(Reading time: 15 - 30 minutes)

முத்துக்குமரன் கண்களில் அருவி வழிந்தது. பட்டு இதழ்களை குவித்து பொடிக்கண்களை சிமிட்டி தந்தையைப் பார்த்து சிரிக்கும் அவரது இளவரசி இந்த உலகத்தில் பிரவேசித்த நொடியிலேயே அவருக்கு மன்னராக முடிசூட்டி விட்டிருந்தாள்.

“குழந்தையின் காதுல மூணு முறை பேரைச் சொல்லுங்கோ” பெயர் சூட்டும் விழாவில் தன் அன்னையின் பெயரை மகளுக்கு வைத்தவர் அம்மாவின் பெயரைச் சொல்ல தயங்க இளங்கோ இளமாறன் வானதி மூவரும் நாங்கள் சொல்வோம் என்று குழந்தையின் காதில் பெயரைக் கூறினர்.

“வேற செல்ல பேர் ஏதாச்சும் வச்சுக்கலாம்” கயல்விழி கூற “பாப்பாக்கு என்ன செல்ல பேர் வேணும்” என்று வானதி குழந்தையிடம் கேட்க பாப்பா என்று சொல்லும் போதெல்லாம் குழந்தை சிரிக்கவே அப்படியே அழைப்பதாக அனைவரும் முடிவு செய்தனர்.

“பாப்பா அண்ணா எக்ஸாம் போறேன். ஆல் தி பெஸ்ட் சொல்லு” இளங்கோ தேன்மொழியின் கைகளில் பேனாவை கொடுத்து வாங்கிக் கொண்டே தேர்வு எழுத செல்வான்.

“பாப்பா சின்னண்ணா கீ போர்ட் வாசிக்க போறேன்” என்று முதன்முதலில் வாங்கிய கீ போர்டில் தேன்மொழியின் பிஞ்சு விரலைப் பதித்த பின்பே இளமாறன் வாசிக்கப் பழகினான்.

“பாப்பா அக்காவுக்கும்” இளங்கோ இளமாறன் இருவரையும் பின்பற்றி வானதியும் தேன்மொழியைக் கொண்டாடினாள்.

ரு நாள் வானதி ஹோம் சயின்ஸ் வகுப்பில் எம்ப்ராய்டரி போடச் சொன்னார்கள் என்று கயல்விழியிடம் எடுத்து வந்தாள்.

“அத்தை இந்த ரோஸ் நாட் எப்படி போடுறதுன்னு உங்களுக்குத் தெரியுமா” வானதி கேட்கவும் மளமளவென போட்டுக் கொடுத்தார் கயல்விழி.

“அம்மா பாப்பாக்கு” என்று தனக்கும் அதே போல எம்ப்ராய்டரி செய்ய சொன்னாள் மூன்று வயது தேன்மொழி.

சிறு வயதில் கற்று பின் மறந்தே போயிருந்த தையல் கலையில் ஆர்வம் ஏற்பட்டது கயல்விழிக்கு.

“பாப்பா ட்ரஸ்ல என்ன போடலாம். ஸ்டார் போடலாமா, பட்டர்ப்பளை போடலாமா, ரோஸ் போடலாமா” என்று கேட்டபடியே ஊசியில் நூலைக் கோர்த்தார் கயல்விழி.

“அம்மா போடலாம்” சொல்லிவிட்டு வாய் பொத்தி சிரித்தாள் குழந்தை.

“ஐயே பாப்பா அம்மாவை எப்படி போடுறது” வானதி கேட்க தனது தாத்தாவைப் பார்த்து பின் அம்மாவைப் பார்த்து மீண்டும் சிரித்தாள் தேன்மொழி.

பின் ஓடிச் சென்று ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதில் இருந்த தங்க மீனை காண்பித்து “அம்மா” என்றாள்.

அதைப் பார்த்து தாத்தா பெரிதாக நகைக்க கயல்விழி முறைத்தார்.

“நான் தான் மீனை காட்டி இது கயல்ன்னு சொன்னேன். கயல்ன்னா அம்மான்னு பாப்பா சொன்னா. அப்போ இதுவும் அம்மான்னு சொன்னேன்” பரிகாசம் செய்த தந்தையை செல்லமாய் கடிந்தார் கயல்விழி.

அன்றிலிருந்து தனது உடைகள் அனைத்திலும் தங்க மீன் எம்ப்ராய்டரி போடச் சொல்லு அடம்பிடித்தாள் தேன்மொழி. கூடவே அப்பாவும் வேண்டும் என்று ஒரு வெண்முத்தை வேறு போடச் சொன்னாள்.

“மத்த ட்ரஸ்னா பரவாயில்ல. ஸ்கூல் யூனிபார்ம்ல போடுன்னு ஒரே பிடிவாதம். இதுக்கு உங்க பசங்க, மாமனார் வேற சப்போர்ட். உள்பக்கமா வச்சு வெளில தெரியாம நான் தைச்சு முடிக்க பெரிய பாடா போச்சு” கணவரிடம் முறையிட்டார் கயல்விழி.

“அம்மாவும் அப்பாவும் எப்போவும் கூடவே இருக்கணும்னு ஆசைபடுறா, நீ போட்டுக் குடுக்க வேண்டியது தானே”

“எப்போ பாரு அவளுக்கு எல்லோரும் செல்லம் குடுத்துட்டே இருங்க. இன்னிக்கு மழையா இருக்கு கடலுக்குப் போக வேண்டாம்ன்னு சொன்னா கேட்கவே இல்லை. அப்பாவுக்கும் ஜூரமா இருக்க இளங்கோவும் வானதியும் தான் பீச்சுக்கு கூட்டிட்டு போனாங்க” மனைவி சொல்லவும் முத்துக்குமார் அவரை சமாதானம் செய்தார்.

“மாமா தான் அவளுக்கு கதை எல்லாம் சொல்லி கடல் மேல ஆசையை வளர்த்து விட்டு வச்சிருக்கார். ட்ரஸ் வேண்டாம், சாக்லேட் வேண்டாம், பொம்மை வேண்டாம். கப்பல்ல எப்போ கூட்டிட்டு போவீங்க அப்பான்னு தான் வந்து கேட்கறா. பொம்மை கப்பல் கூட வேண்டாமாம். அடுத்த மாசம் ஷூட்டுக்கு கோவா போறோம். எல்லோரும் போகலாம்” மகள் ஆசைப்பட்டதை நிறைவேற்றாமல் போய்விடுவாரா என்ன.

“உலகத்தையே காப்பதுற அளவு பெரிய மீனா விஷ்ணு வந்தாரே. அது போல கடலுக்குள்ள இருக்கா தாத்தா” கடல் அலைகளில் கால் நனைத்த படியே கேள்விகள் கேட்டபடியே இருப்பாள் தேன்மொழி.

“இந்த உலகத்தில் பாதிக்கும் மேல கடல் தான். அது தான் நம்ம எல்லோரையும் வாழ வைக்குது. உலகத்தில் ஜீவராசிகள் உருவானதே கடலில் தான்”

“அங்க மீன் ஆமை தவிர வேற என்ன எல்லாம் இருக்கு தாத்தா”

“மீனிலே பல வகை இருக்கு. கடல் ஆமை, கடல் குதிரை. ஆக்டபஸ் இன்னும் நிறைய” என்று அனிமல் பிளானட், டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபி சேனல்களைப் போட்டுக் காண்பித்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.