(Reading time: 35 - 70 minutes)

ரு சக மனிதனாக அவன் உதவி செய்வதாக கூறினாலும், அவள் ஒத்துக் கொண்ட பின், வாணியை அவளோடு துணை இருக்குமாறு வாணியின் உதவியை நாடினான். அவளை தனியாக விட அவன் மனது கேட்கவில்லை. அவளின் பயத்தை தான் தெளிவாக அவனிடம் கூறியிருந்தாளே..  அதுகுறித்தே இப்படி ஒரு முடிவு எடுத்தான். வாணியும் அதற்கு ஒத்துக் கொண்டார். ஆனால் கங்கா அதற்கு சீக்கிரத்தில் ஒத்துக் கொள்ளவில்லை. அவன் ஏதோ ஒரு நோக்கத்தோடு இதை செய்வதாகவே அவளுக்கு தோன்றியது.  இந்த விஷயத்தில் வாணி தான் அவளுக்கு புரிய வைத்தார். “நானும் ஒரு அநாதை தானே நான் உன்னோட இருக்கணும்னு நினைக்கிறேன்.. அது உனக்கு பிடிக்கலையா?” என்றுக் கேட்டார்.

வாணி இப்படி பேசியதும் கங்காவால் மறுக்க முடியவில்லை. “துஷ்யந்தோட ஆளா நீங்க என்கூட இல்லாம, என்னோட முடிவுகளுக்கு ஆதரவா, என்னோட நலம் விரும்பியா நீங்க என்னோட இருக்கணும்..” என்ற அவளின் முடிவிற்கு வாணி ஒத்துக் கொண்ட பின்னர் தான் கங்கா வாணியுடன் இருக்க சம்மதித்தாள்.

கங்காவையும் சென்னைக்கு அழைத்து வரப்போவதாக துஷ்யந்த் அண்ணாமலையிடம் கூறினான். இப்போது கங்காவிற்கு எதிராக என்ன பேசினாலும் அதை துஷ்யந்த் கேக்க போவதில்லை என்பதை அண்ணாமலை உணர்ந்து இருந்தார். இன்னும் கங்காவின் மேல் உள்ள மயக்கம் போகவில்லை போலும், வெகு சீக்கிரத்தில் அவனுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்து விட்டால், பின் தானாக கங்காவின் மீது உள்ள மயக்கம் தீர்ந்துவிடும் என்று நினைத்தார். அதை நேரடியாக கங்காவிடமும் கூறினார்.

மருத்துவமனையில் இருந்து கங்காவை அழைத்து வந்ததும் நேராக அவள் அவர்கள் இருந்த வீட்டிற்கு தான் சென்றாள். தன்னுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு செல்லவே தான் அங்கு வந்திருந்தாள். துஷ்யந்த் போலீஸுக்கு போனதுமே, கனகா அந்த வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார். தன் மகன், மருமகளோடும் அவர் செல்லவில்லை. அவர் எங்கே என்றும் கங்கா யோசிக்க தயாரில்லை.  வாணியை தான் துணைக்கு அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்திருந்தாள். துஷ்யந்த் பங்களாவிற்கு சென்றிருந்தான். அப்போது தான் அண்ணாமலை இங்கே வீட்டில் கங்காவை பார்த்து பேச வந்தார்.

“எங்க ராஜாக்கு உன் மேல இருக்க மயக்கம் இன்னும் போகல போல.. 3 மாசம் அனுபவிச்ச சுகமாச்சே, அதை விட மனசில்லை போல.. சரி அவனுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் எப்படியும் இருந்துக்கட்டும்னு தான் உன்னை சென்னைக்கு கூட்டிட்டு வரப்போறேன்னு அவன் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டேன்.. நான் அமைதியா இருக்கேன்னு தெரிஞ்சு நீ அவன்கிட்ட உண்மையை சொல்லலாம்னு நினைச்சன்னு வச்சிக்க.. அதுதான் உனக்கும் உன் தங்கச்சிக்கும் கடைசி நாளா இருக்கும்” என்று மிரட்டினார். வாணியிடமும் அதை தான் சொல்லிச் சென்றார்.

அண்ணாமலை பேசியது கங்காவிற்கு அப்படி ஒரு அருவருப்பை கொடுத்தது. ஏன் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவை உடல் சார்ந்து மட்டுமே யோசிக்கிறார்கள் என்று நினைக்கும் போதே கோபமாக வந்தது. துஷ்யந்தோடு சென்னைக்கு செல்லத்தான் வேண்டுமா? என்ற கேள்வி திரும்பவும் தோன்றியது. ஆனாலும் துஷ்யந்த் பேசியதும், வாணியின் சமாதானத்தையும் ஏற்று அவள் சென்னைக்கு கிளம்பினாள்.

