(Reading time: 35 - 70 minutes)

ங்காவிற்கு பேச்சே வரவில்லை. ஒரு பொய்யை கூட உண்மை போல் காட்டிவிடலாம் போல.. ஆனால் ஒரு உண்மையை பொய்யாக மாற்றுவது தான் கஷ்டமாக உள்ளது. தனியாக கேட்டிருந்தால் கூட பரவாயில்லை.. துஷ்யந்த் இருக்கும் போதே கேட்டது தான் கங்காவிற்கு கஷ்டமாக இருந்தது. யமுனாவின் கையை பிடித்து கொஞ்சம் துஷ்யந்த், வாணியை விட்டு தள்ளி அழைத்துச் சென்றாள்.

“யமுனா அவர் உன்னோட மாமா இல்ல.. இப்படித்தான் சத்தமா பேசுவியா? எதுவா இருந்தாலும் அமைதியா கேட்க மாட்டியா?”

“என்ன அக்கா சொல்ற? அவர் மாமா இல்லையா? உன் கூட வந்திருக்கவே மாமான்னு நினைச்சிட்டேன்..”

“நான் தான் மாமா இப்போ இங்க இல்லன்னு சொன்னேனே.. அப்புறம் எப்படி மாமாவோட வந்திருப்பேன்..”

“மாமா எப்போ ஊர்ல இருந்து வருவாரு.. வரும்போது அவர் போட்டோ எடுத்துட்டு வர சொன்னேனே கொண்டு வந்தியா?”

“மாமா போட்டோ தானே சீக்கிரம் எடுத்துட்டு வரேன்.. இப்போ என்கிட்ட இல்ல..”

“என்னக்கா மாமா போட்டோ கூட வச்சிக்க மாட்டியா? சரி இது யாரு.. இவங்க கூட நீ ஏன் வந்திருக்க..?”

“நான் இங்க சென்னைல தான் இருக்கப் போறேன்.. இவங்க தான் எனக்கு வேலைக்கும் தங்கறதுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுக்கப் போறாங்க..”

“நீ ஏன் வேலைக்கு போகணும், அப்புறம் இவங்க கூட ஏன் தங்கணும்?” யமுனா கேட்ட கேள்வியில் கங்கா தடுமாறி போனாள். இயல்பாகவே பொய் பேச வராது.. மற்றவர்களிடம் தைரியமாக தன் நிலவரத்தை சொல்வது போல் யமுனாவிடம் பேச முடியவில்லை. இப்போதோ எதையோ உளறி வைத்தாகிவிட்டது. அதை எப்படி சமாளிப்பது என்று முழித்தாள்.

“அக்கா.. மாமா வீட்ல யாருக்கும் உன்னை பிடிக்கலையா? மாமா இல்லாததால உன்னை அவங்க கூட வச்சிக்க யாரும் விரும்பலையா?” என்ன பதில் சொல்வதென்று திணறியவளுக்கு, யமுனாவே பதில் சொல்வதற்கு சாதகமான கேள்வியை கேட்டாள்.

“ஆமாம் யமுனா.. இப்போதைய நிலைமை அப்படித்தான்.. ஆனா எல்லாம் சீக்கிரம் சரியாகிடும்..”

“அக்கா எல்லாம் என்னால தான் இல்லக்கா.. எனக்கு மட்டும் எந்த பிரச்சனையும் இல்லாம இருந்திருந்தா.. உனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சிருக்காதுல்ல..”

“இப்படித்தான் நம்ம வாழ்க்கை அமையும்னு விதி இருந்தா ஒன்னும் செய்ய முடியாது யமுனா.. நீ கவலைப்படாத, நீ பயப்பட்ற அளவுக்கு எனக்கு பெரிய பிரச்சனை எதுவுமில்லை..” என்று ஓரளவுக்கு யமுனாவை தேற்றி அவளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு கிளம்பினாள். அந்த ஒருமுறை தான் யமுனா துஷ்யந்தை நேராக பார்த்தது.

கங்காவையும் வாணியையும் ஒரு வீடு பார்த்து முதலில் குடி வைக்க வேண்டும் அடுத்தது கங்காவிற்கு ஒரு வேலை. வீடு கிடைக்கும் வரை ஒரு நல்ல ஹோட்டலில் துஷ்யந்த் இருவரையும் தங்க வைத்தான். வீடு பார்த்து கொடுப்பதற்கும் கங்காவின் வேலை விஷயமாகவும் யாரிடம் உதவி கேட்பது என்று அவன் யோசித்தான்.

தங்கள் அலுவலகத்திலேயே கங்காவை வேலைக்கு வைக்கலாம், ஆனால் அதை கங்கா விரும்ப மாட்டாள். அதேபோல் அவர்கள் தொழில் இருக்கும் நிலைமைக்கு புதிதாக ஒருவரை வேலைக்கு சேர்க்கவும் முடியாது.. தொழில் துறையில் தனக்கு தெரிந்தவர்களிடமும் அவன் உதவி கேட்க விரும்பவில்லை. எனவே தொழில் முறையிலும், வீட்டுக்கும் சம்பந்தமில்லாத தன் நண்பன் ஒருவனிடம் துஷ்யந்த் உதவி கேட்டான்.

