(Reading time: 35 - 70 minutes)

ங்கா..” அதிர்ச்சியோடு அழைத்தான். உண்மையிலேயே அவளை விட்டு பிரிய அவனுக்கு மனம் இல்லை. இதில் அவள் தனியாக இருந்தால் ஆபத்து என்று தெரிந்தும் எப்படி அவளை தனியாக விடுவான். அவள் இல்லாத வாழ்க்கையை அவனால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றாலும்,  இப்படி எப்போதும் அவன் கேவலமாக நினைத்து பார்த்ததில்லை.  அவள் அப்படி சொன்னது அவன் மனதிற்கு கஷ்டமாக இருந்தது.

“என்னை உங்கக் கூட கூட்டிட்டு போறேன்னு சொல்றீங்களே அப்போ அதை நான் எந்த அர்த்தத்துல எடுத்துக்கிறது?”

“ஏன் முறைப்படி கல்யாணம் செஞ்சும் கூட்டிட்டு போகலாம்..”

“அப்போ என் கழுத்தில் இருக்க இந்த தாலிக்கு என்ன அர்த்தம்? இந்த கல்யாணம் ஒரு நாடகமா அரங்கேற்றப்பட்டதா இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் அது உண்மை தான், நினைச்ச நேரம் இதை கழட்டி போட்டுட முடியாது.. இந்த தாலி கழுத்துல ஏற எப்படி சில சடங்கு சம்ப்ராதாயங்கள் வச்சிருக்காங்களோ.. அதே போல அது கழுத்துல இருந்து இறங்கவும் சில சம்ப்ராதாயங்களும் சடங்குகளும் பெரியவங்க வச்சிட்டு தான் போயிருக்காங்க..

வேலைக்கு போகும் போது தாலியை கழட்டி வச்சிட்டு போறதால இந்த காலத்துல பெண்கள் இந்த தாலிக்கு மதிப்பு கொடுக்கறதில்லன்னு அர்த்தம் இல்ல. எத்தனையோ பெண்கள் கணவன் சரியில்லாம தன்னை விட்டு போயிட்டாலும், ஏன் முறைப்படி விவாகரத்து ஆனா கூட பிள்ளைங்களுக்காகவும் சமுதாயத்திற்காகவும் கழுத்தில அந்த தாலியோட இருந்து வாழ்க்கையை ஓட்ற பெண்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க.. அப்படி அந்த தாலியை கழுத்துல போட்ருக்கறதால ஒன்னும் அவங்களுக்கு கிடைக்க போறதில்ல தான்.. ஆனா அப்போ தான் இந்த சமுதாயம் அவங்களுக்கு மதிப்பு கொடுக்குது.. இல்ல அந்த பெண்களை இந்த சமுதாயம், ஏன் உறவுக்காரங்களே ஒரு மாதிரி பார்க்க ஆரம்பிச்சிடுது.. நினைச்ச நேரத்துல கட்டின தாலியை கழட்டிட்டு இன்னொரு தாலியை ஏத்துக்கறது என்பதெல்லாம் ஒரு பொண்ணு சாதாரணமா யோசிக்கவே முடியாது..

திரும்பவும்  என்னடா இவல்லாம் நியாயம் தர்மம் பேசறான்னு நீங்க நினைச்சா கூட பரவாயில்ல.. ஒருமுறை வாழ்க்கை தவறி போச்சு தான்.. ஆனா அதுக்காக எப்பவும் தப்பான வாழ்க்கை வாழ நான் நினைக்கல.. அப்படி நினைச்சிருந்தா கனகா அத்தை சொன்னதுக்கே நான் ஒத்துக்கிட்டு இருப்பேன்..”

“நான் உன்னை தப்பா நினைக்கல.. நீ சின்னவீடு  அப்படின்னு சொன்னதால தான் நான் இப்படி சொன்னேன்.. இப்போதைக்கு நான் உனக்கு ஒரு நல்ல நண்பனா இருக்க  விரும்புகிறேன்.. அதுக்கு கூட எனக்கு தகுதி கிடையாதா?”

