(Reading time: 12 - 23 minutes)

என்னதான் குடும்பத்தில் அனைவரும் சிரித்து பேசினாலும் அவர்கள் மனதின் ஒரு சோக இழை ஓடுவதை ஆகாஷால் புரிந்துக் கொள்ள முடிந்தது. தன் உடலில் ஒரு அங்கம் அல்லாததுப் போலதான் பெற்றோர் நிலைபாடு என தெரிந்தது.

தான் வந்த காரியம் சரியாக நடக்க வேண்டும். பின்பு சாருவோடு திருமணம் நடக்க வேண்டும். சிந்தித்தவன் இமைகள் மெல்ல மெல்ல மூடின. பின்பு நிம்மதியாக உறங்கினான். ஆறு மணிக்கு அலாரம் அடித்தது. எழவில்லை பத்து நிமிடம் பத்து நொடிகளுக்குள் வந்துவிட்டார் போல அடித்தது. கண்ணை திறந்தவன் இன்னொரு ஐந்து நிமிடம் என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டு உறங்கிவிட்டான். “அட போடா” என செல்போனும் உறங்கிவிட்டது.

கண்விழித்து பார்த்த போது ஒருசில நொடிகள் எங்கு இருக்கிறோம்  என்றே புரியவில்லை. மெல்ல மனம் அனைத்தையும் ரீவைண்ட் செய்து காட்டியது. கடிகாரத்தை பார்க்க அது பதினொன்று  என காட்டியது. “உன்னோட டு பி பாதர் இன் லா உன்ன பத்தி என்னடா நினைப்பாரு” என தன்னை கேட்டு கொண்டாலும். திரும்ப பத்து நிமிடம் கொசுறு தூக்கம்  தூங்கினான்.

இதற்கு மேலும் உறங்கினால் நன்றாக இருக்காது என எழுந்தான். குளித்துவிட்டு வெளியே வர “நல்லா தூங்கினங்களா புது இடம் வேற” என சாரு அப்பா கேட்டார். அவரே காபியும் கொண்டு வந்துக் கொடுத்தார் “சாருவோட அம்மாக்கு லீவ் இல்ல ஆபீஸ் போயிட்டாங்க . . அதான் . . என் காபி நல்லாவே இருக்கும் பயப்படாதீங்க” என சிரித்தார்.

கண்கள் சாருவை தேட அவள் கொட்டாவிபடி வெளி வந்தாள். “அப்பா காபி” என குரல் கொடுத்தாள். ஆகாஷ் அருகில் அமர்ந்து அவன் தோளில்  சாய்ந்து தூக்கத்தை தொடர்ந்தாள். “காலைல எனக்கு தினமும் நீங்கதான் காபி போட்டு தரணும்”

“அடிப்பாவி . . எனக்கு . .” ஆரம்பித்தவன் அவள் அப்பா வருவதை கண்டதும் தன் தோளால் அவளை தள்ளினான். அவளோ நிதானமாக சரியாக அமர்ந்தாள்.

“கண்ணுகுட்டி இந்தாடா காபி . .டைம் ஆச்சு பிரேக்பாஸ்ட் வேண்டா . . சமையல் முடிஞ்சிடும் . . சாப்டிடு” என இரண்டு வயது குழந்தைக்கு சொல்வதைப் போல சாருவிடம் கூறினார்.

“என்ன தம்பி அப்படி பாக்குறிங்க இவ கொஞ்சம் செல்லம்” என்றார்”

“இது கொஞ்சமா?” என மனதில் நினைத்தாலும் புன்னகைத்தான்.

“எங்க வீட்ல எல்லாமே நான்தான் . . நான் செஞ்சா என்ன? என் வைப் செஞ்சா என்ன? . . இது நம்ம வீடு தானே?” என்றார்

மேலும் “ஆணும் பெண்ணும் சமம் வாய் கிழிய சொல்றாங்க ஆனா பெரும்பாலும் பாருங்க வாஷிங் பவுடர் குக்கர் விளம்பரத்துல பெண்கள் அதே பைக்  விளம்பரத்துக்கு ஆண்”

“ஏன் பைக்க பொண்ணு ஓட்டக் கூடாதா? இல்ல ஆண் வீட்டுவேலை செய்ய கூடாதா? என்னமோ பேச்சோட எல்லாம் சரி” என அலுத்துக் கொண்டு குக்கர் சப்தம் வந்ததும் கிட்சனுக்குள் சென்றார்.

