(Reading time: 11 - 22 minutes)

“அப்படியோ, ஸோ அந்த கொலைக்கு பிறகுன்னா, கிட்டத்தட்ட பத்து வருஷமா தனியாத் தொழில் பண்றேன்னு சொல்லு...”

“ஆமாம் சார்.....”

“மறுபடியும் பொய் சொல்றியே... ஒரு மூணு வருஷம் முன்னாடி அரும்பக்கத்துல நடந்த கொள்ளைல நீயும், அவனும்தானே தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகளா இருக்கீங்க.....”

“சார் அது நாங்க பண்ணலை சார்....”

“எந்த திருடன் நான்தான் பண்ணி இருக்கேன்னு ஒத்துட்டு இருக்கான்....”

“சார் மெய்யாலுமே சார்.... எங்களுக்கும் அந்த திருட்டுக்கும் சம்மந்தம் இல்லை... நான் அப்போ தப்பிச்ச உடனேயே ஆந்திரா பக்கம் போயிட்டேன்... அதுக்குப்பிறகு இப்போதான் வரேன்....”

“அப்படியா, அப்போ இந்த போட்டோல இருக்கறது யாரு.... உன்னோட டூப்பா....”, சந்திரன் அந்தக் கைதி ஒரு இரவு விடுதியில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் புகைப்படத்தை காட்டினார்...

“இது இது நான் இல்லை சார்... நான் இந்த இடத்துக்கு போனதே இல்லை...”

“அப்படிங்களா சார்... ஸோ இந்த போட்டோல இருக்கறது  நீங்க இல்லை... அந்த கொலைக்கு பிறகு நீயும், உன் கூட்டாளியும்  ரெண்டு பேரும் சேர்ந்து இல்லை... அப்படித்தானே...”

“ஆமாம் சார்....”

“யுவர் ஹானர்... சில நாட்களுக்கு முன்னால் இந்த வளாகத்திற்குள் என்னை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் நடந்தது தங்களுக்கு நியாபகம் இருக்கும் என்று நம்புகிறேன்.... அதில் என்னை நோக்கி சுட்டவனை போலீஸ் கைது செய்து விட்டார்கள்.... அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தங்கள் அனுமதியை கோருகிறேன்....”, சந்திரன் கேட்க, நாராயணன், கவுன்சிலர் அந்தக் கைதி மூவரும் பேயறைந்ததை போல் ஆனார்கள்...

மதி அந்த கைதியை அழைத்து வந்து நீதிபதி முன்பாக சமர்பித்தார்...

“இதோ இந்த குற்றவாளிக் கூண்டில் நிற்கும் இவன்தான் என்னை அன்று துணிக்கடை மாடியிலிருந்து சுட்டது.... தமிழ் நாட்டில் பலஇடங்களில் போலீஸ் தரப்பிலும், கடைக்காரர்கள் தரப்பிலும் CCTV கேமரா பதிக்கப்பட்டுள்ளது... அதில் ஒன்றில்தான் இவன் மாட்டினான்.... அந்த துணிக்கடைக்கு பின்னாலிருந்த ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்த CCTV கமெராவில் இவன் கட்டிடத்தின் மேலிருந்து கோர்ட் வளாகத்தை வேவு பார்ப்பது பதிவாகியுள்ளது... அதே போல் இவன் என்னை சுட்டு விட்டு தப்பிச் செல்லுவதும் அதில் பதிவாகியுள்ளது.... இரண்டு நாட்கள் முன்பே இவனை காவல்துறை கைதுசெய்து விட்டது.... இவனிடமிருந்து உண்மையை வரவைக்க அவர்களுக்கு இரண்டு நாள் கால அவகாசம் தேவைப்பட்டதால் உடனே நீதிமன்றத்தில் அவனை ஒப்படைக்கவில்லை....”, சந்திரன் அனைத்தையும் விளக்கி CCTV காட்சிகளை நீதிபதியிடம் ஒப்படைத்தார்...

