(Reading time: 12 - 23 minutes)

மித்ராவும் தன்னிடம் உள்ள ஒரு புது புடவை எடுத்துக் கொள்வதாக சொல்ல, வீட்டில் எல்லோரும் மறுத்தனர். மித்ரா எடுத்துக் கொள்ளவில்லை எனில், ஷ்யாமும் எடுக்க மாட்டான். எனவே அவளை எடுக்க சொன்னார்கள். அதன் படி மித்ராவிற்கு இளநீல நிற டிசைனர் புடவையும் , ஷ்யாம் நேவி ப்ளூ கோர்ட்டும், உள்ளே சட்டை ஸ்கை ப்ளுவிலும் எடுத்துக் கொண்டனர். அதை உடனடியாக தைக்க கொடுத்து விட்டும் கிளம்பினர்.

ஷ்யாம் வீட்டிற்கு தான் செல்ல போகிறான் என்று நினைக்க, அவனோ நேராக தன் அத்தை வீட்டிற்கு சென்றான். மித்ரா முதல் நாள் காரில் முன் பக்கம் உட்கார பயப்படுவதை பார்த்த ஷ்யாம், இன்று டிரைவரை கார் ஓட்ட சொல்லிவிட்டு, மித்ராவோடு பின்புறம் அமர்ந்து வந்தான்.

எப்போதும் போல் அவளிடம் பேச்சுக் கொடுத்தபடி சென்றதால், மித்ராவும் கார் சென்ற பாதையை கவனிக்கவில்லை.

கார் நிற்கவும் தான் பார்த்தவள், தன் அம்மா வீட்டிற்கு வந்து இருப்பதை உணர்ந்தாள்.

காரைத் திறந்து இறங்கி உள்ளே செல்ல, அங்கே தன் அம்மா, அப்பா , பாட்டி மூவரும் பேசிக் கொண்டு இருந்ததைப் பார்த்துவிட்டு நேராக தன் அம்மாவின் பக்கம் அமர்ந்தாள்.

அவளை எதிர்பாரதாதால் திகைப்பும் , சந்தோஷமும் அடைந்தவர்கள்

“ஹேய். மிதுமா, எப்படிடா வந்த? “ என்று கேட்டனர்.

“அத்தான் தான்மா கூட்டிட்டு வந்தார்” என்று சொன்ன பின்னேதான் ஷ்யாமை கவனித்தவர்கள்,

“ஹேய்.. ஷ்யாம் வாங்க, வாங்க” என்று வரவேற்றனர்.

“வந்தேன்.. வந்தேன்..” என, எல்லோரும் அவனிடம் நலம் விசாரித்தனர். வீட்டு வேலைக்கரார்கள் கூட அவனிடம் விசாரித்து விட்டே சென்றனர்.

வந்தவுடன் மித்ராவைப் பார்த்தது தான் சபரியும், முரளியும். அதற்கு பின் முழுக்க முழுக்க ஷ்யாமிடமே பேசிக் கொண்டு இருந்தனர். மித்ரா அமைதியாகவே இருக்க, அதைக் கவனித்த ஷ்யாம்,

“அத்தை, என்னையே விசாரிச்சுட்டு இருக்கீங்க? உங்க பொண்ணுகிட்டே கேட்கலையா என்னை பற்றி? “ என்று சபரியிடம் கேட்டான்.

“அவ கிட்டே கூட சொல்லாம, எங்களைப் பார்க்க அவளைக் கூட்டிட்டு வந்துருக்க நீ. இதுக்கு மேலே என்ன வேணும் விசாரிக்க?

“அட .. அவகிட்டே சொல்லலைன்னு நீங்க எப்படி சொல்றீங்க அத்தை?

“ஷ்யாம்.. என் பொண்ணைப் பற்றி எனக்குத் தெரியாதா? அவகிட்டே சொல்லி இருந்தால் இங்கே வரும் முன் போனில் சொல்லி இருப்பாளே?

“ஏன் சர்ப்ரைஸ் கொடுக்கக் கூட சொல்லாமா இருந்ந்து இருக்கலாமே “

“அப்படி சொன்னாதான், அவள் முதலில் சொல்லுவா”

“சரி.. சரி.. உங்ககிட்டே பேசி ஜெயிக்க முடியுமா? “ என்று கூறி கையை உயர்த்தினான்.

“ஒத்துகிட்டா சரி” என்று கூறிய சபரி, உடனடியாக இரவு உணவிற்கு என்ன இருக்கிறது என்று பார்த்து வர சென்றார்.

பாட்டியும் ஷ்யாம் கேட்ட பிறகு, மித்ராவிடம் மெதுவாக பேச்சு கொடுத்தார். ஷ்யாம் வீட்டில் என்ன, எப்படி என்று கேட்டுக் கொண்டார். மித்ராவின் பதிலைக் கேட்டவருக்குள் மனதில் மிகுந்த திருப்தி தான். அவருக்குத் தெரியும்தான் என்றாலும், ஷ்யாம், மித்ராவின் மனநிலையே அவரைக் கவலை கொள்ள செய்தது.

ஆனால் மித்ராவின் பேச்சில் அவள் விருப்பம் இல்லாமல் அங்கே இருப்பது போல் தெரியவில்லை. ஷ்யாமோ இப்போதும் அவளைப் பற்றிக் கவலைபட்டவனாக சபரியிடமே வெளியில் தெரியாமல் அவளுக்கு சப்போர்ட் செய்தது அவருக்கு புரிந்தது. இதை எல்லாம் பார்த்தவருக்கு மிகுந்த நிறைவு.

இரவு உணவை அங்கேயே முடிக்கும்படி சபரி, முரளி இருவரும் கூற, ஷ்யாம் சரி என்று சொல்லும் முன், மித்ரா,

“அம்மா, நான் அத்தைகிட்டே கேட்டு சொல்றேனே. அவங்க வெயிட் பண்ணுவாங்க” என்று கூறவும், அதைக் கேட்ட எல்லோரும் அவள் அங்கே பொருந்தி விட்டதை எண்ணி சந்தோஷப் பட்டனர்.

ஷ்யாம் ஏதோ சொல்ல வர, அதை கவனியாதவளாய் மைதிலிக்கு அழைத்துப் பேச, அவரோ ஷ்யாம் ஏற்கனவே சொல்லி விட்டதாகக் கூறி, அவர்கள் டின்னரை அங்கே முடிக்க சொல்லிக் கூறினாள்.

மைதிலியிடம் பேசிவிட்டு ஷ்யாமை நோக்கி திரும்பியவள், இடுப்பில் கைவைத்து முறைத்தபடி

“இத முதலிலியே சொல்லிருக்கலாம்ல அத்தான். இப்போ பாருங்க நான் தான் பல்பு வாங்கிட்டேன்” என்று சிணுங்கியபடி கூறவும்,

ஷ்யாம் அவளை வைத்த கண் வாங்கமால் பார்ப்பதைக் கண்ட பெரியவர்கள் மெதுவாக டைனிங் ஹால் நோக்கி சென்று இருந்தனர்.

மித்ராவிடம் “ஹேய் .. வாலு, நான் என்ன சொல்ல வரேன்னு கவனிக்காம, நீயே வேகமா டயல் பண்ணி பேசிட்டு என்னாலே தான்னு சொல்றியா? “ என்று கேட்டான்.

அவள் சிணுங்கலுடன் “போங்க அத்தான். “ என்று கூற, அதில் தடுமாறி விழுந்தவனாக , அவளை இழுத்து அணைத்து தலையில் முட்டினான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.