(Reading time: 9 - 17 minutes)

"கண்டுபிடிக்க முடியல சார், முயற்சி பண்ணிட்டு இருக்கோம்"

"இதை சொல்ல தான் இவ்வளவு வேகமா வந்திங்களா?"

"இந்த முறை எல்லாம் புதுமையா இருக்கு கர்னல்" என்றான் அந்த வீரன்.

கர்னல் நடையை நிறுத்தி வீரனை பார்த்தார். "என்ன புதுமை?"

"ஒருத்தரை கடத்தணும்னா தீவிரவாதிகள் அவரை சில நாட்கள் பின்தொடர்ந்து, அவர் என்ன செய்கிறார் எங்கெங்கு செல்கிறார் என வேவு பார்த்து கடத்துவார்கள். ஆனால் ஜான்சனின் கதை வேறு மாதிரி இருக்கிறது".

கர்னல் கேள்விக்குறியோடு வீரனை பார்த்தார்,

"இதுவரை ஜான்சன் அங்கே போனதில்லை. ஜான்சன் மட்டுமல்ல அவர் கூட போன எந்த ராணுவ வீரரும் அந்த இடத்துக்கு இதுக்கு முன்னாடி போனதில்லை".

"அப்போ ஏன் அவங்க போனாங்க?"

"அதை தான் விசாரிச்சிட்டு இருக்கோம் சார். இன்னும் கொஞ்ச நேரத்துல காரணம் தெரியும்"

"தீவிரவாதிகள் திட்டம் போட்டு காரியத்தை செயல்படுத்திருக்காங்க சார்"

"அந்த ஒநாய் கூட்டத்தை புகழ்ந்து பேசாத. நேருக்கு நேர் எதிர்க்க முடியாம ஒளிஞ்சு நின்னு முதுகுல குத்துறவனுங்க. அவங்களுக்கு எல்லாம் துளி கூட இரக்கம் பாக்காம சுட்டு தள்ளணும்".

திடீரென கர்னல் முன் ஒருவன் வந்து நின்று சல்யூட் வைத்தான். "சார்,  ஜான்சன் அங்கே போனதுக்கு காரணம் ஒரு பையன்"

கர்னலின் முகத்தில் அதிர்ச்சியும் ஆச்சர்யமும் ஒன்றாக தோன்றியது. "பையனா?"

"ஆமா சார். அவன் பெயர் ஹகீம். மார்க்கெட்ல வேலை செய்றான் சார்"

"அவனை உடனே பாத்தாகணும், இப்போவே"

அவர் கட்டளையை நிறைவேற்ற அந்த வீரன் அங்கிருந்து வேகமாய் சென்றான்.

து பகல் எது இரவென ஏதோ புரியாத உலகில் சிக்கியது போல் தவித்துக் கொண்டிருந்தான் ஜான்சன். ஏகப்பட்ட சித்திரவதைகளை அனுபவித்திருந்ததால் வலியால் முனகியபடி இருட்டறையில் படுத்துக்கொண்டிருந்தான். இது போல் தான் அவதிப்படுவோம் என அவன் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. சரியாக உணவும் சாப்பிடாததால் அவன் உடல் மிகவும் சோர்ந்து காணப்பட்டது.

தன் உயிர் போவது முடிவாகிவிட்டது என அவன் புரிந்துகொண்டான். இனி ஒன்றும் செய்யமுடியாது. நடப்பவை நடக்கட்டும். கடவுளின் முடிவை யாரும் மாற்றமுடியாது.

முதன் முதலில் மரணத்தை பற்றி சிந்தித்தான் ஜான்சன். இவ்வளவு சீக்கிரம் மரணம் தன்னை நெருங்கும் என்று அவன் நினைக்கவில்லை.

இன்னும் சிறிது காலத்தில் ராணுவத்தை விட்டு விலகி மாலிகாவுடன் நிம்மதியான வாழ்க்கையை வாழ நினைத்திருந்தான் ஜான்சன். அந்த கற்பனை எல்லாம் கனவாய் கரைந்து போனது.

மாலிகா! அந்த பெயரை நினைத்தவுடன் அவளது பிஞ்சு முகம் ஜான்சனின் மனக்கண் முன் தோன்றியது. தான் இல்லாமல் அந்த குழந்தை எப்படி வாழ்வாள்? இந்த சமுதாயத்தை புரிந்துகொள்ளும் சராசரி அறிவு கூட அவளுக்கில்லையே. கடவுளே! என நொந்துகொண்டான் ஜான்சன்.

ஒருவேளை மாலிகாவை அவன் சந்திக்காமலிருந்தால் மரணத்தை ஏற்றுக்கொள்வதில் அவனுக்கு எந்தவித சிரமும் இருந்திருக்காது. கடவுள் தான் அந்த தளிரைப் பாதுகாக்கவேண்டும் என மனதிற்குள் பிரார்த்தனை செய்தான் ஜான்சன்.

திடீரென காலடி சப்தம் அவன் பிரார்த்தனையை கலைத்தது. கண் விழித்தான். அவனிருந்த அறையின் வெளியே காலடி சப்தம் நின்றது. இருவர் பேசும் குரல் அவன் காதில் விழுந்தது.

"இந்த அமெரிக்கனை எப்போது தீர்த்து கட்டுவது?". வந்தவன் அங்கு நின்றவனிடம் கேட்டான்.

"தலைவர் தான் முடிவு செய்யவேண்டும்".

"அமெரிக்க ராணுவத்தினரின் நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உள்ளது?"

"தலைகீழ் நின்றாலும் அவர்களால் நடப்பவையை தடுக்க முடியாது"

"நாளை நம் பலம் என்னவென்று அவர்களுக்கு புரியும். நாம் செய்யும் காரியத்தை பார்த்து ரோந்துக்கு செல்லும் ராணுவத்தினர் கூட குலைநடுங்க வேண்டும்"

இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.

அவர்கள் அரபியில் பேசிக்கொண்டது ஜான்சனுக்கு வெறுப்பைத் தந்தது.  நீண்ட மூச்சினை வெளியேற்றிய ஜான்சன் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.

"அந்த பொடிப் பையன் ஹகீம் சரியான மூளைக்காரன்"

ஹகீம் என்ற வார்த்தை ஜான்சனை பேயறைந்தது போல் அறைந்தது.

"நம்மளை விட அந்த பையன் தான் அமெரிக்கர்கள் மேல பயங்கரமான கோபத்துல இருக்கான்"

நடந்த சூழ்ச்சிகளை ஜான்சன் மெல்ல மெல்ல உணரத் தொடங்கினான். திட்டம் போட்டு ஹகீம் நம்மை சிக்க வைத்திருக்கிறான். இதை நிச்சயம் ஜான்சன் எதிர்பார்க்கவில்லை. அவன் சொன்னதை தான் நம்பியிருக்கக்கூடாது. தவறு செய்துவிட்டேன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.