(Reading time: 28 - 55 minutes)

அவளின் தலையை அன்புடன் வருடிய வாரே, “என்ன டி இது எல்லாம். கண்டிப்பா நீ நார்மலா இல்ல அது மட்டும் என்னால் சொல்ல முடியும். மறைக்காமல் என் கிட்ட சொல்லு டி” என்றாள் திவ்யா.

“நான் விஷ்ணுவ லவ் பண்றேன் னு உன் கிட்ட எப்படிச் சொல்லுவேன். என் மன போராட்டத்தை உன் கிட்ட சொல்லிப் புரிய வைக்கிற நிலைமையில் நான் இல்ல. சொல்லி அழக் கூட எனக்குத் தெம்பு இல்லை” என்று மனதில் நினைத்துக் கொண்டு, “எனக்குத் தூக்கம் வருது டி, நான் தூங்கப் போறேன்” என்று மட்டும் கூறிவிட்டு, அருகில் இருந்த தலையணையை அணைத்தவாறே படுத்துக் கொண்டாள்.

“அமுக்குணி. தூங்குடி தூங்கு. எங்கே போயிட போற. உடம்பு சரியாகட்டும் கவனிச்சிக்கிறேன்” என்று மனதில் நினைத்துக் கொண்டு அருகில் படுத்தாள் திவ்யா. வேளைச் சோர்வால் சிறிது நேரத்தில் உறங்கியும் போனாள்.

அனுவிற்கு மட்டும் உறக்கம் பிடிக்கவில்லை. கண்களை மூடினால் விஷ்ணுவின் முகமே மனக் கண் முன் தோன்றியது. எவ்வளவோ முயன்றும் அதை மாற்ற முடியவில்லை. அது மட்டும் இல்லாமல் அவளுக்குள் வேறொரு கேள்வி “திபக்கை ஒரு நொடி கூட பார்க்க இயலவில்லை, குற்ற உணர்ச்சிக் கொன்று எடுக்கிறதே, இனி எப்படி அவனுடன் வாழ் நாள் முழுவதும் வாழப் போகிறோம்” என்பதுதான்.

அனைத்தையும் நினைத்துப் பார்க்க பார்க்க அனுவிற்கு அழுகையைத் தவிர வேறு எதுவும் வரவில்லை. திவ்யா அருகில் இருப்பதால் அழுவதை கட்டுப் படுத்தினாள்.

அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல், மெல்ல எழுந்து சென்று சன்னல் அருகில் அமர்ந்தாள். என்றுமே அழகாய் ஜொலிக்கும் நிலா கூட பொழிவு இழந்து காணப்படுவதாய் தோன்றியது. அந்த நிலவிலும் அவன் முகமே தெரிந்தது.

என்றோ எங்கோ படித்த கவிதை தான் அவளுக்கு ஞாபகம் வந்தது "காணும் இடம் எல்லாம் நீயே தெரிகிறாய்". பாவம் என்ன செய்வாள் பேதை.

கண்கள் கலங்கின (பெண்களுக்குக்  கண்ணீரை விட உற்ற தோழி யார்).

தூக்கம் பிடிக்காமல் அதே கொடுமையை அனுபவித்துக் கொண்டிருந்தான் விஷ்ணு.

அப்படியாக இருவருக்கும் கழிந்தது அந்த இரவு.

றுநாள் காலையில் விஷ்ணு, அனுவைப் பார்ப்பதற்காக அவளின் வீட்டிற்கு வந்தான். ஆனால் திவ்யா அனு தூங்கிக் கொண்டிருப்பதாக கூறவே அவள் உடல் நலனை மட்டும் விசாரித்து விட்டுக் கிளம்பினான்.

“ இன்னும் கல்யாணத்துக்கு 13 நாள் தாம்மா இருக்கு. இப்ப போய் இவ இப்படி உடம்பு சரியில்லாமல் படுத்திருக்கா”. என்று பார்வதி கவலையாக திவ்யாவிடம் கூறினார்.

