(Reading time: 12 - 24 minutes)

போதையில் அடித்து போட்டார் போல் உறங்கிய சுடரொளி, கண் விழித்து பார்க்கும் போது, கையில் சூடான லெமன் டீ யுடன் வீட்டு உரிமையாளர் நின்றிருந்தார்.

தனக்கு தெரியாத ஒருவர் தன் எதிரே நிற்கவும், அதிர்ச்சியில் வேகமாக எழுந்து அமர்ந்தாள் அவள்,

“என்னம்மா.. இப்போ உடம்பு எப்படி இருக்கு? தூங்கி எழுந்ததுல கொஞ்சமாவது பரவாயில்லையா இருக்கா..” என்று அவர் கேட்கவும், ஒன்றும் புரியாமல் விழித்தாள் அவள்,

“என்னம்மா போதை இன்னும் தெளியலையா.. இந்த லெமன் டீயை குடி கொஞ்சம் நல்லா இருக்கும்..” என்ற அவர் வார்த்தையில் அதிர்ந்தவள்,

“யார் நீங்க?” என்றுக் கேட்டாள்.

“நான் அறிவு தங்கியிருக்கும் வீட்டின் ஹவுஸ் ஓனர், நீ இப்போ அவன் ரூம்ல தான் இருக்க..” என்றதும் சுற்றும் முற்றும் பார்த்தாள்.

“உனக்கு உடம்பு சரியில்லைன்னு ரெண்டுப்பேரும் இங்க படுக்க வச்சிட்டு போயிருக்காங்க.. ஆனா நீ குடிச்சிருக்கன்னு கூடவா என்னால தெரிஞ்சிக்க முடியாது..

நீ லண்டன்ல இருந்து வந்திருக்கன்னு சொன்னாங்க.. அங்க இதெல்லாம் சகஜமா இருக்கறதாலயும், அறிவு மகி பத்தி தெரிஞ்சதாலயும் நான் அவங்கக்கிட்ட எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சது போல காமிச்சிக்கல..

ஆனா இது ரொம்ப தப்பும்மா.. ஆம்பிளைங்களையே குடிக்கக் கூடாதுன்னு இங்க நிறைய பேர் போராட்டம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.. ஒரு பொண்ணா இருந்துக்கிட்டு நீ இப்படி செய்யலாமா?

உங்க ஊர்ல இதெல்லாம் சகஜமாக இருக்கலாம்.. ஆனா இந்த ஊர்ல இப்படியெல்லாம் பொம்பளை பசங்க நடந்துக்கிட்டா அவங்களை வேற மாதிரி பார்ப்பாங்க..

பொண்ணுங்க தூக்கத்துல கூட எப்போதும் விழிப்பா இருக்கணும், ஆனா நீ நிதானம் இழந்து ரெண்டு ஆம்பிளை பசங்கக் கூட வந்து எந்த இடம்னு கூட தெரியாம இங்க வந்து படுத்திருக்க,

ஏதோ மகி, அறிவா இருக்கவே போச்சு, இதே இடத்துல வேற ஆம்பிளை பசங்க இருந்தா உன்னோட நிலையை யோசிச்சு பார்த்தீயா? என்னத்தான் உறவுக்காரங்களா இருந்தாலும் இப்படி ஆம்பிளை பசங்கள கண்மூடித்தனமா நம்பக் கூடாதும்மா..” என்று அறிவுரைகள் கூறினார்.

அவர் சொல்வதையெல்லாம் முழுதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றாலும், அவர் நல்லதுக்கு தான் சொல்கிறார் என்பதால் அனைத்துக்கும் தலையாட்டினாள்.

அதன்பின் அறிவும் மகியும் வந்த பிறகு வேறு அவர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கினார்.

அவர் அறிவுரைகள் பிடிக்கவில்லையென்றாலும், அவரது நல்ல குணங்கள் சுடருக்கு பிடித்ததால், அதன்பின்பு கூட அவரை மகியோடு சென்று அடிக்கடி பார்ப்பாள்.

ருள்மொழியும் இலக்கியாவும் இண்டர்ன்ஷிப் ட்ரெயினிங்கிற்காக வந்து பத்து தினங்கள் ஆகிவிட்டது. அமுதனோடு பணி புரிவது உண்மையிலேயே ஒரு நல்ல அனுபவமாக இருவருக்கும் இருந்தது.

பேருக்கென்று எதையோ செய்ய சொல்லாமல், அவனது ப்ராஜக்டில் அவர்களையும் இணைத்து, படிப்பை தாண்டி கணிணி சம்பந்தமான நிறைய விஷயங்களை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்திருந்தான்.