“அது எப்படி சந்திரன் சார், எல்லா கிளிப்பிங்லயும் அந்த நபர் ஹெல்மெட் போட்டிருக்கார்.... எதை வச்சுட்டு நீங்க அந்த நபர் இவர்தான்னு சொல்றீங்க....”

“இந்த மாதிரி அறிவாளித்தனமான கேள்வி நீங்க கேப்பீங்கன்னு எனக்குத் தெரியும் அம்பலவாணர் அவர்களே... அந்த ஹோட்டல்ல இருந்து ரெண்டு பேர் வெளிய வராங்க பாருங்க... அவங்க முகத்தை நல்லா உத்து பாருங்க.... உங்களுக்கே யாருன்னு தெரியும்... அவங்க அப்பறம் எந்த பைக்ல ஏறிப் போறாங்கன்னு பாருங்க.... அவங்க உடை எல்லாத்தையும் கவனிச்சு பாருங்க... அதே உடை, பைக்கை நீங்க சுட்டபின்னாடி பைக்ல போறவன்கிட்டயும் பார்க்கலாம்.... இதை எல்லாத்தையும் விட குற்றவாளியே குற்றத்தை அவன் வாயாலேயே ஒத்துக்கிட்டான்...”

“நீதான் சந்திரனை நோக்கி சுட்டதா...”, நீதிபதி கேட்கும்போது நடுவில் புகுந்த அம்பலவாணர் போலீஸ் தரப்பில் மிரட்டி இவனை இப்படி சொல்ல வைத்திருக்கலாம் என்று கூற நீதிபதி குற்றவாளியை பார்த்தார்...

“நான்தான் அந்த மாடியிலிருந்து வக்கீல் சாரை சுட்டேன்... இங்க நிக்கிற நாராயணனோட அண்ணாதான் என்னை இந்த வேலை பண்ண சொன்னார்... இது மட்டும் இல்லை... பத்து வருஷத்துக்கு முன்னாடி அந்த ரெட்டை கொலை பண்ண சொன்னதும் நாராயணனும், அவங்க அண்ணனும்தான்... அந்த உமாபதிக்கிட்ட இந்த நாராயணன் முதல்ல போய் அந்த கல்யாண மண்டபத்தை கேட்டு இருக்கார்... அவங்க தர மாட்டேன்னு சொன்னதால, அவங்கக்கிட்ட இவங்க நண்பரை விட்டு மிரட்டி வாங்க வச்சுட்டு, விஷயம் வெளிய வராம இருக்க அவங்களை கொலை பண்ண சொல்லி சொல்லிட்டாரு... அந்த கொலைக்காக எங்க ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ரெண்டு லட்சம் பணம் கொடுத்தாரு... அதே மாதிரி ஜெயில்ல இருந்து தப்பிக்க இந்த கவுன்சிலர் அய்யாதான் உதவி செஞ்சாரு....”

“இத்தனை நாள் இல்லாம திடீர்ன்னு வந்து எல்லா விஷயமும் பேசற....”

“அதோ அங்க வக்கீல் கவுன் போட்டு ஒரு பொண்ணும், அது பக்கத்துல ஒரு பையனும் உக்கார்ந்து இருக்காங்களே அவங்க ரெண்டு பேரும் பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் பண்ணின கொலைலேர்ந்து  மூணு நாளைக்கு முன்னாடி நான் நாயர் கடைல குடிச்ச டீ வரைக்கும் எல்லாத்தையும் ஆதாரத்தோட கண்டு பிடிச்சுட்டாங்க... இனியும் மறைச்சு பயன் இல்லைன்னு உண்மைய சொல்லிட்டேன் நீதிபதி ஐயா....”,நீதிபதி சாரங்கனையும், பாரதியையும் பார்க்க அவர்கள் தாங்கள் திரட்டிய அத்தனை ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.