“என்ன உத்ரா, மாப்பிள்ளைக்கு தான் ஆபிசில் வேலை இருக்கே, நாம் மூன்று நாட்களாவது அர்ஜுன் வீட்டில் தங்கிச் செல்லலாம்மா. நீ என்ன சொல்ற?” என்று கேட்டார் பால்கி.
“நீங்களும், அம்மாவும், அண்ணா வீட்டிற்கு போய் வாங்கப்பா. நான் இன்றே கிளம்பி வீட்டிற்கு செல்கிறேன். நாங்க இங்க தானே இருக்கிறோம், அடுத்த முறை நான் அவருடன் அண்ணா வீட்டிற்கு வந்து கொள்கிறேன்.” என்று கூறினாள்.
சிறு வயது முதலே அண்ணா என்று அர்ஜுனுடன் அன்பாக பழகி இருந்ததால், அவன் வீட்டிற்கு செல்ல ஆசைப் பட்டாலும், முதலில் இந்த காப்ரிலா விசயத்தை முழுவதுமாக அறிந்து கொள்ளவே விரும்பினாள். அதனால் சீக்கிரமாக நியு ஜெர்சி போகவே விரும்பினாள் உத்ரா. அம்மா, அப்பாவும், அண்ணாவுடன் சென்றால், அபியிடம் தனியாக பேச வசதியாக இருக்கும் என்றும் எண்ணினாள்.
இரவு ஹோட்டலை காலி செய்துவிட்டு, அர்ஜுனே உத்ராவை ஏர்போர்டில் விட்டு, பால்கி, சுனைனாவை அழைத்துச் சென்றான்.
மறுநாள் காலை வீட்டை அடைந்த பொழுது, அபி வீட்டில் இல்லை. எதிர் வீட்டிற்கு சென்று தேவாவிடம் சாவியை வாங்கிய பொழுது...
“அம்மா, அப்பா எல்லாம் எங்க உத்ரா? என்றாள் தேவா.
“லாஸ் ஏஞ்சல்ஸில் கசின் பிரதர் இருக்கார், அவரை லாஸ் வேகாசில் பார்த்தால் அவருடன், அவர் வீட்டிற்கு போயிருக்காங்க தேவாக்கா. எங்க வீட்டு சாவியை கொடுங்கக்கா” என்றாள் உத்ரா.
“அபி, காப்ரிலாவுக்கு ஈஸ்காட்டா வந்துட்டார் போல?” என்று கேட்ட தேவாவை ஆச்சரியமாகப் பார்த்தாள் உத்ரா.
“உங்களுக்கு காப்ரிலாவை தெரியுமா தேவாக்கா?”
“நம்ம சி.இ.ஒ. பெண்ணை தெரியாதா என்ன? ஆபிஸ் பார்டிகளில் பார்த்திருக்கேன்.”
இது புது விஷயமாக இருந்தது உத்ராவிற்கு. “கப்ரிலா அவங்க ஆபிஸில் வேலை பார்த்ததாகத் தான் சொன்னார்.”
“முதலில் நம்ம ஆபிஸில் தான் வேலை பார்த்தாள். இப்போ அபி இருக்கும் போஸ்டில்.” என்று தேவா கூற...
அதற்கு மேல் அங்கு நின்று வேறு எதுவும் பேச பிடிக்காமல் தன்னுடைய வீட்டிற்கு கிளம்பினாள் உத்ரா.
வீட்டை திறந்து உள்ளே வந்து பார்த்த பொழுது அபியின் போன் சார்ஜில் இருந்தது. இப்பொழுது உடனே பேசவும் முடியாது அபியிடம்.
அபி வீட்டிற்கு வந்ததும், கோபமாக பேச வேண்டுமா? இல்லை வருத்தமாக பேச வேண்டுமா? ஒன்றும் புரியவில்லை உத்ராவிற்கு. ஆனால் காப்ரிலா அவனது வாழ்வில் இல்லை என்று தானே சொன்னான். பின்பு ஏன் அவளுடன் சுற்றுகிறான்? ஒரே கேள்விக்குறிகளாக உத்ராவின் தலையை சுற்றி வட்டமிட்டது.
சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தாள். ஒன்று மட்டும் புரிந்தது, அபி அவளுக்காகவே படைக்கப்பட்டவன். அன்று அக்காவுடன் திருமணம், தனக்கு அவன் கிடைக்கவே மாட்டான் என்ற நிலையே மாறி, சில நிமிட இடைவெளியில் தனக்கே என்று கடவுளால் கொடுக்கப் பட்டவன், என்று ஆயிரம் சமாதானம் தனக்கே சொல்லிக் கொண்டாலும், அவன் வந்து விளக்கிச் சொல்லும் வரை படபடப்பாகவே இருந்தது உத்ராவிற்கு.
மாலை நேரம், அபியின் கார் சத்தம் கேட்டு கொஞ்சம் டென்ஷன் ஏறியது. ஆனால் அதை மறைத்து, அவன் வந்ததும், தன்னை சாதாரணமாக காட்டிக் கொண்டாள்.
“அத்தை, மாமா எங்கே உத்ரா, வாக்கிங் போய் இருக்காங்களா? உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.” என்றான் அபி வந்தவுடன்.
“இல்லை, அங்கு அர்ஜுன் அண்ணாவை பார்த்தோம். அவர் வீட்டிற்கு அழைத்தால் அங்கு சென்று இருக்காங்க. மூன்று நாள் கழித்து வருவாங்க” என்ற பதிலைக் கேட்டு மகிழ்ச்சியாக மேலே தங்கள் அறைக்கு சென்றான் அபி.
அவனும் சென்று உடை மாற்றி வந்தான். அதற்குள் இருவருக்கும் தேநீர் கலந்து, வெளியே இருந்த புல்வெளியில் சென்று, அங்கிருந்த ஓடையை பார்த்தவாறு அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள் உத்ரா. அபியும் அவள் அருகே அமர்ந்து, அவள் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். உத்ராவும், ஏதும் அவனை கேட்காமல், அவன் தலையை கோதி விட்டாள்.
“சாரி உத்ரா. நீ நல்ல உறக்கத்தில் இருந்ததால், உன்னை எழுப்பி சொல்லவில்லைடா.”
“ம்” என்று மட்டும் கூறினாள் உத்ரா.
“உனக்கு என்னிடம் கேட்க எதுவும் இல்லையா உத்ரா” என்றான் அபி.
“நிறைய இருக்கு. ஆனால் காப்ரிலா பற்றி மட்டும் சொல்லுங்க போதும்.”
“காப்ரிலா எங்க கம்பெனி ஸி.இ.ஒ. ஹாரியின் பொண்ணு. முதலில் எங்க ஆபிசில் தான் வேலையில் சேர்ந்தாள். முதலில் ஒழுங்காகத்தான் வேலைக்கு வந்தாள். பின்பு நண்பர்கள், பப், என்று சுத்த ஆரம்பித்தாள். ஆபிசிற்கும் சரியாக வருவதில்லை. இங்குள்ளவர்களின் கலாச்சாரப்படி அப்பா சொத்து பிள்ளைக்கு என்பது எல்லாம் கிடையாது. அப்பாவாக விரும்பிக் கொடுத்தால் மட்டுமே கிடைக்கும்.