(Reading time: 35 - 70 minutes)

40. உன் நேசமதே.. என் சுவாசமாய்..!! - சித்ரா. வெ

love

ங்கா வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கங்கா அனுமதிக்கப்பட்டிருந்தாள். இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்ற பதிலோடு அவளுக்கு மருத்துவர்கள் சிகிச்சையை ஆரம்பித்தனர். கங்காவிற்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்ற வேண்டுதலோடு துஷ்யந்தும் வாணியும் உட்கார்ந்திருந்தனர்.

மருத்துவமனையிலேயே போலீஸுக்கு தகவல் அனுப்பப்பட, மருத்துவமனைக்கு நேராகவே போலீஸ் வந்திருந்தனர். கங்கா வீட்டில் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது இருவருக்கும் தெரியாது.. ஆனால் கனகா கங்காவை அறையில் பூட்டி வைத்திருந்ததையும், இவர்களை ஆரம்பத்தில் உள்ளே அனுமதிக்காததையும் குறித்து கனகா மீது சந்தேகம் இருப்பதாக கூறி, அங்கு நடந்ததை துஷ்யந்த் தெளிவாக கூறினான்.

இரவெல்லாம் சிகிச்சை நடைப்பெற்று விடியற்காலையில் தான் கங்காவின் உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவர்கள் கூறினார்கள். அப்போது தான் துஷ்யந்த் மனதில் நிம்மதியை உணர்ந்தான். கங்கா இப்போது மயக்கத்தில் இருப்பதாகவும், அப்படியே மயக்கம் தெளிந்தாலும் கயிறு தொண்டையை இறுக்கியதால், அவர்களால் இப்போது பேச முடியாது, நன்றாக பேச இரண்டு நாட்களாவது ஆகும். அதுவரையிலும் யாரும் அவர்களிடம் என்ன பிரச்சனை என்று கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் விளக்கினார்கள்.

காலையில் எழுந்ததும் தான் துஷ்யந்தும் வாணியும் வீட்டில் இல்லாததை அண்ணாமலை அறிந்துக் கொண்டார். அவர்கள் கங்காவை பார்க்க சென்றிருப்பார்களோ என்று அவர் சந்தேகப்பட்டார். அதற்குள் மேனேஜருக்கும் கனகாவின் மருமகள் மூலம் கங்கா வீட்டில் இரவு நடந்தது தெரிய வர, வேறு வழியில்லாமல் அவன் அண்ணாமலையிடம் அனைத்தையும் கூறினான்.

“டேய் உனக்கு அறிவு இருக்கா.. நேத்து நீ சொன்னதை கேட்டு, நம்ம ராஜா வாழ்க்கையில அந்த பொண்ணு இனி வராம இருக்க, ஊரை விட்டு அனுப்ப ஏதாவது செஞ்சிருப்பன்னு பார்த்தா, இப்படி செஞ்சு வச்சிருக்க, கஷ்டமான சூழ்நிலையிலும் நீ  கேக்கறப்பல்லாம் உனக்கு பணம் கொடுத்தேனடா.. அப்புறம் ஏன் உன்னோட புத்தி ஏன் இப்படி போகுது..

இப்போ அந்த பொண்ணுக்கு ஏதாவது ஆகிப் போச்சுன்னு வச்சிக்க, போலீஸ் எல்லாத்தையும் நோண்டி புளி கரைச்சிடுவானுங்கடா.. அப்புறம் நம்ம பண்ணி வச்ச வேலையெல்லாம் தெரிஞ்சிடும். போலீஸையும் கோர்ட்டையும் கூட சமாளிச்சிடலாம்.. ஆனா என்னோட அக்கா முகத்துல எப்படிடா முழிப்பேன்.. அப்புறம் என்னோட அக்கா பிள்ளைங்க கிட்ட எனக்கு என்ன மரியாதை, ராஜா வேற அந்த பொண்ணு கூட இருக்கான்.. அங்க என்ன நடக்குதோ தெரியல..” என்றவர், அசிங்கமான வார்த்தைகளை கொண்டு மேனேஜரை திட்டி தீர்த்தவர் அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார்.