“நாம நண்பர்களா இருக்க முடியுமா? இந்த 3 மாசம் நம்ம உறவு எப்படி இருந்ததுன்னு உங்களுக்கே தெரியும்.. நாம லேசா தொட்டு பேசினா கூட நம்ம ரெண்டுப்பேருக்கும் எந்த ஒரு சலனமும் ஏற்பாடாதுன்னு என்ன நிச்சயம்..”

“நான் நல்லவன்னு என்னை  நானே சொல்லிக்க விரும்பல.. கடைசி வரைக்கும் உன்னை ஒரு தோழியா மட்டும் நினைச்சு பழகறது கஷ்டம் தான்.. ஆனா அதுக்காக வெறும் உடல் தேவைக்காக மட்டுமே உன்னை நான் தேடுவேன்னு நினைச்சுக்காத.. காலம் முழுக்க உன்னோட அன்பு, நேசம், அருகாமை இதைத்தான் என் மனம் அதிகம் எதிர்பார்க்கும்.. இப்பவும் நான் உன் கூட ஒரு நண்பனா மட்டும் தான் பழகுவேன்.. அப்படி தான் நடந்துப்பேன்னு வாக்கு கொடுக்க மாட்டேன்.

நீ சொன்ன மாதிரி தாலி, பெண்கள் பத்தி சொன்னதெல்லாம் நானும் ஒத்துக்கிறேன்.. ஆனா மறு கல்யாணம் என்பதும் தப்பில்லையே.. நாம தேர்ந்தெடுத்த வாழ்க்கை தப்பா போச்சுன்னா, திரும்ப நல்லப்படியா வாழ்க்கையை அமைச்சுக்கலாமே.. சில சமயம் மறு கல்யாணம் வெறும் உடல் சார்ந்த தேவைக்காக அமைஞ்சிடுதுங்குறதும் உண்மை தான்.. ஆனா எல்லோருக்கும் அப்படி ஆகறதில்லை.. ஒருவேளை நான்  அந்த நோக்கத்தோடு தான் உன்கிட்ட பேசறதா நினைச்சா,  உனக்கு நான் வாக்கு கொடுக்கிறேன்.உன்னோட விருப்பம் இல்லாம, அனுமதியில்லாம என் சுண்டு விரல் கூட உன் மேல படாது.. அந்த ஒரு தேவைக்காக உன்னை எப்பவும் நான் உபயோகப்படுத்திக்கணும்னு நினைக்கவே மாட்டேன்.. அது நான் உன் மேல வச்சிருக்க அன்பை அடிப்படையா வச்சு சத்தியம் செஞ்சுக் கொடுக்கிறேன்.. இது தான் இப்போதைக்கு நான் உன்னை கடைசியா தொட்றதா இருக்கும்..” என்று சொல்லி அவள் கையில் சத்தியம் செய்தான். “ஆனா உன் மனசுல மாற்றம் வரணும்னு நான் எதிர்பார்ப்பேன்.. அது தப்பு கிடையாது..” என்று தன் மனநிலையை கூறினான்.

“ஆனா இப்போ நான் உங்களோட வரேன்னு சொன்னா அது உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிற மாதிரி ஆகிடாதா?”

