(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 06 - மது

Senthamizh thenmozhiyaal

முத்திர முத்து “போவே அடால்” என்று பிரஞ்சு மொழியில் உச்சரிக்கப்படும் Poivre atoll கரையை நோக்கித் திரும்பிக்  கொண்டிருந்தாள்.

“அல்டாப்ரா அடாலுக்கு தானே போவதாக இருந்தது. இப்போது ஏன் போவே நோக்கி சென்று கொண்டிருக்கிறது” தனது திசைக் கருவியில் கண்டு பயணத்தின் மாறுதலைக் கணித்து தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்த ஆதி கேப்டன் செல்வாவைத் தேடிச் சென்றான்.

“கேப்டன், அட்டவணையில் மாற்றமா. போவே செல்வது போல தெரிகிறதே” என்று பிரஞ்சு மொழியில் வினவினான்.

“அட்டவணையில் எந்த மாற்றமும் இல்லை ஆதி. போவேயில் சிபியின் விருந்தினர்கள் சிலர் சேர்ந்து கொள்வதாக இருக்கிறார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு நாம் முன்பு திட்டமிட்டபடியே பயணிப்போம்” என்று விவரம் கூறினார்.

சிபியின் விருந்தினர்கள் எனவும் சரி தான் என்று தலையசைத்து விட்டு மேல் தளம் நோக்கிச் சென்றான்.

முதல் நாள் இரவு நெடுநேரம் கதை கேட்டுக் கொண்டிருந்ததால் சிபி சாலமன் மிகத் தாமதமாகத் தான் எழுந்து வந்தான்.

அவன் அங்கிருந்த உணவு விடுதிக்கு வந்த போது காலியாகவே இருந்தது.

தனக்குத் தேவையானவற்றை தட்டில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

அதே தளத்தில் இருந்த நீச்சல் குளத்தை சுற்றி போடப்பட்டிருந்த பெரிய குடைகளுடன் கூடிய சாய்வு நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு குளிர்பானங்களை அருந்திக் கொண்டிருந்தனர் விளம்பரப் படக் குழுவினர்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவர்களுடன் கெவினும் அமர்ந்து அளவலாவிக் கொண்டிருந்தான்.

“நிஜமாகவா. அவங்க கயலோட மகளா” விழி விரிய ஆங்கிலத்தில் ஆச்சரியமாய் சற்றே உரத்தக் குரலில் வெரோனிக்கா வினவ அந்தப் பக்கமாக சென்ற ஆதியின் செவிகளிலும் விழ ஒரு நொடி நிதானித்தான்.

கெவினை அடையாளம் கண்டு கொண்ட ஆதி உடனே சென்று தேன்மொழியிடம் கெவின் அங்கே இருப்பதைத் தெரிவித்தான். மேலும் அவளைப் பற்றிய விவரங்களை அவன் அனைவரிடமும் பகிர்ந்து கொண்டிருப்பதையும் உரைத்தான்.

கெவின் என்ற பெயரைக் கேட்டதும் அவள் இதழ்களில் மெலிதான ஒரு புன்னகை ததும்பத் தான் செய்தது.

அவனோடான முதல் சந்திப்பு அந்த நேர்காணல் அனைத்தும் அவள் மனக்கணில் வந்து போனது.

“செந்தமிழ்” அவள் அப்போது கூற அவன் அதை “ஷேன்டமில்” என்று உச்சரிக்க இவள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு எழுத்தாக அவனை சரியாக சொல்ல வைத்தது, அவனிடம் “ழ”கரத்தின் சிறப்பையும் தமிழின் பெருமையையும் சொன்னது, அவன் அடுத்த முறை சந்தித்த போது அழகிய தமிழில் உரையாடியது, அவனைக் கவின் என்று அவள் அழைத்தது எல்லாமே நேற்று நடந்தது போல அவள் அகக்கண்ணில் காட்சிகளாக விரிந்தது.

அந்த முதல் நேர்காணல் இந்த உலகத்திற்கே எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது என்ற எண்ணம் விரிய அவள் நெஞ்சம் நன்றியால் நிறைந்தது.

சென்ற வருடமும் அவளும் ஆதியும் அந்த நிகழ்விற்கு முன் அவனை சந்தித்ததும் நினைவிற்கு வர அவள் தேகம் மொத்தமும் நடுக்கம் கொண்டது.

ஆதியை  சைகை மூலம் ஆசுவாசப்படுத்தியவள் கவின் எங்கே என்றும் வினவினாள்.

அவன் இருந்த இடம் அறிந்து கொண்டு அவளே அங்கு சென்றாள்.

அச்சமயம் அங்கே கெவின் அனைவருக்கும் தேன்மொழியின் முதல் நேர்காணல் காணொளியை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அனைவருக்கும் காண்பித்துக் கொண்டிருந்தான்.

“என்னது இந்த காணொளியின் போது அவள் வயது பதினாறு தானா” என்று அனைவரும் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தேன்மொழி அங்கே வரவும் அவ்விடமே பரபரப்பானது.

காணொளியை தற்காலிக நிறுத்தம் செய்து விட்டு கெவின் எழுந்து நின்று மிகுந்த ஆனந்தத்துடன் தேன்மொழியின் கைகளைக் குலுக்கினான்.

“தேன், உன்னை மீண்டும் கடலின் மடியில் பார்ப்பத்தில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்போது உடல் நலம் எப்படி இருக்கிறது. லண்டனில் உன்னை சந்திக்க முயற்சித்தேன். ஆனால் அனுமதி கிட்டவில்லை” மகிழ்ச்சியாய் ஒலித்தக் குரல் சற்றே வருத்தத்தொனியில் தங்கிவிட இடம் புறமாக தலையை ஆட்டினாள்.

நேற்று முன் தினம் மாலையில் வெரோனிக்காவின் ஆடையில் இருந்த தங்க மீனைப் பார்த்து ஒரே ஒரு நிமிடம் மலர்ந்த அந்த முகத்தின் பிரகாசத்தை இப்போதும் கண்டான் சிபி.

அவள் மலர்ச்சியைக் கொண்டு உள்ளம் மகிழ்ந்தாலும் அது கெவினைப் பார்த்ததால் உண்டானது என்ற எண்ணம் சற்றே அவனுக்கு வருத்தத்தை அளித்தது தான்.

வெரோனிக்கா தேன்மொழியிடம் முன்பு நடந்து கொண்டதற்கு திரும்பவும் ஒரு முறை மன்னிப்புக் கேட்டு கயலின் மகள் என்ற முறையில் தேன்மொழியிடம் கயலின் பெருமைகளைக் கூறி மகிழ்ந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.