(Reading time: 8 - 16 minutes)

“ஆமா பெரிய உடம்பு..அதெல்லாம் வயசான காலத்துல எதாவது பண்ணிட்டு தான் இருக்கும்..”,என்றவாறே காபி கலந்து இருவருக்குமாய் கொண்டு வந்து அவனுக்கும் கொடுத்து தானும் உண்ண ஆரம்பித்தார்.

“ம்ம் அப்பறம் உங்க பாப்பா எப்படியிருக்கா?”

“ஏன் உன் பொண்டாட்டி எப்படியிருக்கானு கேட்க மாட்டியா?”

பதிலுரைக்காமல் மென்னகையோடே தன் காபியை பருக இடவலமாய் தலையசைத்தவர்,

“ம்ம் ரெண்டு பேர் மனசுலயும் அன்பு நிறையவே இருக்கு அதை காட்டிக்க தயாரா இல்ல..பாப்பாவும் உங்களயே நினைச்சு தான் உருகுறா..எப்போ பாரு ஏதோ சிந்தனைலயே  இருக்கா..ஆனா தவறியும் உன்ன பத்தி மட்டும் பேச்சை வளர்க்க மாட்றா..”

“ம்ம் என் பொண்டாட்டிக்கு என்னில் பாதியாவது வைராக்கியம் இருக்காதா!!சரி சிந்தாம்மா நா ஹாஸ்பிட்டல் கிளம்புறேன்..நீங்க உங்க கிட்ட இருக்குற சாவி வச்சு வீட்டை பூட்டிட்டு கிளம்பிடுங்க..வரட்டுமா..அப்பறம் உங்களுக்குத் தேவையான மாத்திரை எல்லாம் அங்க டேபிள்ல வச்சுருக்கேன் மறக்காம எடுத்துட்டு போங்க..”

அவனை வழியனுப்பிவிட்டு வந்தவருக்கு நினைவுகள் அவனை முதன்முதலாக சந்தித்ததை நோக்கி பயணித்தது.

ஐந்து வயது சிறுவனாய் பெற்றோரை இழந்து சொந்தகாரர் ஒருவரால் சிந்தாமணி வேலைப் பார்த்துக் கொண்டிருந்த ஆசிரமத்தில் சேர்ந்தான் திவ்யாந்த்.இளம் விதவையான அவர் அப்போது தான் அந்த ஆசிரமத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார்..கண்களில் நீர்கோர்க்க அவனை பார்த்த அவருக்கு ஏனோ பாவமாய் தோன்ற அவனை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

அன்று முழுவதும் அவர் பின்னே சுற்றியவனுக்கும் அவரை பிடித்துவிட அதன்பின் அவரோடு மகனாகவே உறவாட ஆரம்பித்தான்.

அரசுப்பள்ளியில் பயின்றவன் படிப்பில் அத்தனை ஆர்வமாய் இருக்க பல பேர் அளித்த சலுகைகள்,நன்கொடை மூலம் பன்னிரெண்டாவது வரை படித்து மாவட்டத்திலேயே முதல் மாணவனாக வந்தான்.சிந்தாமணிக்கோ மனம் கொள்ளா மகிழ்ச்சி எப்படியாவது அவன் விரும்பிய மருத்துவ படிப்பை படிக்க வைக்க வேண்டும் என படாதபாடு பட்டு தன்னால் ஆன முயற்சிகள் செய்து கவுன்சிலிங்கில் கிடைத்த நல்ல கல்லூரியில் சேர்த்தார்.

அவனை பிரிவது கடினமாய் இருந்தாலும் இதுதான் அவன் எதிர்காலம் என்று முடிவுசெய்தவர் தன்னை தேற்றியவாறு அவனை அனுப்பி வைத்தார்.அதுமட்டுமல்லாது ஆசிரம விதிப்படி படிப்பு முடிந்ததும் அங்கிருந்து பிள்ளைகள் கிளம்பிவிட வேண்டும்.எனவே இப்போதே அவனை பிரிந்து இருக்க பழகிக் கொள்ள வேண்டும் என எண்ணிணார்.

ஐந்து ஆண்டு காலங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிவிட மருத்துவனாய் தன் முன் வந்து நின்றவனைப் பார்த்தவருக்கு கண்கள் ஆனந்தத்தில் குளமாகியது.

ஆசிரம நிர்வாகி அவன் கிளம்புவதற்கான வேலைகளை முடித்து அவனிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ள தன் உடைமைகளோடு வெளியே வந்தவனை வழியனுப்புவதற்காக மொத்த ஆசிரமும் வாசலில் நின்றிருந்தனர்.

நிதானமாய் சிந்தாமணியின் அருகில் சென்றவன்,”போலாமா?உங்க பொருளெல்லாம் எடுத்துக்கலையா இன்னும்?”

“நா..நநானா..நா எங்கப்பா வரணும்?”

“பிள்ளையோட தங்காம இங்கே தனியாவா இருக்க போறீங்க?”

அத்தனை வருத்தமும் பொங்கி எழ பெருங்குரல் எடுத்து கதற ஆரம்பித்தார்..அவரை தோளில் தாங்கி கொண்டவன் நிர்வாகியிடம்,

“சார் அவங்களுக்கும் வயசாய்டுச்சு முன்ன மாதிரி வேலையெல்லாம் பாக்க முடியாது அதனால என்னோடேயே அழைச்சுட்டு போய்ட்ரேன்..”,என்று கூறி தன்னோடு அழைத்துச் சென்றான்.

சிறிய வீடாய் வாடைக்கு எடுத்து இருவருமாய் தங்கள் புது வாழ்க்கையை நிம்மதியாய் வாழ ஆரம்பித்தனர்.

பழைய நினைவுகளை நினைத்தவருக்கு கண்கள் கலங்கியது.குறுகிய காலத்திலேயே தன் திறமையை நிரூபித்து தொழிலை கடவுளாய் மதித்து தன் நோயாளிகளை குணப்படுத்தி நன் மதிப்பை பெற்றிருந்தான்.

இது மாதிரியே இவனோட கல்யாண வாழ்க்கையும் நல்லபடியா அமைஞ்சுட்டா நா நிம்மதியா கண்ணை மூடுவேன்..ம்ம் கடவுள் என்ன நினைச்சுருக்காரோ..”என்றவருக்கு பெரூமூச்சுதான் விட முடிந்தது.

இங்கு நாட்டிய பள்ளியில் அடுத்த மாதம் வரவிருக்கும் அரங்கேற்றத்தில் வரவேற்பு நடனம் வெண்பா வோடது என முடிவாகியிருந்தது.அதற்கான பயிற்சியை அவள் மேற் கொண்டிருக்க மாணவியரோடு சேர்ந்து அங்கிருந்த மற்ற ஆசிரியர்களும் கண் இமைக்காமல் அவளின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் ஆடி முடித்ததும் அத்தனை பேரும் எழுந்து கைதட்ட அழகிய புன்னகையோடு அதையேற்று கொண்டு வெளியே சென்றாள்.

அவளை பின்தொடர்ந்து வந்த அந்த புதியவன் வாசலை தாண்டியதும்,

“ஹாய் மிஸ் வெண்பா..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.