இந்த பத்து நாட்களில் அவனைப் பற்றிய தனிப்பட்ட விஷயங்களையும் அவர்கள் தெரிந்துக் கொண்டனர். இருந்தாலும் அவன் தான் சுடரொளியின் நண்பன் என்றோ, கதிரவனின் தோழியின் மகன் என்ற விவரங்கள் அவர்கள் இருவருக்குமே தெரியாது.

சுடரும் வேலைக்கு செல்வதால், இவர்களும் பயிற்சிக்காக அலுவலகத்திற்கு வருவதால், முன்போல் சுடர் அடிக்கடி புகழேந்தி வீட்டுக்கு செல்வதும் இல்லை. அப்படியே சென்றாலும் அருள், இலக்கியா மாலை முடிந்து இரவு தொடங்கும் போது தான் வீட்டுக்கு வருவார்கள் என்பதால் பார்க்கவும் முடியாது.

அப்படியே ஞாயிற்றுக் கிழமைகளில் பார்த்துக் கொண்டாலும் அங்கே அமுதனின் பேச்சை யாரும் எடுக்கவும் மாட்டார்கள். அதனால் இருவருக்குமே அமுதன் அவர்கள் குடும்பத்திற்கு ஒரு வகையில் தெரிந்தவன் என்பதை அறிந்திருக்கவில்லை.

அந்த அலுவலகத்தில் அவன் பெரிய அளவில் இருந்தாலும் அனைவருடனும் நட்பு ரீதியாக பழகியே வேலை வாங்கிக் கொள்வான். அனைவருமே மற்றவர்களிடம் பேசும் போது அவனை சார் என்று விளித்தாலும், அவனிடம் பேசும் போது பெயரிட்டு தான் அழைப்பர்.

அதேபோல் இவர்கள் இருவரையும் பெயர் சொல்லி அழைக்க சொல்லி சொன்னாலும், முதலில் இருவரும் தயங்கினர். “நானோ இல்லை மற்ற யாருமே உங்களை தப்பா நினைக்க மாட்டோம்.. சும்மா பேர் சொல்லி கூப்பிடுங்க”என்றதும்,

இலக்கியா சாதாரணமாக அனைவரையும் போல் சார்லஸ் என்று அழைக்க,

அருள்மொழியோ அவனை அமுதன் என்றழைத்தாள். அதில் அவன் வியப்பாக பார்க்கவும்,

“சார்லஸோட அமுதவாணன் பேர் தான் பிடிச்சிருக்கு.. அதான் அதை சுருக்கி அமுதன்னு கூப்பிட்டேன்.. தப்பா?” என்றுக் கேட்டாள்.

“இல்லை அம்மா, அப்பா மட்டும் தான் என்னை அமுதான்னு கூப்பிடுவாங்க.. மத்தவங்களுக்கு நான் சார்லஸ் தான், அதான் அமுதன்னு கூப்பிட்டது, ஆச்சர்யமாகிடுச்சு..” என்றான்.

அன்று அமுதனுக்கு அலுவலகத்திற்கு வர தாமதமாகியது. முன்பே அதை இருவரிடமும் சொல்லியிருந்தவன், அவர்களுக்கு என்று சில வேலைகளை ஒப்படைத்திருந்தான்.

அதில் அருள் ஏதோ தவறு செய்துவிடவும் அந்த ப்ரோகிராம்க்கான ரிசல்ட் கிடைக்கவேயில்லை. அமுதனும் இல்லாததால் பதட்டமாகி, இலக்கியாவையும் துணைக்கு அழைத்து அதை சரி செய்ய முயற்சித்தாள். ஆனால் இருவரும் முயன்றும் எந்த ஒரு பலனும் இல்லை.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு பணியாளர், அவர்களின் பதட்டத்தை பார்த்து, என்ன விஷயம் என்றுக் கேட்டு அறிந்துக் கொண்டவர்,

“ஏன்ம்மா இது எவ்வளவு பெரிய ப்ராஜக்ட் தெரியுமா? இதுல ஏதாவது பிரச்சனைன்னா கம்பெனிக்கு தான் நஷ்டம், உங்களை சொல்லி என்ன ப்ரயோஜனம், ட்ரெயினிங்க்கு வந்த உங்களை வேலைக்கு வச்ச சார்லஸ் சாரை சொல்லணும்..” என்று அவர்களை திட்டியப்படி இருக்கும் போதே, அங்கு வந்த சார்லஸ் என்ன விவரம் என்றுக் கேட்டு அறிந்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.