“வேண்டாம் இனிமே  நீ எனக்கு எந்த நம்பிக்கையும் கொடுக்க வேண்டாம்.. நானும் உன்னோட செய்கையில் அதை எதிர்பார்க்கல.. ஆனா இந்த 3 மாசம் உன்னோட பழகினதுல ஓரளவுக்கு உன்னை புரிஞ்சு வச்சிருக்கேன் அது எனக்கு அந்த நம்பிக்கையை கொடுத்திருக்கு.. இப்போ என்ன? என்னை உன்னோட நண்பனா ஏத்துக்க முடியலன்னாலும் கூட பரவாயில்ல.. ஒரு சக மனிதனா நினைச்சு நான் உனக்கு உதவி செய்றதை ஏத்துக்கலாமே.. “

இவ்வளவு தூரம் அவன் சொன்னதற்கு பின்பு அதை அவளால் மறுக்க முடியவில்லை. என்னத்தான் அவன் மறுத்தாலும், அவன் உதவியை ஏற்றுக் கொண்டால் அது அவனுக்கு தேவையில்லாத நம்பிக்கையை உண்டாக்கிவிடும் தான்.. அதே சமயம் முழுவதுமாக அவனை அவளால் ஒதுக்கவும் முடியவில்லை.

“என்னவோ வாழ்க்கையில உன்கிட்ட மட்டும் தான் துஷ்யந்திற்கு ஒரு பிடிப்பு உண்டாகியிருக்கு.. அதுதான் அவரை இவ்வளவு சீக்கிரம் குணமாக்கியிருக்கு.. எந்த நேரத்திலேயும் அவரை விட்டு நீ விலகி போய்டாதம்மா.. அது திரும்பவும் துஷ்யந்த் பழைய நிலைக்கு போக வாய்ப்பிருக்கு” என்று முன்பு ஒருமுறை மருத்துவர் கூறியிருந்தார்.

“அவர் எதற்காக இப்படி சொல்ல வேண்டும்? ஒருவேளை பணத்துக்காக மட்டுமே நான் துஷ்யந்தை சகித்துக் கொள்வதாக அவர் நினைக்கிறாரா?” என்று அப்போது அவள் நினைத்தது உண்டு. ஆனால் இப்போது தான் அவர் எதற்காக இப்படி சொல்லியிருப்பார் என்று புரிந்துக் கொண்டாள். ஆனால் அண்ணாமலை போல் ஒருவரிடம் போராடி தன் வாழ்க்கையை அவளால் தக்க வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. துஷ்யந்த் போன்று ஒருவனை முழுதாக விட்டு ஒதுங்கவும் முடியவில்லை.

இதில் ஆறுதல் தேட வேண்டிய ஒரே விஷயம் அவன் இவ்வளவு பக்குவத்தோடு பேசுவது மட்டும் தான்.. இப்போதைக்கு அவன் உதவியை ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.. ஆனால் வாழ்க்கையில் அவனோடு இணைய முடியாது என்பதை உணர்த்திவிட்டால் போதும்.. பின் அவன் குடும்பத்தில் அவனுக்கென்று ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்தால் அவன் தன்னைவிட்டு விலகிவிடுவான் என்று நினைத்து ஒத்துக் கொண்டாள்.

ஆனால் துஷ்யந்திற்கு இந்த பக்குவம் வந்ததே அவளை மரணத்திற்கு அருகாமையில் பார்த்ததால் தான்.. அந்த சம்பவத்திற்கு முன்பு அவன் அவளது பிரிவை சாதாரணமாக எடுத்துக் கொண்டிருப்பானா? என்பது சந்தேகம் தான்.. ஒருவேளை திரும்ப பழைய நிலைமைக்கே அவன் சென்றிருக்கவும் கூடும்.. ஆனால் கங்காவின் தற்கொலை முயற்சியை கண்ணால் பார்த்ததும், அவளின் தற்போதைய மனநிலையும் அவனுக்கு ஓரளவுக்கு புரிந்ததால் தான் அவன் இவ்வளவு பக்குவத்தோடு பேசினான். ஆனால் அவளை விட்டு விலகி போகும் எண்ணம் அவனுக்கு இல்லவே இல்லை. கண்டிப்பாக கங்காவின் மனது மாறும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் இரண்டுப்பேருமே நினைத்தது நடக்க கூடிய காலம் விரைவில் வரப் போவதில்லை என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ளவே கொஞ்சம் காலம் ஆகும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.