(Reading time: 13 - 26 minutes)

வசந்த் கதையை கூறத் துவங்கினான். அவன் கூறுவதை காதில் வாங்கியபடியே ஓவியங்களை புரட்டினார் ஃப்ராங்க்ளின். தன்னால் முடிந்த அளவு கதையை அரைமணி நேரத்தில் கூறி முடித்தான் வசந்த். ஃப்ராங்க்ளின் ஓவியத்தை புரட்டிக்கொண்டிருந்தார்.

"சார்"

"சொல்லுங்க வசந்த்"

"கதையை சொல்லி முடிச்சிட்டேன் சார்"

ஃப்ராங்க்ளின் புத்தகத்தை மூடி வசந்தை நோக்கினார். அவர் புத்தகத்தை மூடிய விதத்தைக் கண்ட வசந்த், 'எல்லாம் முடிந்தது' என எண்ணினான்.

மேலியாவின் காய்ச்சல் இன்னும் குறையவில்லை. அவளது இதயம் வெடித்துவிடும் அளவுக்கு  துடித்துக்கொண்டிருந்தது. திடீரென வசந்த் கொடுத்த முத்தத்தின் அதிர்ச்சியில் இருந்து அவளால் அவ்வளவு எளிதில் மீண்டுவர முடியவில்லை. 

'வசந்த் ஏன் அவ்வாறு நடந்து கொண்டான். காதலர்கள் முத்தம் கொடுத்துக் கொள்வார்களா? இது என்ன புதுவிதமான காதல்?'. காமத்தைப் பற்றி ஏதுமறியாத மழலையாய் அவ்வாறு எண்ணினாள் அமேலியா. எதைப் பற்றியும் சிந்திக்க முடியாமல் முத்தம் அவளை பாடாய்படுத்தியது. அதனால் ஏற்பட்ட டென்ஷன் தலைவலியைக் கூட்டியது.

"அமேலியா" என்றது ஒரு குரல். 

கண்களை திறந்தவளின் முன்னால் காபி கப்போடு மேகலா நின்று கொண்டிருந்தாள். அவளருகில் அமர்ந்த மேகலா நெற்றியைத் தொட்டுப் பார்த்தபடி, "இப்போ எப்படி இருக்கு?" என்று சைகையில் கேட்டாள். அதற்கு புன்னகையை மட்டுமே விடையாக்கிய அமேலியா காபியை உறிஞ்சினாள். 

"மேகலா!" நாராயணன் சத்தமாக அழைத்தார்.

"இதோ வரேன்பா"

ஹாலில் உள்ள டிவியில் பழைய காலத்து படமொன்றை பார்த்துக்கொண்டிருந்தார் நாராயணன்.

"இப்போ எப்படி இருக்கா அந்த ஈராக் பொண்ணு?"

"பரவாயில்லப்பா"

"நேத்து இரவு வரை நல்லா தானே இருந்தா. திடீர்னு எப்படி காய்ச்சல் வந்துச்சு?"

"தெரியலப்பா"

யோசனையோடு தொலைக்காட்சியில் தன் பார்வையை ஓடவிட்டார் நாராயணன். பள்ளி வேன் வீட்டு வாசலில் வந்து நின்றது. அதிலிருந்து நிலா இறங்கி வீட்டை நோக்கி ஓடி வந்தாள். 

"அம்மா! அம்மா! தாத்தா! மாமா!"

"ஏண்டி எல்லோரையும் ஏலம் போட்டுக்கிட்டு வர?"

"பரிட்சையில நான் நல்ல மார்க் எடுத்திருக்கேன். நானே எதிர்பார்க்கல"

"உங்க டீச்சர் கண்ணு தெரியாம பேப்பரை திருத்தியிருப்பா"

"என் டீச்சர் என்ன உன்னை போல சோடாபுட்டியா?"

"நிலா!" என்று மேகலா சத்தமாக அதட்டினாள். "உள்ள போய் டிரஸ் மாத்திக்க"

அறையை நோக்கி ஓடினாள் நிலா. "அக்கா! அக்கா! நான் எவ்வளவு மார்க் எடுத்திருக்கேன் தெரியுமா?" என்று அமேலியாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தாள் நிலா.

உடனே, அமேலியாவிற்கு வசந்த் கொடுத்த முத்தம் நினைவிற்கு வந்தது. நிலா கொடுத்த முத்தத்திற்கும் வசந்த் கொடுத்த முத்தத்திற்கும் வித்தியாசமிருந்தது. வசந்த் கொடுத்த முத்தத்தால், போதை உடல் முழுதும் பரவி உணர்ச்சிகளைத் தூண்டி சில நொடிகள் அவளை மறக்கச் செய்தது. அந்த உணர்ச்சி வேண்டுமென்று அவளை மனம் சஞ்சலப்படுத்தியது. வசந்தின் அரவணைப்பையும் முத்தத்தையும் சிந்தித்தாள் அமேலியா. மெல்ல மெல்ல அவள் சகஜ நிலைக்கு திரும்பினாள்.

மேகலா வீட்டு வேலைகளையெல்லாம் செய்து முடிக்க ஒன்பது மணி ஆனது. நிலா வீட்டுப்பாடம் செய்துகொண்டிருந்தாள்.

"வசந்த் இன்னும் ஏன் வராம இருக்கான்?" என்று மேகலாவிடம் கேட்டார் நாராயணன்.

"தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்ல போயிருக்கான்பா"

"இவ்வளவு நேரமாவா கதை சொல்லுவான்? போன் செஞ்சு பாரு"

மேகலா வசந்திற்கு போன் செய்தாள். ரிங் போனது.

"என்ன?"

"போன் எடுக்கலப்பா"

"வழக்கம் போல தான் நடந்திருக்கும். சான்ஸ் கிடைக்கிறதென்ன சாதாரணமா? நிழலை தேடி நிஜம் அலையுறது தான் சினிமா"

மேகலா அமைதியாக இருந்தாள்.

"இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் தன்னோட வாழ்க்கையை அவனே பாழ் செஞ்சுக்க போறானோ தெரியல"

வசந்தின் கார் வீட்டை அடைந்தது. சில நிமிடங்களில் வீட்டினுள் நுழைந்தான். எதுவும் பேசாமல் விறுவிறுவென தன் அறைக்கு விரைந்தான்.

நாராயணனும் மேகலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"போ, போய் புத்தி சொல்லு. இனி சினிமா அது இதுன்னு அலையாம வேற வேலையை தேடி பொழைக்குற வழியை பாக்க சொல்லு. அவனை சாப்பிட வை"

மேகலா வசந்தின் அறைக்குள் நுழைந்தாள். வசந்த் ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. 

"என்னடா ஆச்சு?"

வசந்த் பதில் பேசவில்லை.

"சரி விடு. இன்னொரு முறை பாத்துக்கலாம். கீழ வா, சாப்பிடு. அப்பா ஏதாச்சும் சொன்னா பொறுத்துக்கோ"

"சான்ஸ் கிடைச்சிடுச்சு"

தொடரும்...

Episode # 49

Episode # 51

{kunena_discuss:983}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.