அங்கே இன்னும் கங்கா கண் விழிக்கவில்லை. ஐ.சி.யூ விற்கு வெளியில் தவம் கிடந்த துஷ்யந்தின் அருகில் சென்றார். அருகில் இருந்த வாணியை எரித்து விடுவது போல் கோபமாக பார்த்தார். வாணி அந்த பார்வையில் பயந்தாலும், அருகில் துஷ்யந்த் இருந்ததால், கொஞ்சம் தைரியமாகவே நின்றார். துஷ்யந்திடம்  கோபத்தை மறைத்துக் கொண்டு பேசினார்.

“ராஜா.. உனக்கு என்னடா ஆச்சு.. இந்த பொண்ணை தேடிக்கிட்டு வந்திருக்க, சரி வந்த இடத்துல என்னமோ நடந்து போச்சு.. அந்த பொண்ணை ஹாஸ்பிட்டல் சேர்த்துட்டல்ல, அப்புறம் எதுக்கு இங்கேயே உக்கார்ந்திருக்க, வா வீட்டுக்கு போகலாம்.. இன்னைக்கு நாம சென்னைக்கு போகனும்டா.. அக்கா, விஜி, செல்வால்லாம் உன்னை பார்க்க ஆசையா இருக்காங்க.. நீ என்னடான்னா இங்க உக்கார்ந்திருக்க..”

“மாமா கங்கா இப்படி ஒரு நிலையில இருக்கும் போது என்னால எப்படி சென்னைக்கு போக முடியும்.. என்னால இப்போ எங்கேயும் வர முடியாது மாமா..”

“உன்னோட குடும்பத்தோட உனக்கு இந்த பொண்ணு தான் முக்கியமா? அவ எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சும் எதுக்குடா அவளுக்காக உருகுற..”

“மாமா கங்காவை தப்பா பேசாதீங்க.. நீங்க சொல்றதெல்லாம் நம்புற அளவுக்கு சின்ன குழந்தையில்லை. ஒருத்தரோட பழகிப் பார்த்தாலே அவங்க குணம் தெரிய வரும் மாமா.. அதுவும் இந்த 3 மாசம் கங்காவோட எனக்கு எப்படிப்பட உறவு இருந்துச்சுன்னு உங்களுக்கே தெரியும்.. அவளோட நடவடிக்கையை பார்க்கும் போது எனக்கு அவளை தெரியாதா?”

“அதுதாண்டா அவங்க திறமை.. நீ பணக்காரன்னு அவளுக்கு தெரியும்.. உன்னை வளைச்சு போட இப்படியெல்லாம் நடிக்கிறா போல..”

“மாமா நீங்க கங்காவை அனாவசியமா பேசறதை என்னால அனுமதிக்க முடியாது.. எனக்கு உங்களைப்பத்தியும் தெரியும்.. கங்காவைப்பத்தியும் தெரியும்.. கங்காவை என்கிட்ட இருந்து பிரிக்க நீங்க தான் இப்படியெல்லாம் கங்காவை தப்பா சொல்றீங்க.. இப்போ கங்காவோட நிலைமைக்கும் நீங்க தான் காரணமா இருப்பீங்களோன்னு தோனுது.. அப்படி மட்டும் இருந்துச்சு நான் அமைதியா போய்டுவேன்னு நினைச்சிடாதீங்க” என்று மிரட்டினான்.

அதில் அண்ணாமலை கொஞ்சம் பயந்து தான் போனார். அவனிடம் இன்னும் பேச பேச அவன் கங்கா பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவர், அமைதியாகிவிட்டார். இருந்தும் துஷ்யந்திற்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதே என்ற பயமும் மனதிற்குள் இருந்தது. அதற்கு மேல் ஒன்றும் பேசாமல் திரும்ப சென்றுவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.