“ஆண்டி அதெலாம் ஒண்ணும் இல்லை. அதான் மெடிஸின் கரைக்டா கொடுக்குறோம் இல்ல. சீக்கிரம் சரி ஆயிடுவா” என்றாள் திவ்யா அறுதலாக.

“இன்னைக்கு ரொம்ப நெருங்குனவங்களுக்கு பத்திரிக்கை வைக்கப் போகலாம் என்று இருந்தோம். இப்போ இவள பார்த்துக்கனுமே.” என்றார் பார்வதி கவலையாக.

“ஆண்டி நான் ஏற்கனவே ஆபிஸ்க்கு லீவ் சொல்லிட்டேன். நீங்கப் பத்திரிகை வைக்க போய்ட்டு வாங்க நான் அனுவ பார்த்துக்கிறேன்” என்றாள் திவ்யா.

“ரொம்ப தேங்க்ஸ் மா. என்ன விட இவங்க அப்பாதான் இவளை நெனச்சி கவல படுறாரு. எப்படியாவது இந்தக் கல்யாணம் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நடக்கனும் னு சொல்லிக்கிட்டே இருக்காரு. இனி எங்களுக்கு னு என்ன இருக்கு சொல்லு. இவள நல்ல படியா ஒருத்தர் கையில புடிச்சி குடுகனும் நு நெனைச்சோம். அதற்கு ஏத்தார் போல் திபக் தம்பி வந்துச்சு. நல்ல பையன், நல்ல குடும்பம். இவளும் சம்மதம் சொன்னதுல இவங்க அப்பாக்குதான் ரொம்ப சந்தோஷம். என் பொண்ணு சம்மதம் சொல்லிட்டா, இந்த கல்யாணத்த ஜாம் ஜாம் னு நடத்துறேன் பாரு நு காலுல சக்கரத்தை கட்டிட்டு சுத்திட்டு இருக்காரு” என்று தன் மனதில் இருந்ததை வெளிப்படையாக திவ்யாவிடம் கூறினார் பார்வதி. பார்வதியின் கண்களின் ஓரத்தில் சிரு துளி கண்ணீர்.

“என்ன ஆண்டி இதுகெல்லாம் போய் கண் கலங்கிட்டு. நீங்களும் அங்கிளிம் நினைக்கிற மாதிரி இந்தக் கல்யாணம் சிறப்பா எந்தப் பிரச்சனையும் இல்லாம நடக்கும். நீங்க கவலை படாம கல்யாண வேளையை கவனிங்க. நான் அவள பார்த்துக்கிறேன். நீங்க இப்படி எல்லாம் கவல படுறீங்க நு தெரிஞ்சாலே அனு ரொம்ப கவல படுவா” என்று திவ்யா பார்வதிக்கு ஆறுதலும் தெம்பும் கூறினாள்.

திவ்யா கூறியது சரிதான். அனு இவற்றை எல்லாம் கேட்டு அழுத்துக் கொண்டுதான் இருந்தாள்.  அவள் திருமணம்தான் அவர்கள் கனவு என்பது அவளுக்கும் தெரியும், பாவம் அவள் என்ன செய்வாள் அவளைக் கேட்டா காதல் அவளுள் நுழைந்தது.

சிறிது நேரத்திற்குப் பிறகு எதுவும் நடக்காதது போல் எழுந்து அன்றைய நாளைத் தொடங்கினாள். அவள் வீடே கல்யாண கலை பூண்டது. அன்று மாலை வழக்கம் போல் விஷ்ணுவும் அவளைப் பார்க்க வந்தான். திவ்யா உடன் இருந்ததால் இருவரும் எதையும் வெளிக்காட்டிக் கொல்லவில்லை. காதல் உணர்ச்சியில் அவளும் குற்ற உணர்ச்சியில் இவனும் ஒருவரை ஒருவர் அவ்வப்போது பார்த்துக் கொண்டனரே தவிர மனம் விட்டுப் பேச முடியவில்லை.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.