மதியம் அவரே பரிமாற சாரு மற்றும் ஆகாஷ் உணவு உண்டனர். அவரின் நேர்த்தியான வேலையை கண்டு ஆகாஷ் வியந்து போனான். சிந்தாமல் சிதறாமல் பரிமாறுவது . .வேலையை துரிதாமகவும் ஒழுங்காகவும் செய்வது என கலக்கினார். தான் செய்வதை ஒப்பிட்டு பார்த்தான். கீழே சிந்தாமல் ஒருநாளும் அவன் செய்த்தாய் வரலாறு இல்லை. மனதில் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என தீர்மானித்தான். சாரு ஆகாஷ் இருவரும் அவர் எத்தனை மறுத்தும் உதவினார்கள்.

சாருவின் அம்மா நான்கு மணியளவில் வீட்டிற்கு வந்தார் “ஸாரி எனக்கு லீவ் கிடைக்கறது கஷ்டம் . .” என மன்னிக்கும் பாவணையில் அவர் கேட்டுக் கொண்டதற்கு “பரவால்ல ஆண்டி இதுல என்ன இருக்கு” என்றான் ஆறுதலாக.

மாலையில் அவர்களிடம் விடைப்பெற்று வீட்டிற்கு கிளம்பினான்.  சுவாதியை பற்றி எதுவும் பேசவில்லை. தன் செல்ல மகளோடு கொஞ்சட்டும் பின்பு இரண்டொரு நாள் கழித்து ஆரம்பிக்கலாம் என விட்டுவிட்டான்.

கால் டேக்சியில் பயணித்தவனுக்கு சென்னை மிகவும் மாறிவிட்டதாய் தோன்றியது. பெரிய பெரிய அபார்ட்மெண்ட் அதிக அளவில் தென்பட்டது. சாலைகள் அகலமாயிருந்தது. குப்பைகள் குறைந்திருந்தது. ஆங்காங்கே பியூட்டி பார்லர் சென்று வந்தது போல ஒரே மாதிரியான பேஷன் மரங்கள் அமர்ந்திருந்தன.   

கடைகள் பெருகி இருந்தது. மாற்றமே இல்லாது இருந்தது டிராபிக் ஒன்றுதான். சில வண்டிகள் திடீர் திடீரென்று எங்கிருந்தோ வந்து எப்படியோ திரும்பி நடுரோட்டில் சர்கஸ் செய்தது. வெயில் அதிகமாய் இருப்பதாய் உணர்ந்தான்.

வீட்டை அடைந்ததும் மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம் நிம்மதி. அப்பாடா என தன் ஜம்போ பெட்டிகளை வைத்துவிட்டு சோப்பாவில் அமர்ந்தான். சுகமாக இருந்தது.

“நாங்க அமெரிக்கா வந்து செட்டில் ஆக மாட்டோம். சாகற வரைக்கும் இங்கதான். உனக்கு எப்போ தோனுதோ அப்ப வா” என அம்மா பத்மாவதி கூறுவார். இந்த சுகத்தைவிட்டு நிச்சயம் அவர்களால் அங்கு வர முடியாதுதான்.

ஸ்டவ்வில் ரசத்தை வைத்துவிட்டு பக்கத்து கடையில் கருவேப்பிலை கொத்தமல்லி அவசரத்துக்கு வாங்கி வருவார். அது அங்கு முடியுமா? ஏதோ ஒன்று இருந்தாலும் ஒரு மனக்குறை இருக்கதான் செய்கிறது என அம்மா அடிக்கடி கூறுவது நினைவுக்கு வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.