(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 04 - மது

Senthamizh thenmozhiyaal

நினைவுகள்.

மற்ற ஜீவராசிகளுக்கு நினைவுகள் என்ற ஒரு வரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் மனிதனுக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.

காலத்தையே புரட்டிப் போடும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தனர் இருவர்.

இன்று கடற்கரையோரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் இந்த பங்களா இருந்த இதே இடத்தில் இருப்பதி இரண்டு வருடங்களுக்கு முன் சிறு தோட்டம், கிணறு கொண்ட இரு ஓட்டு வீடுகள் தாம் இருந்தன.

“அம்மா யாரோ வந்திருக்காங்க” மூத்த மகன் இளங்கோ கூற எட்டிப் பார்த்த கயல்விழி கேட்டின் அருகே ஒரு பெண்மணியும்  ஒன்பது பத்து வயது மதிக்கத்தக்க சிறுமியும் நிற்பதைக் கண்டார்.

“உள்ள வாங்க” இன்முகத்துடன் கயல்விழி வரவேற்க திண்ணையில் அவர்களை அமரச் செய்து பருக நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

“வீடு வாடைகைக்கு இருக்குன்னு கேள்விப்பட்டேன். அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்” தன்னை வள்ளி என்று அறிமுகம் செய்து கொண்ட அப்பெண்மணி அருகில் இருந்த மருத்துவமனையில் செவிலியாராகப் பணியாற்றுவதாகக் கூறினார்.

“நாங்களும் இங்க வாடகைக்குத் தான் இருக்கோம். வீட்டுச் சொந்தகார ஐயாவும் அம்மாவும் தான் பக்கத்துல இருந்தாங்க. அவங்க பையன் சிங்கபூர்ல வேலை கிடைச்சு அங்கேயே குடி போனதால இவங்களும் பையன் கூட போய்டாங்க. யாராச்சும் நல்ல குடும்பமா வாடகைக்கு விடச் சொல்லி எங்க கிட்ட தான் பொறுப்பை ஒப்படைசிட்டு போயிருக்காங்க” கயல்விழி வள்ளியிடம் விவரங்களை சொல்லிக் கொண்டே வீட்டைச் சுற்றிக் காண்பித்தார்.

மேலும் முன்பணம் வாடகை போன்ற விவரங்களையும் கூறினார்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“யாரும்மா” கேட்டுக் கொண்டே இளமாறனுடன் அங்கே வந்த தந்தையிடம் வள்ளியை அறிமுகம் செய்து வைத்தார் கயல்விழி.

“நீ வானதி தானே. எங்க கிளாஸ்ல புதுசா சேர்த்திருக்க தானே” வானதியை அடையாளம் கண்டு கொண்டு அவளோடு பேசிக் கொண்டிருந்தான் இளமாறன்.

“நீங்க இரண்டு பேரும் ஒரே கிளாசா” என்று கேட்ட கயல்விழி அனைவருக்கும் சாப்பிட பலகாரம் கொண்டு வந்து கொடுத்தார்.

வானதியும் இளமாறனும் வகுப்பு, பாடங்கள் என்று பேசிக் கொண்டிருக்க வள்ளியிடம் பேச்சுக் கொடுத்தார் கயல்விழியின் தந்தை.

“அப்பா இல்லாத பொண்ணு. எனக்கும் நைட் டியூட்டி எல்லாம் போக வேண்டியிருக்கும். என் மாமியார் இருந்த வரை அவளை பார்த்துக் கொண்டாங்க. அவங்க போன பிறகு நாங்க இப்போ குடியிருக்கும் பகுதியில் வளர்ந்துட்டு இருக்கும் பெண்பிள்ளையை தனியா விட முடியாத நிலைமை” மேலோட்டமாக விவரங்களை சொல்ல பெரியவர் புரிந்து கொண்டார்.

“இவங்க அப்பா சினிமாவில வேலையில் இருக்காங்க. எப்போ வீட்டுக்கு வருவாங்க போவாங்கன்னே சொல்ல முடியாது. நானும் அப்பாவும் ரெண்டு பசங்களும் தான். வானதியை பத்திரமா பார்த்துக்க நாங்க இருக்கோம்” கயல்விழி சொல்ல ஒரு நல்ல நாள் பார்த்து வள்ளியும் வானதியும் அங்கே குடிவந்தனர்.

ரே வயதான இளமாறனுடன் நட்போடு பழகிய வானதிக்கு தன்னை விட இரண்டு வயது மூத்தவனான இளங்கோவைக் கண்டால் சற்றே பயம் தான்.

“ஏன் அத்தை இளங்கோ மட்டும் முசுடா இருக்கு. மாமாவும் அப்படி தான் இருப்பாங்களோ” இளமாறன்  தன்னை விட இரண்டு வயது மூத்த இளங்கோவை அண்ணா என்று அழைக்காமல் பெயர் சொல்லியே அழைத்ததால் வானதியும் அவ்வாறே அழைத்தாள்.

முத்துக்குமரனை நேரில் கண்டதும் வானதிக்கு மிகவும் பிடித்துப் போனது. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவளை அவரும் அரவணைத்துக் கொண்டார்.

“மாறா, நீ ஷூட்டிங் எல்லாம் போயிருக்கியா” வானதி ஆசையாக கேட்க இளங்கோவின் கர்ஜனை தான் பதிலாக வந்தது.

“அங்கே எல்லாம் போகக் கூடாது. என்ன எப்போ பாரு சினிமா பத்தியே பேசிட்டு இருக்க. ஒழுங்கா படி” அவளை அதட்டியதும் அடங்கிப் போனாள்.

முத்துக்குமரன் நீண்ட கலாமாக சொந்தமாக ஒரு படத்தை இயக்க வாய்ப்பை எதிர்பார்த்து இருந்தார். எனினும் அவருக்கு யாரும் வாய்ப்பு கொடுக்க முன்வரவில்லை.

“முத்து, பேசாம நீயே படத்தை தயாரிச்சா என்ன” தனது மாமனார் கூறவும் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது என்று மலைத்தார்.

கயல்விழியின் தந்தையும் முத்துக்குமரனின் தந்தையும் நண்பர்கள். தந்தை, தாய் இருவரையும் இழந்த முத்துக்குமரனைப் படிக்க வைத்து அவரது திரைத்துறை கனவுகளுக்கு ஆதரவு தெரிவித்தவர் தனது மகளையும் மணமுடித்து வைத்தார்.

போராட்டமான திரைத்துறையில் நிலையான வருமானம் என்று ஒன்று இல்லாத நிலையில் குடும்பத்தின் தேவைகளை ஊரில் உள்ள நிலங்களின் குத்தகை வருமானத்தில் நிறைவேற்றினார்.

தன் கனவுகளுக்கும் இலட்சியங்களுக்கும் உறுதுணையாக இருக்கும் மாமனார் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் முத்துக்குமரன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.