துஷ்யந்திற்கு நெருங்கிய நண்பர்கள் என்று பெரிதாக இல்லையென்றாலும் எப்போதாவது பார்த்தால் பேசக் கூடிய நண்பன் தான் சுரேஷ்.. நடுத்தர குடும்பத்தை சார்ந்தவன், அரசாங்க வேலையில் இருப்பவன், அதுமட்டுமில்லாமல் தன் தந்தை நடத்திய பதிப்பகத்தை இப்போது அவன் எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறான். முழு நேரமும் அதை பார்த்துக் கொள்ள நேரமில்லாததால், தன் ஊர்க்காரன் ஒருவனின் பொறுப்பில் அந்த பதிப்பகத்தை நடத்தி வருகிறான். அது வேறு யாரும் இல்லை. இளங்கோ தான் இப்போது அந்த பதிப்பகத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்பவன்.

சுரேஷும் இளங்கோவும் ஒரே ஊர்க்காரர்கள். படிப்பில் சுமாராக இருந்த இளங்கோ ஒரு டிகிரியோடு நிறுத்திக் கொண்டான். சென்னையில் இருந்த சுரேஷிடம் தன் மகனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்யும்படி இளங்கோவின் தந்தை கேட்டுக் கொண்டதால், அதே நேரம் தனக்கு அரசாங்க வேலை கிடைக்கவே, பதிப்பகத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை இளங்கோவிடம் சுரேஷ் ஒப்படைத்தான்.

அது கல்வி சம்பந்தமான புத்தகங்கள் பதிப்பிடும் பதிப்பகம்.. ஓரளவுக்கு பிரபலமான பதிப்பகமும் கூட.. அங்கு ஆண்களும் பெண்களுமாக பத்து பேருக்கு மேல் வேலை செய்தனர். எனவே துஷ்யந்த் கேட்டுக் கொண்டதன் பேரில் தன் பதிப்பகத்திலேயே கங்காவிற்கு வேலை தருவதாக சுரேஷ் ஒத்துக் கொண்டான். டிகிரியை முழுதாக முடிக்கவில்லையென்றாலும் கங்கா கணினி சம்பந்தமான படிப்பு படித்ததால், அது சம்பந்தமான வேலையை அவளுக்கு கொடுத்தனர். அதேபோல் கங்காவும் வாணியும் தங்குவதற்கான வீடும் சுரேஷ் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் ஏற்பாடு செய்து கொடுத்தான்.

கங்காவிற்கும் அந்த வேலை திருப்தியாக இருந்தது. ஒரு வாரம் போல் நல்லப்படியாக வேலைக்கு சென்று வந்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதற்கு மேல் அவளின் வாழ்க்கை முறை அவளுக்கு பிரச்சனையானது. கழுத்தில் தாலி இருப்பதால், உடன் வேலை செய்தவர்கள் கணவன் என்ன செய்கிறான்? குழந்தை இருக்கிறதா? என்பது போலான கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர். வசிக்கும் இடத்திலும் அதே கேள்விகள் தான்.. கணவனை பற்றி பொய்யாக எந்த விஷயமும் கங்கா சொல்ல விரும்பவில்லை. கணவனை பற்றி பேச விரும்பவில்லை என்பதாகவே அனைவரிடமும் கூறிவிடுவாள்.

ஆனாலும் அதைகேட்டு யாரும் அமைதியாக இருந்துவிட மாட்டார்கள். வேற ஒரு பொண்ணு கூட தொடர்பு ஏற்பட்டு போச்சா? ஏதாவது கடன்னு ஊரை விட்டு ஓடிட்டானா? இல்ல கூட வாழ தகுதியில்லாதவனா? என்று சில பெண்கள் கேள்விக் கேட்டு அவளை காயப்படுத்துவார்கள் என்றால், சில ஆண்களோ கனகா சொன்னது போல் கணவன் இல்லாமல் இருக்கும் பெண் என்று அவளிடம் கொஞ்சம் அதிகப்படியாகவே அக்கறை காட்ட நினைப்பர். இதில் எந்தவித தவறான எண்ணமும் இல்லாமல் இயல்பான நட்புடன் பழகும் ஒரே ஜீவன் இளங்கோ தான்..

கிட்டத்தட்ட ஒரே வயது, ஒரே மாதிரியான எண்ணங்கள் இதெல்லாம் இருவரையும் நட்பால் கட்டிப் போட்டது. அதேபோல் கங்காவை தவறாக அணுகுபவர்களையும் இளங்கோ அவன் நட்பின் மூலம் தள்ளி நிறுத்தி வைத்திருந்தான். இதற்கும் சில பேர் நேரடியாகவே, “என்னடா நாங்க மடக்க முயற்சி செஞ்சு பார்த்தோம் முடியல..உனக்கு மட்டும் எப்படிடா அவ மடங்குனா?” என்று தப்பாக பேசுவர். ஆனால் இளங்கோ அதற்கெல்லாம் கவலைப்பட மாட்டான். மற்றவர்கள் பேச்சால் கங்காவே அவனிடம் விலகி இருக்க நினைத்தாலும், “இதுக்கெல்லாம் பயந்தா இப்படித்தான் இன்னும் நம்மள வேதனை படுத்தி பார்ப்பாங்க.. நாம எப்படி பழகுறோம்னு நமக்கு தெரியும் இல்ல.. அப்புறம் அவங்களுக்காக ஏன் பயப்பட்றீங்க” என்பான்.

இருந்தாலும் மற்றவர்களின் சந்தேக பார்வைகளையும்,  கேளி பேச்சுக்களையும், தேவையில்லாத கேள்விகளையும் கங்கா அடிக்கடி சந்திக்கும் சூழல் உருவாகி அவளை காயப்படுத்திக் கொண்டு தான் இருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.