(Reading time: 9 - 17 minutes)

“சாபிட்டு போ” என்றவரிடம் “பத்து நிமிஷத்துல வந்திடுவேன்” கூறி வெளியே வந்தான்.

சுற்றி சாரு அங்கே இருக்கிறாளா? அவள் கார் எங்காவது உள்ளதா என பார்த்துக் கொண்டவன் அவள் அங்கு இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் கிளம்பினான்.

அநத ஏரியாவின் பார்க் பத்து வீடு தள்ளி உள்ளது. காரை கெராஜில் இருந்து எடுத்து திருப்பி ஓட்டும் வரை அவனுக்கு பொறுமை இல்லை. ஓட்டமும் நடையுமாக பார்க்கை  அடைந்தான்.

பார்க்கில் சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. மழலை மொழியில் எதோ பேசின. சில ஜோடிகள் தங்களை மறந்து காதல் மயக்கத்தில் இருந்தன. அங்கு இருந்த சின்ன செயற்கை நீர் ஊற்றில் பறவைகள் சப்தமிட்டபடி  குதூகலித்தன. மேகங்கள் அன்றைய தின கார்ட்ரூனை வரைந்திருந்தன.

வருடத்திற்கு மூன்று மாதங்கள் மட்டுமே சூரியன் அங்கே பிரகாசிப்பார். இரவு ஒன்பதரை ஆனாலும் மறைய மாட்டேன் என அடம்பிடிப்பார். ஆகாஷை போலவே சூரியனும் கொஞ்சம் உக்ரமாக இருந்தார்.  

இவற்றை ரசிக்கும் மனநிலையில் ஆகாஷ் இல்லை. ரசிக்கும் ரகமும் இல்லை. ஒரு பெஞ்சில் அவன் ஜீனியர் லியா அமர்ந்திருக்க பக்கத்தில்  நாற்பது வயதையொத்த லியாவின் மாமா பிக் (bick) அமர்ந்திருந்தார். “லியா . . .” என அருகில் சென்றான்.

“லியா போட்டோ” ஆகாஷ் மூச்சு வாங்க கேட்டான். அவள் கொடுத்தாள். “இதே தான்” என அதை பார்த்தான். பார்க்கையில் மனம் சொல்ல முடியாத வேதனையை அடைந்தது. அதை கொஞ்சம் ஆராய்ந்தவன்.

“அடுத்து என்ன?” அருகில் லியாவின் மாமா பிக் கேட்டான்.

“இப்போ நான் சாருவா இருந்தா என்ன செய்வேன்?“ ஆகாஷ் இருவரிடமும் கேட்க . .

“அத்தனை லேசில் விட மாட்டாய்” பிக் பதிலளிக்க

“டி.என்.ஏ. டெஸ்ட்க்கு அப்ரோச் பண்ணலாம்” இது லியா

“எக்ஸாட்லி” ஆமோதித்த ஆகாஷ் “டி.என்.ஏ டெஸ்ட் அதுதான் சாருவோட அடுத்த மூவா இருக்கும்” சொன்னவன் தொடர்ந்தான் “பிக் சாருவ கண்காணி .  .” என்றவன் மேலும் பல முக்கிய வேலைகளையும் கொடுத்தான். அவற்றை உள்வாங்கிய பிக் கிளம்பினான்.

“லியா சாரு மேல கேஸ் எதாவது இருக்கா? அவளோட சோஷியல் செக்யூரிட்டி நம்பர் இதெல்லாம கலெக்ட் பண்ணு . . ” ஆகாஷ்  கட்டளையை நிறைவேற்ற அவளும் கிளம்பினாள்.

லியா ஆகாஷின் ஜீனியர் லாயர். அவள் தந்தை கிரிஸ்டபர் ஐரோப்பிய நாட்டை சார்ந்தவர் அன்னை செனா ஆப்ரிக்க அமெரிக்கன். லியா இவர்களின் செல்ல மகள்.

லியாவின் தந்தையும் வக்கீல் தான். பணம் அவரை துரத்தியது அவருக்கு பணத்தின் மேல் மோகம் இல்லை. அவர் ஏழைகளுக்காக அதிகம் பாடுபடுபவர். அவருக்கு வக்கீல் பீஸ்சாக கிடைப்பவை பெரும்பாலும் முட்டை, பிரெட், காய், கனிகள் இப்படிதான். சில கேஸ்களுக்கு அதுவும் கிடைக்காது. அவரும் கேட்க மாட்டார். அவரை எப்பொழுது வேண்டுமென்றாலும் சந்திக்கலாம். ஒரு மணி நேரத்திற்கு நூறு டாலர் வசூலிக்கும் ரகம் இல்லை.

ஒரு கட்டத்தில் கணவன் மனைவி பிரிந்துவிட்டனர். ஆனால் லியா தந்தையைவிட்டு பிரியவில்லை. பள்ளி முடிந்ததும் தந்தையின் அலுவலகத்திற்கு வந்துவிடுவாள். அவர் எப்படி கேஸ்சை கையாளுகிறார் என்பதை கூர்ந்து கவனிப்பாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான செயல்.

அவள் மனதில் தானும் வக்கீல் ஆக வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. அதை நிறைவேற்றினாள். தன் தந்தை அல்லாது அவளுக்கு மிகவும் பிடித்தமான நபர் அன்னையின் தம்பி பிக். அவனை அடிக்கடி சந்திப்பாள். அவனோடு உலகையே சுற்றுவாள்.

இதற்கு அவள் தந்தை என்றும் தடைவிதித்தது இல்லை. பல இடங்களுக்கு சென்று பலதரபட்ட மனிதர்களை சந்திப்பதில் அவளுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்தியாவிற்கு பிக்குடன்  வந்துள்ளாள்.

பிக் ஒரு வித்யாசமான மனிதன். திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவருக்கு லியாவை மிகவும் பிடிக்கும். லாப்டாப் செல்போன் போன்றவற்றை ஹேக் செய்வதில் கில்லாடி ஆனால் என்றும் மாட்டியதில்லை.

தன் தந்தையை போலவே ஏழைகளுக்கு உதவும் ஆகாஷை பார்த்தாள். அவனிடம் ஜீனியராக சேர ஆசைப்பட்டாள்.  ஆகாஷ் ஏழைகளுக்கு உதவுவான் அதே சமயம் பணம் உள்ளவர்களிடம் பணம் வாங்கிவிடுவான்.

ஆகாஷிடம் ஜீனியராக பணிபுரிந்த இளைஞனுக்கு மிகப் பெரிய சட்ட நிறுவனத்தில் (law firm) வேலை கிடைத்து கேளிப்பேர்னியா சென்றுவிட்டான். அந்த இடத்திற்கு அரைமனதாக லியாவை சேர்த்தான். தொடக்கத்தில் இவள் என்ன வேலை செய்ய போகிறாள் என்றுதான் நினைத்தான் ஆனால் அவள் அப்பாவின் திறமை அவளிடம் கொட்டிக் கிடந்தது.

லியாவை நியூ யார்க்கிற்கு ஒரு கேஸ் விஷயமாக வரச் சொல்லி இருந்தான். அது மிகவும் முக்கியமான கேஸ். ஆனால் இப்போதோ சாருவின் பிரச்சனையை சமாளிக்க வந்ததுப் போல் ஆயிற்று.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.