(Reading time: 35 - 70 minutes)

ரண்டு நாட்களாக துஷ்யந்தும் வாணியும் கங்காவுடன் தான் இருந்தனர். பங்களாவில் உள்ள வேலையாட்களிடம் தேவையானதை எடுத்து வரச் சொல்லி கங்காவிற்கென ஒதுக்கப்பட்ட அறையிலேயே அனைத்தையும் பார்த்துக் கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட மறுநாளே கங்காவிற்கு மயக்கம் தெளிந்திருந்தாலும் பேச முடியாததால் அருகில் துஷ்யந்தும் வாணியும் இருப்பது தெரிந்தும் புரிந்தும் அமைதியாக கண்களை மூடி படுத்துக் கொண்டிருப்பாள்.

நடுவில் போலீஸ் விசாரணைக்கு மட்டும் துஷ்யந்த் சென்று வர நேர்ந்தது. அவன் சொன்ன தகவல்களுக்கு ஏற்ப போலீஸ் கனகாவை கூட்டிக் கொண்டு வந்து விசாரிக்க ஆரம்பித்திருந்தனர். கங்காவை துஷ்யந்த் தூக்கிச் சென்ற போதே பயந்துவிட்ட கனகா தன் மருமகளுக்கு அழைத்து விஷயத்தை சொன்ன போது, அவள் பதிலுக்கு திட்டினாள்.

“பயந்துக்கிட்டு இங்க வந்துடாதீங்க.. வந்தா எல்லோரும் மாட்டுவோம்.. போலீஸ் வந்து ஏதாச்சும் கேட்டா எதையாவது சொல்லி சமாளீங்க” என்று வைத்துவிட்டாள். எங்கே செல்வது என்று தெரியாமல் கனகா விழித்துக் கொண்டிருக்கும் போதே போலீஸ் அவரை தேடி வந்துவிட்டனர்.

முதலில் எனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல் சாதித்த கனகா போலீஸ் மிரட்டியதில் எஸ்டேட் ஓனர், மருமகள் பற்றியெல்லாம் உளறிவிட்டிருந்தார். ஆனால் அண்ணாமலை பற்றி ஏதும் கூறவில்லை. அவர் தான் உயிரை எடுத்துவிடுவதாக முன்பே மிரட்டியிருந்தாரே, அதனால் அதை விடுத்து மற்றவற்றை கூறிவிட்டார். அதனால் அவர்களையும் கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்தது. எஸ்டேட் ஓனர் தனக்கு தெரிந்த பெரியாட்கள் மூலம் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்தார். ஆனாலும் துஷ்யந்தோ  அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுப்பதில் தீவிரமாக இருந்தான்.

இதுவரைக்கும் தான் செய்தது வெளிவரவில்லையென்றாலும், துஷ்யந்தின் தீவிரத்தை அறிந்த அண்ணாமலை, இதற்கும் மேலே தான் மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு உண்டு என்பதை புரிந்தவராக, துஷ்யந்திடம் பேச முடிவெடுத்தார்.

“கங்கா கன்னிப் பொண்ணா இருந்தா பரவாயில்ல.. மூனு மாசம் உன்னோட இருந்திருக்கா.. அதுக்கும் முன்னாடி எப்படியோ.. இப்போ எஸ்டேட் ஓனர் கூட சம்பந்தப்பட்டிருக்கா.. இப்போ போலீஸ் தீவிரமா விசாரணை ஆரம்பிச்சா, அந்த பொண்ணு நம்ம பங்களாவில் இருந்தது தெரிஞ்சா, அந்த பொண்ணு தப்பானவன்னு பேச்சு வர ஆரம்பிக்கும், அதை வச்சு எஸ்டேட் ஓனர் தப்பிக்க பார்ப்பான்.. கூட நம்ம பேர்ல்லாம் வர ஆரம்பிக்கும், உனக்கும் கங்காவுக்கும் என்ன சம்பந்தம்னு கேள்வி வரும்.. எல்லாத்தையும் சமாளிச்சுக்கலாம்னு வச்சிக்க.. ஆனா நம்ம வீட்டுக்கு விஷயம் தெரிய வந்தா என்ன செய்வ? என்னை திட்டிட்டு நீயே கங்காவுக்கு கெட்ட பேர் வாங்கிக் கொடுக்கப் போறீயா? அதனால கேஸை இப்படியே விட்டுடு.. இனி எஸ்டேட் ஓனர் பிரச்சனை செய்யாம நான் பார்த்துக்கிறேன்..” என்றார்.