குன்னூரில் இருந்து காரில் தான் கிளம்பினர். அண்ணாமலைக்கு கங்காவோடு சேர்ந்து வர விருப்பமில்லை. அதனால் அவர் தனியாக வேறொரு கார் ஏற்பாடு செய்து கிளம்பினார்.  இவர்கள் மூவரும் ஒரு காரில் பயணித்தனர். சென்னையில் இறங்கியதுமே முதலில் யமுனாவை பார்த்துவிட்டு செல்லலாம் என்று கங்கா நினைத்தாள். அதை துஷ்யந்திடம் தெரிவித்தாள். அவனும் அதற்கு சம்மதித்தான்.

அண்ணாமலைக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. நேரடியாக கங்காவையும் வாணியையும் மிரட்டினாலும், உள்ளுக்குள்ளே துஷ்யந்திற்கு உண்மை தெரிந்துவிடுமோ என்று பயமாக இருந்தது. இப்போதே கங்காவிற்காக இவ்வளவு பார்ப்பவன், உண்மை தெரிந்தால் என்ன செய்வானோ என்று நினைப்பே அவருக்கு எரிச்சலாக இருந்தது. “வீட்டுக்கு நாம ஒன்னா தான் போகணும்.. அதனால நான் முன்ன போனாலும் வீட்டுக்கு போக முடியாது..  உன் வேலையை முடிச்சிட்டு வீட்டுக்கு வரும்போது சொல்லு, நான் அப்போ உன்கூட வரேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்.

அந்தோனியார் இல்லத்திற்கு சென்றதும் முதலில் மதர் ஜெர்மனை தான் மூவரும் சென்று பார்த்தனர். வாணியுடன் தான் இனி தான் இருக்கப் போவதாகவும், துஷ்யந்த் வேலை விஷயத்தில் உதவ போவதாக சொன்னவள், இவர்கள் குன்னூரில் பழக்கமானவர்கள் என்று மட்டும் மதரிடம் கூறினாள். தன் கணவனைப் பற்றியோ கணவரின் குடும்பத்தைப் பற்றியோ எதுவுமே கூறவில்லை. இதை சொல்வதற்கே மதரிடம் உண்மையை மறைப்பதற்குள் ஒரு தடுமாற்றம் வந்தது. மதரும் அவளிடம் எதுவும் தோண்டி துருவாமல் அமைதியாக அவள் சொன்னதை ஏற்றுக் கொள்ளவே அவளுக்கு நிம்மதியானது.

மதர் தான் அவளிடம் பெரிதாக எதுவும் கேட்கவில்லை. ஆனால் யமுனா அமைதியாக விட்டுவிடுவாளா? அதுவும் மதர் யமுனாவோடு இரண்டே நாளில் தோழியாகியிருந்த ஒரு பெண்ணை அழைத்து “யமுனாவின் அக்கா வந்திருக்கிறாள் என்று அவளை அழைத்து வா..” என்று சொல்லி அனுப்பினார்.

இந்த இரண்டு நாட்களில், “எனக்கு ஒரு அக்கா மட்டும் தான், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. அவளுடன் என்னால் இருக்க முடியாது என்பதால் தான் இங்கு வந்தது.. இன்னும் மாமாவை நான் பார்த்ததில்லை. அடுத்த முறை வந்தால் மாமாவை அழைத்து வரச் சொல்லியிருக்கிறேன்” என்று தன் தோழியிடம் யமுனா சொல்லியிருந்ததால், அந்த தோழியோ யமுனாவிடம் சென்று கங்காவுடன் துஷ்யந்தையும் பார்த்துவிட்டு வந்ததால், “உன் அக்காவும் மாமாவும் வந்திருக்கிருக்காங்க.. அதனால உன்னை மதர் வரச் சொன்னாங்க..” என்று தெரியப்படுத்தி இருந்தாள்.

அதைக்கேட்ட யமுனா துள்ளி குதிக்காத குறை தான்.. சந்தோஷத்தோடு அவள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே ஓடிவந்தாள். மதருக்கு ஒரு முக்கியமான வேலை இருந்ததால் யமுனா வந்தால் பேசிக் கொண்டிருக்கும்படி சொல்லிவிட்டு, அவர் சென்றுவிட்டார். யமுனா வெளியில் வந்த நேரம் வாணி தனியாக இருக்க, துஷ்யந்தும் கங்காவும் தான் ஒன்றாக பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரையும் ஜோடியாக பார்த்த யமுனா, “அக்காவும் மாமாவும் பொருத்தமான ஜோடி..” என்று நினைத்தப்படியே அருகில் சென்றவள்,

“அக்கா..” என்று கங்காவை அணைத்துக் கொண்டாள். கொஞ்சம் சத்தமாகவே, “மாமா ரொம்ப அழகா இருக்காரு க்கா.. உனக்கு அவர் பொருத்தமான ஜோடி..” என்று கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.