(Reading time: 10 - 20 minutes)

அந்தப் பெண்ணின் முகத்தில் பரம திருப்தி. ஆனால் அந்த ஆடவனின் பார்வை மட்டும் அடிக்கடி உத்ராவிடம் சென்று மீண்டு மீண்டு வந்தது.

இம்மாதிரி பார்வைகளை பல சந்தித்து விட்டதால் அதை இலகுவாக ஒதுக்கிவிட்டு கடமையே கண்ணாய் இருந்தாள் உத்ரா.

பார்சலை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் போது இளைஞன் பார்வை இவளையே வட்டமிட்டது. தன்னிச்சையாய் இவள் முந்தானையை சீர் செய்யவும் அவன் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு, கூட இருந்த பெண்ணை தன் மேல் இன்னுமே அழுத்திக் கொண்டான். வெறுப்போடு உத்ரா முகம் திருப்பியதும், கணக்கு வழக்குகளை எடுத்துக்கொண்டு அறை எண் 302 க்கு வருமாறு சின்ன முதலாளியிடம் அழைப்பு வந்ததாக சொல்லிவிட்டு சென்றான் இன்னொரு பணியாள். 

அன்றைக்கு விற்றுப்போன ஆடைகளின் கணக்கையும் கையிருப்பையும் குறித்துக்கொண்டு மடிக்கணினியோடு லிப்ட்டிற்குள் நுழைந்தாள், இரண்டாவது தளத்தில் கடையில் பார்த்த அந்த இளைஞனும் யுவதியும் லிப்டில் தொற்றிக்கொள்ள அய்யோ என்றானது,

அந்நியமான ஒருத்தி அருகிலிருக்கிறாளே என்ற எண்ணமே இல்லாமல் அவன் விரல்கள் தாராளமாய் அவள் மேல பரவ அவளும் பசை போட்டு ஒட்டிக்கொண்டதைப் போல இழைந்திருந்தாள். சில கணமே ஆனாலும் மூச்சுமுட்டிப்போய் ஒருவித அறுவெறுப்பு வந்துவிட்டது. அதிலும் அந்த இளைஞனின் இதழ்கள் சற்று இகழ்ச்சியானதொரு முறுவலை உமிழ்ந்ததைப் போல இருந்தது,

அவள் சென்ற அறைக்கு பக்கத்து அறைதான் அவர்களுடையதும் போலும், இவள் 302ன் அழைப்பொலியைத் தட்டிவிட்டு காத்திருக்கையில், வெகு கவனமாக கதவை மறுபடி திறந்த DO NOT DISTURB என்ற போர்ட்டை மாட்டிவிட்டு அவன் உள்ளே சென்றான். அவளுக்கான அறையும் திறக்கப்பட்டது. 

உள்ளே நுழைந்ததுமே சிகரெட்டின் நாற்றமும், மதுவின் வாடையும் குப்பென்று சூழ்ந்தது. சின்ன முதலாளி வெற்று மார்போடு கட்டிலில் அமர்ந்திருந்தான்.

உட்கார் உத்ரா, கணக்கு வழக்குகளையெல்லாம் கொண்டு வந்திருக்கிறாயா ?

தலையசைத்தவள் விழிகளைத் தாழ்த்திக் கொண்டாள். இந்த அறையில் நீண்ட நேரம் இருப்பது ஆபத்து என்று மனம் எச்சரித்துக் கொண்டு இருந்தது.

சார் ... கீழே வாடிக்கையாளர்கள் அதிகம் இருக்கிறார்கள் நான் சென்றுவிட்டு அனந்துவை கணக்கு சொல்ல அனுப்பட்டுமா ? என்றாள்

ஏன் ? அனந்து நீ நன்றாக கணக்கு செய்வாய் என்று அண்ணனும் அப்பாவும் சதா சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே, அதிலும் நேரம் பார்க்காமல் பொறுமையாய் எல்லாவற்றையும் கவனித்து செய்வதில் உனக்கு நீதான் நிகர் என்று அண்ணன் புகழ்ந்து தள்ளுகிறானே ?! அவனுடன் மட்டும்தானா ?!

இரட்டை அர்த்த வார்த்தைகளை காதில் வாங்காதவளாய் அவள் தலையசைத்து மடிக்கணியை ஆன் செய்துவிட்டு நிமிர்ந்து அவன் முகம் பாராமலேயே விளக்க ஆரம்பித்தாள்.

பத்து நிமிடங்கள் முடிந்திருக்க திடுமென்று அவனின் அணைப்பில் இருந்தாள் உத்ரா.

எரியும் கங்குகள் மேலே விழுந்ததைப் போல இருந்தது.

விடுங்கள் ஸார் இதென்ன ?

கூடுமானமட்டும் அவனின் பிடியில் இருந்த விலக முயன்றாலும், அவளின் கரங்களுக்கு அந்த வலுவில்லை,

இப்போ கையை எடுக்கறீங்களா இல்லை கத்தி கூச்சல் போடட்டுமா ?

வேகமாய் உந்த போதையின் பிடியில் இருந்த அவன் சற்று தள்ளிவிழுந்தான்

கதவு பூட்டப்பட்டு இருந்தது. பால்கனிக் கதவு திறந்திருக்க கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பக்கத்தில் ஓடிவந்தாள். 

பக்கத்தில் கையில் மதுவுடன் நின்றிருந்த அதே இளைஞன் இவளின் பதட்டத்தினைக் கண்டதும் புருவத்தை மேல் தூக்கிப்பார்த்தவன். மறுபடியும் உட்பக்கம் வேகமாய் இழுக்கப்பட்டாள் உத்ரா. இரண்டு மூன்று முறை இதே போராட்டத்திற்குப் பிறகு உத்ரா இருந்த அறையின் கதவு வேகமாய்த் தட்டப்பட்டது. பொறுமையிழந்த அவன் உத்ராவை தள்ளிவிட்டு கதவைத் திறந்தான் மேற்கொண்டு ஏதும் பேச துவங்கும் முன்னரே நான்கடி தள்ளி கீழே விழுந்தான். மேலும் ஒரு நான்கைந்து அடிகளுக்குப் பிறகு அவனால் எழுந்து நிற்க முடியவில்லை.

அந்த இளைஞன் உத்ராவிடம் வந்தான்

நீ கீழே புடவை விற்றுக் கொண்டிருந்த பெண் தானே ?! 

ம்.. தலையசைத்தாள். 

இங்கே என்ன பண்றே ? பிடிக்கலைன்னா ஏன் வரணும். அப்பறம் கத்தணும். ரொம்ப முரண்டு பண்ணினா ?

நான் ... நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை, இவர் எங்கள் கடையின் முதலாளி ..... கணக்கு சொல்லிட,,,, உத்ரா வெகு சிரமப்பட்டு பேசினாள்.

அவன் ரிசப்ஷனில் பேசி ஒரு சூஸ் ஆர்டர் பண்ணினான். எலுமிச்சை ரசத்தோட சற்று உப்பு கலந்த அந்த பானம் உள்ளே சென்றதும், சற்று ஆசுவாசப்பட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.