இதற்கிடையில் யாருடைய ஆதரவுமில்லாமல் ஒரு வீட்டில் கனகா வேலைக்கு சேர்ந்திருந்தார். அவர்களின் இருப்பிடம் சென்னை என்பதால் கனகாவும் சென்னையில் தான் இருந்தார். வேலை செய்யும் வீட்டின் குழந்தைக்கு பிறந்தநாள் என்பதால் அதை கொண்டாட யமுனா இருந்த இல்லத்திற்கு வந்தார்கள். அவர்களோடு வந்த கனகா அங்கே யமுனாவை பார்க்க நேரிட்டது. தன் நிலைமை இப்படி ஆனதால் அந்த கோபத்தை ஆற்றிக் கொள்ள, கங்காவை பற்றி தவறாக யமுனாவிடம் கனகா கூறினார்.
கங்கா யாரையும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. பணத்திற்காக ஒருவனோடு மூன்று மாதம் இருந்து இருக்கிறாள். இப்போதும் அவனோடு தான் இருந்திருப்பாள். கண்டிப்பாக மனைவியாக அல்ல, வைப்பாட்டியாக தான் இருக்க வேண்டும் என்றெல்லாம் யமுனாவிடம் கங்காவை பற்றி தவறாக கூறினாள்.
கனகா வந்து சென்ற பின்பு ஒருமுறை கங்கா யமுனாவை தேடி வந்த போது, கனகா சொன்னதையெல்லாம் யமுனா கங்காவிடம் சொல்லி, “அத்தை என்னென்னவோ சொல்றாங்களே அக்கா.. அவங்க ஏன் உன்னை தப்பா பேசணும்.. அப்படில்லாம் எதுவும் இல்லை தானே க்கா..” என்று கேட்டாள்.
கனகா செய்த காரியத்தை சொன்னால்.. அனைத்தையும் இப்போது யமுனாவிடம் கூற வேண்டியிருக்கும், இப்போது அதையெல்லாம் புரிந்துக் கொள்ளும் பக்குவம் யமுனாவிற்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அதனால், “அத்தை சொல்றது போல எதுவும் இல்லை யமுனா.. நீ அதையெல்லாம் நம்பறியா?” என்றுக் கேட்டாள்.
“என்னால உன்னை தப்பா நினைக்க முடியாது க்கா.. ஆனா மாமா பத்தி கேக்கறப்ப நீ ஏதாச்சும் மழுப்புற.. மாமா போட்டோ இதுவரை காமிக்கல.. மாமா கூட பேசறேன்னு சொன்னா, அதுக்கும் நீ ஏற்பாடு செய்யல.. அவங்களோட வீட்ல நீ இல்ல.. இதுக்கெல்லாம் விடை தெரியாம நான் எப்படிக்கா நிம்மதியா இருக்க முடியும்..”
“எல்லாம் சொல்ல நேரம் வரப்போ கண்டிப்பா சொல்றேன் யமுனா..”
“அப்போ ஏதோ ஒரு பிரச்சனை இருக்குல்ல.. அது எனக்கு ஏன் தெரியக் கூடாது.. நீ மட்டும் கஷ்டப்படணும், நான் மட்டும் இங்க நிம்மதியா இருக்கணுமா..? என்னன்னாலும் என்கிட்ட சொல்லு.. என்னை உன்னோட கூட்டிட்டுப்போ..”
“யமுனா.. நீ இங்க தான் இருக்கணும்.. நீ நல்லா படிக்கணும்.. இப்போ எந்த கவலையும் உனக்கு வேண்டாம் சொன்னா கேளு..’
“நான் உன் கூட இருக்கக் கூடாதுன்னு சொல்றன்னா. அப்போ அத்தை சொன்ன மாதிரி உன்கிட்ட ஏதாச்சும் தப்பு இருக்கா..”
“யமுனா..”
“நீ வாய் திறந்து எதுவும் சொல்லாத வரைக்கும் நான் வேற என்ன நினைக்கிறது.. இங்கப்பாரு உன்னோட பிரச்சனை என்னன்னு சொல்லு.. இல்லன்னா அதை எப்போ சொல்ல நினைக்கிறியோ அதுவரை என்னை பார்க்க வராத..” சொல்லிவிட்டு கோபமாக சென்றுவிட்டாள். அதற்குபிறகு இரண்டு முறை கங்கா யமுனாவை தேடி வந்த போது கூட அவள் கோபம் குறையவில்லை. கங்காவை சந்திக்கவும் மறுத்துவிட்டாள். அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான்.. தன்னை விட்டு விலகியிருந்தால் தான் தன் தங்கைக்கு எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பதால், கங்காவும் யமுனாவை விட்டு விலகியே இருந்துக் கொண்டாள்.
வேலை வாங்கி கொடுத்ததோடு துஷ்யந்தை விட்டு விலகி விடலாம் என்று நினைத்தால் அதுவும் முடியவில்லை. சுரேஷ் நண்பன் என்ற காரணத்தால் துஷ்யந்த் அடிக்கடி பதிப்பகத்திற்கு வருவதை வாடிக்கையாக கொண்டான். அதேபோல் வாணியிடமும் அடிக்கடி கங்காவின் நலனை பற்றி பேசி அறிந்துக் கொள்வான். ஏற்கனவே சிலர் தன்னை தவறான பார்வையில் பார்க்க, இதில் துஷ்யந்தின் செயல்கள் கங்காவிற்கு தொந்தரவாக தான் தெரிந்தது. அதை சில முறை அவனிடம் வெளிப்படையாகவும் காட்டியிருக்கிறாள்.
துஷ்யந்தும் கங்காவை தொந்தரவு செய்யக் கூடாதென்று தான் நினைப்பான். ஆனால் அவனால் அவளை இரண்டு நாட்களுக்கு மேல் பார்க்காமலோ அவள் குரலை கேட்காமலோ இருக்க முடியாது.. இதில் பதிப்பகத்தில் அவனது வருகையை குறித்து இன்னும் கங்காவை அனைவரும் தவறாக தான் நினைக்க ஆரம்பித்தார்கள். இளங்கோவுடன் நட்பாக பழகினாலும், துஷ்யந்த் வரும் சமயங்களில் அவனுடன் இன்னும் கொஞ்சம் நெருக்கம் காட்டுவாள். அதைப் பார்த்தாவது துஷ்யந்த் விலக மாட்டானா? என்ற எண்ணம் அவளுக்கு உண்டு.
ஆனால் துஷ்யந்தோ அதை கண்டு கோபப்படவோ, பொறாமைப்படவோ மாட்டான். ஆனால் தன்னிடம் மட்டும் அவள் ஒதுக்கம் காட்டுவது ஏன்? என்று வருத்தம் கொள்வான்.