(Reading time: 10 - 20 minutes)

“கயலுடைய மகளின் பெருமைகளை இன்னும் நீ அறிந்து கொள்ளவில்லை வினி” கெவின் கூறவும் வேண்டாமே என்ற பாவனையில் தேன்மொழி தலையசைத்தாள்.

“தேன் என்னைத் தடுக்க வேண்டாம். ஆடை, ஆபரணம், அலங்காரம், பகட்டு, சிவப்புக் கம்பளம், கேமரா ஒளிவீச்சு இவற்றைத் தாண்டியும் ஓர் உலகம் இருக்கிறது என்று அவர்களும் உணரட்டும்” உணர்ச்சி வசப்பட்டான் கெவின்.

அதே நேரம் ஆதி அவள் செவிகளில் வந்து ஏதோ சொல்ல அப்புறம் சந்திப்பதாய் சைகையில் தெரிவித்தவள் தனது அறையை நோக்கி விரைந்தாள்.

அவள் அங்கிருந்து சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்த இரு நண்பர்களின் மனதிலும் வெவ்வேறு எண்ண அலைகள் என்ற போதும் தேன்மொழி என்னும் கரையையே அவை நாடின.

முதல் நாள் பார்ஸல் வந்து சேர்ந்தது என்று மின்னஞ்சல் மூலம் தெரிவித்து காலையில் நேரலைக் காணொளியில் வருவதாக தெரிவித்திருந்தாள்.

நேரலை காணொளியை உயிர்பிக்க அவளைக் கண்ட குடும்பத்தினர் அனைவரின் விழிகளும் கசிந்தன.

“பாப்பா நல்லா இருக்கியாடா” கயல்விழி கேட்க சைகையில் நன்றாக இருப்பதாக பதில் கூறினாள்.

முத்துக்குமரன், இளங்கோ இளமாறன் மூவரும் மாறி மாறி அவள் நலம் விசாரித்து ஏதேனும் வேண்டுமா, அனுப்பி வைக்கவா என்று கேட்டுக் கொண்டிருக்க வானதியும் அமுதாவும் தங்கள் அன்பைப் பொழிந்தனர்.

“தாத்தா எங்கே” என்று தேன்மொழி கேட்க அவர் புறமாய் மடிக்கணினியை திருப்பினான் இளங்கோ.

அங்கிருந்த குடும்பத்தினர் அனைவருக்கும் தாத்தாவும் பேத்தியும் நலம் விசாரித்துக் கொண்டது போலத் தான் தெரிந்தது.

ஆனால் இருவரும் வேறு ரகசியங்களைப் பேசிக் கொண்டதை ஒருவரும் அறியவில்லை.

“அப்புறம் அக்கா முந்தா நாள் சொல்லிட்டு இருந்தீங்க. லேட் ஆகிருச்சுன்னு கிளம்ப வேண்டியதாச்சு. நேத்து வரலாம்னு பார்த்தா ரிஹர்சல் ரொம்ப நேரம் எடுத்திருச்சு. இன்னிக்கு பாப்பா விடியோ கால் செய்றான்னு அவர் சொன்னதும் உடனே வந்துட்டேன். இன்னிக்கு முழு நேரமும் இங்க தான் இருக்கப் போறேன்” அமுதா தேன்மொழியை மனதார அரவணைத்துக் கொண்டதைக் கண்டு மிகவும் மகிழ்ந்தாள் வானதி.

சென்னையிலும் கோவாவிலும் சென்று ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்று அதில் சிறப்பாக தேர்ச்சிப் பெற்று சான்றிதழ்கள் எல்லாம் பெற்று வந்திருந்தாள் தேன்மொழி.

வானதி டிகிரியை முடித்துக் கொண்டு கயலோடு ஆடை வடிவமைப்பில் ஈடுபட இளங்கோ தயாரிப்பு நிர்வாகத்தைப் பார்த்துக் கொண்டான்.

“என்னது ஜப்பான் போகணுமா, எதுக்கு” கயல் தான் மகளை அதட்டிக் கொண்டிருந்தார்.

தேன்மொழி பள்ளிக்குச் செல்லாமல் டைவிங் பயிற்சி என்று திரிந்து கொண்டிருந்தது கயல்விழிக்கு அவ்வளவு உவப்பாக இல்லை.

“அவளை இப்படியே விட்டுவிட முடியாது. தனியா டியூஷன் வைத்து பாடம் சொல்லிக் கொடுக்கணும்” கணவனிடம் வற்புறுத்தவே அவரும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.

இப்போது ஒரு வருடம் ஜப்பான் செல்ல வேண்டும் என்று தேன்மொழி கூறவும் கயல்விழி சற்றே கோபம் கொண்டார் தான்.

“இங்க நம்ம ஊர்ல என்ன வேணும்னாலும் செய். ஒரு வருஷத்துக்கு எல்லாம் ஜப்பான்ல என்ன செய்ய போற”

“அங்க போய் அமா டைவர்கள் கிட்ட பயிற்சி எடுக்கப் போறேன்” தேன்மொழி கூறவும் கயல்விழிக்குப் புரியவில்லை.

“எதுவா இருந்தாலும் அப்பா வரட்டும் பேசிக்கலாம்” என்று அப்போதைக்கு அந்த உரையாடலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கயல்விழி.

“பாப்பா அது என்ன ஆமா” வானதி கேட்க அவளைக் கட்டிக் கொண்டு விளக்கம் சொன்னாள் சிறியவள்.

“அக்கா நம்ம தூத்துக்குடியில் முத்துக் குளிப்பாங்கல்ல”

“ஆமா”

“அது போல ஜப்பான்ல லேடீஸ் தான் முத்துக்குளிப்பாங்க. சில சமயம் கடலில் நாற்பது மீட்டர் ஆழம் வரை ரொம்ப அரிதான முத்துக்களை எடுக்க டைவ் செய்வாங்க. உலகத்திலேயே ரொம்ப சிறந்த டைவர் அவங்க தான்”

தேன்மொழி சொல்லவும் நாற்பது மீட்டர் ஆழத்தை மனக்கண்ணில் கொண்டு வந்தாள்.

“சரி பாப்பா, இப்போ தான் நீ வச்சிருக்க மாதிரி கடல்ல மூழ்குவதற்கு என்றே டைவிங் சூட் ஆக்சிஜன் மாஸ்க் எல்லாம் இருக்கே. முன்ன தான் மூச்சடக்கி முத்துக் குளிப்பாங்கன்னு சொல்வாங்க. இப்போ இதெல்லாம் போட்டு எவ்வளவு நேரம் வேணும்னாலும் கடலில் மூழி இருக்கலாம் தானே”

“அக்கா உனக்கு கட்டிங் ஸ்டிட்சிங் மட்டும் தான் தெரியும்னு நினச்சேன். நீ இதெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்க” வானதியைக் கட்டிக் கொண்டாள் தேன்மொழி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.