தன்னுடைய பேரை இழுத்தால் கூட பரவாயில்லை. ஆனால் கங்காவோட பேர் கெட்டுவிடக் கூடாது என்பதால் துஷ்யந்தும் தணிந்து போனான். அப்போது தான் அண்ணாமலைக்கு நிம்மதியானது.

இரண்டு நாட்கள் முழுதும் முடிந்து மூன்றாவது நாள் கங்கா நன்றாகவே தேறியிருந்தாள். துஷ்யந்த் எஸ்டேட் பங்களாவிற்கு சென்றிருந்த வேளை அவள் எழுந்து அமர்ந்திருந்தாள். வாணி அவளுடனே தான் இருந்து பணிவிடை செய்துக் கொண்டிருந்தார். திரும்ப அவன் மருத்துவமனைக்கு வரும்போது அவனை நேருக்கு நேராக  பார்த்தாள்.

அவளை பார்த்து புன்னகைத்தவன் அருகில் உள்ள நாற்காலியில் அமர்ந்த போது, “எதுக்கு என்னை காப்பாத்தீனீங்க?” என்ற கேள்வியை கேட்டாள்.

“என்ன கேள்வி இது? கண்ணுக்கு முன்னாடி..” அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்களை மூடித் திறந்தவன், பின் தன்னை சமன்படுத்திக் கொண்டு பேசினான்.

“கண்ணுக்கு முன்ன நீ உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கிறதை பார்த்து சும்மா போகச் சொல்றியா? இன்னும் கூட என் மனசு என்ன பாடுபடுதுன்னு எனக்கு தான் தெரியும்.. நீயா இப்படி ஒரு முடிவுக்கு போனன்னு என்னால இப்போக் கூட நம்ப முடியல.. தளர்ந்து, சோர்ந்து, கிட்டத்தட்ட இனி வாழ்க்கையே இல்லன்னு முடிவுக்கு வந்து நான் என்ன பண்றன்னு தெரியாத ஒரு நிலையில இருந்த என்னை இப்போ இந்த அளவுக்கு கொண்டு வந்தது நீதான்.. தோல்விகளை கூட தைரியமா சந்திக்கணும்.. எவ்வளவு கஷ்டமான சூழ்நிலை வந்தாலும் சாகறதை பத்தி நினைக்கக் கூடாது.. பிரச்சனையை தைரியமா சந்திக்கணும்னு நீதானே அடிக்கடி எனக்கு சொல்லிக்கிட்டு இருப்ப”

“வாழ்க்கையில எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் போராடலாம்.. ஆனா தெரிஞ்சே என் வாழ்க்கை நாசமாக போகுதுங்கிறப்போ, அதுல இருந்து தப்பிக்க வழி இல்லாத பட்சத்துல உயிரை போக்கிக்கிறது தவிர வேற வழி என்ன இருக்கு.. உயிரா? மானமான்னு பார்த்தா உயிர் எனக்கு பெருசா தெரியல..” என்றதும் அவன் பார்த்த பார்வையில் என்ன தெரிந்ததோ..

“அவனது பார்வையில் நான் எப்படிப்பட்ட பெண்? நான் போய் மானம், அவமானத்தை பத்தியெல்லாம் பேசினா? அவனுக்கு என்னவாக தோனும்..” என்று நினைக்கும்போதே மனம் கசந்தது. இப்படி ஒரு நிலையில் தன் வாழ்க்கை இருப்பதற்கு, செத்தே போயிருக்கலாம் என்றே நினைத்தாள்.

“என்னடா இவ போய் மானத்தை பத்தியெல்லாம் பேசறான்னு பார்க்கிறீங்களா?”

“ஏன் இப்படியெல்லாம் பேசற.. மாமா உன்னை பத்தி சொன்னதை நான் நம்பவேயில்லை. என்னால உன்னை எப்பவும் அப்படி நினைக்கவே முடியாது..”

இதே வார்த்தையை அவன் மாமா சொன்ன அன்றே நம்பவில்லை என்று சொல்லி தன்னிடம் வந்து பேசியிருந்தால், இன்று இந்த நிலைமை இல்லை. இப்போதோ அவன் நம்பினால் மட்டும் என்ன நடந்துவிடப் போகிறதாம்.. நினைத்து பார்த்தவள் விரக்தியாக புன்னகைத்து கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.