(Reading time: 35 - 70 minutes)

ங்க மாமா சொன்னதை நம்பலையா? அப்போ உங்கக் கூட இந்த 3 மாசம் இருந்தது எதனாலன்னு நினைக்கிறீங்க?” அவன் மனதில் என்ன இருக்கிறது? என்பதை தெரிந்து கொள்வதற்காக கேட்டாள்.

“மாமா உன்னோட கஷ்டமான சூழ்நிலையை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாருன்னு தோனுது.. ஆனா உன்னோட கழுத்துல இருக்க தாலி” அதுக்கு மேல் கேட்க முடியாமல் நிறுத்திக் கொண்டான். அந்த தாலிக்கான அர்த்தத்தை அவள் வாயால் கேட்க நினைத்தான். ஆனால் அதை கட்டியவன் அவன் தான் என்று அவளால் தான் சொல்ல முடியாதே.. அது மட்டுமில்லாமல் அவனுடனான உறவு இதற்கு மேல் தொடர்வதையும் அவள் விரும்பவுமில்லை. அவன் பார்வையில் தன்னை தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்து, கழுத்தில் இருந்த தாலியை வெளியே எடுத்து கையில் எடுத்து பார்த்தவள், பின்..

“கல்யாணம்ங்கிற பேர்ல நான் ஏமாந்துப் போயிட்டேன்.. அன்பு, நேசம் இதை அடிப்படையா வச்சு தான் என்னோட கல்யாண வாழ்க்கை ஆரம்பிச்சுதுன்னு நான் நினைச்சேன்.. ஆனா அந்த கல்யாணமே வெறும் உடல் தேவைக்காக மட்டும் தான்.. அதுக்காக ஒரு நாடகம் தான் இந்த கல்யாணம்னு  கொஞ்சநாளிலேயே எனக்கு தெரிய வந்துடுச்சு.. அப்பவே என் கல்யாண வாழ்க்கையும் ஒரு முடிவுக்கு வந்துடுச்சு..” தன் வாழ்க்கையில் நடந்ததை கொஞ்சம் மேலோட்டமாக கூறினாள். ஆனால் துஷ்யந்தோ அவளை யாரோ காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிட்டார்களோ என்பது போல் சிந்திக்க ஆரம்பித்தான். அவள் வார்த்தைகளை இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்திருந்தால், அதற்கான அர்த்தத்தை அவனால் புரிந்துக் கொண்டிருக்க முடியும்.. ஆனால் அதற்குள் அவள் பேசிய அடுத்த வார்த்தைகளில் அதை யோசிக்காமல் விட்டுவிட்டான்.

“முடிஞ்சு போன வாழ்க்கையை தேடி பிடிக்க எனக்கு மனசில்ல.. அந்த நேரத்துல தங்கையோட ஆபரேஷன்க்கு எனக்கு பணம் தேவைப்பட்டது. அதுக்காக தான் உங்க மாமா சொன்னதுக்கு ஒத்துக்கிட்டேன்..” அவள் வாழ்க்கையில் நடந்ததை தான் கூறினாள். ஆனால் மாற்றி மாற்றி கூறினாள். அதில் அவளைப்பற்றி அவன் எப்படி நினைத்தாலும் பரவாயில்லை என்று தான் நினைத்தாள். அதைப்போலவே அவள் சொன்னதை வைத்து அவனும் இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று கோர்வையாக சில விஷயங்களை தீர்மானித்துக் கொண்டான். அவனுக்கு தான் அவர்கள் இருவருக்கும் நடந்த திருமணம் சுத்தமாக நினைவில்லையே.. ஒரு கனவுப் போல் கூட அது அவனுக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. அதனால் அவனால் இருவருக்கும் இடையில் திருமணம் என்ற பந்தம் இருக்கும் என்று அவன் நினைத்து பார்க்கவேயில்லை.

