்கள் இருவரும் தள்ளி தள்ளி அமர்ந்திருப்பதும் கூட பலருக்கு பல விஷயங்களை சொல்லும்’ என்றும் புரிந்தது அவருக்கு. அதே நேரத்தில் இன்னமும் பழைய நினைவுகளும் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது.
இவர்கள் திருமணத்திற்கு முன் தினம் ஹரிஷின் வீட்டுக்கு அருகில் வந்துவிட்டு அவனை அழைத்தாள் அனு.
‘வீட்டுக்கு பக்கத்திலே வந்திட்டேன். இங்கே நிறைய ப்ரெஸ் இருக்காங்க. இப்போ என்ன செய்ய?.
‘நேரா காரோட உள்ளே வா. எங்கேயும் இறங்க வேண்டாம். இதோ நான் வெளியே வரேன்’ மகிழ்ச்சியுடன் சொன்னான் ஹரிஷ். காரினுள் கீதாவும் இருக்கிறாள் என்பதை அவனிடம் சொல்ல தவறியிருந்தாள் அவள்.