“என்னோட வாழ்க்கை தவறிப் போயிடுச்சு தான்.. அதுக்காக நான் தொடர்ந்து  இப்படி ஒரு கேவலமான வாழ்க்கை வாழ நினைக்கல.. ஆனா என்னோட அனுமதி கூட இல்லாம, என்னை இப்படி ஒரு வாழ்க்கைக்கு தள்ளி விட நினைக்கிறாங்க.. உரிமையானவங்கன்னு என்கூட யாரும் இல்லைங்கிறது அவங்களுக்கெல்லாம் ஈசியா ஆயிடுச்சு.. என்னை வச்சு அவங்க வசதியா வாழப் பார்க்கிறாங்க.. அந்த நேரத்துல எனக்கு இதை தவிர வேற வழி தெரியல.. பூட்டியிருக்க கதவை உடைச்சிட்டு கூட வெளிய வந்திருக்கலாம்.. அது ஒன்னும் அவ்வளவு ஸ்டாரங்கான கதவு கூட இல்ல.. அதேபோல அத்தையும் வயசானவங்க தான், அவங்களை சமாளிச்சிட்டு தப்பிச்சு வந்திருக்கலாம், ஆனா முதல்முறையா எதிர்காலத்தை நினைச்சு பயம் வந்துடுச்சு.. இன்னும் இது போல எத்தனை மனிதர்களை நான் கடந்து போகணுமோன்னு நினைச்சு பார்த்தப்போ, வாழறதை விட உயிரை விட்டுடலாம்னு தோனிடுச்சு..” அவனிடம் தான் சொல்கிறோம் என்று கூட தோன்றாமல், அவள் மனதிற்குள் இருந்த பயத்தையயெல்லாம் அவனிடம் கொட்டினாள்.  கண்களில் அவளை மீறி கண்ணீர் வந்து கொண்டிருந்தது.

அவள்  கண்ணீரை அவனால் பார்க்க முடியவில்லை. அவள் கண்ணீருக்கு காரணமானவர்கள் மீது அவனுக்கு அளவுக்கதிகமாக கோபம் எழுந்தது. ஆனால் அதில் அவனுக்கு தான் அதிக பங்கு இருக்கிறது என்பதை தான் அவன் அறியவில்லை.  அது தெரியாமல் அவர்களையெல்லாம் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்று கவலைக் கொண்டான். அதை வருத்தத்தோடு அவளிடமும் கூறினான். அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியாத காரணத்தையும் கூறினான்.அவளுக்குமே அது புரிந்து தான் இருந்தது.. இனி அவர்களால் பிரச்சனையில்லை என்ற வரையில் கொஞ்சம் நிம்மதியடைந்தாள்.

“ரொம்ப நன்றி.. இனி அவங்க தொந்தரவு இல்லன்னா சந்தோஷம் தான்.. இனி என்னை நான் கவனமா பார்த்துப்பேன்.. ஏற்கனவே 3 நாள் இங்கேயே இருந்துட்டீங்க.. டாக்டர் இன்னைக்கு டிஸ்சார்ஜ் ஆகலாம்னு சொல்லிட்டாரு.  இதுக்குப்பிறகாவது உங்க வேலையை பாருங்க..”

“அப்போ நீ..”

“எனக்குன்னு ஏதாவது ஒரு வேலையை தேடிக்கிட்டா போதும்.. எனக்கு அது உபயோகமா இருக்கும்..” என்றாளே தவிர, வேறு ஊருக்கு செல்வதை பற்றி கூறவில்லை.

“என்னத்தான் அவங்க பிரச்சனை   பண்ணமாட்டாங்கன்னாலும் நீ இங்க தனியா இருப்பது நல்லது கிடையாது.. நீ தனியா இருப்பது தெரிந்து அவங்க திரும்ப ஏதாவது பிரச்சனை செஞ்சா.. அதனால நீ இங்க இருக்க வேண்டாம்..”

“அதுக்கு என்ன பண்ண முடியும்.. சாகப் போனவளையும் காப்பாத்தீட்டீங்க.. இப்போ தனியா போராடித்தானே ஆகணும்..”

“நீ தனியா போராட வேண்டாம்.. நான் உன் கூட இருப்பேன்.. நீ என்னோட சென்னைக்கு வா.. நான் உன்னை பார்த்துப்பேன்..”

“எப்படி? என்னை காலம் முழுக்க உங்க சின்ன வீடா வச்சிக்கலாம்னு நினைக்கறீங்களா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.