(Reading time: 8 - 15 minutes)

“மேரேஜ் முடிஞ்சு அஞ்சு வருஷம் கழிச்சு ஹனிமூன் போறவங்க நீங்களா தான் இருக்கும்” ரகசிய கேலியாய் இளமாறன் கூறவும் அவன் காதைப் பிடித்து திருகினாள் வானதி.

அழகிய செஷல்ஸ் தீவிலே குடும்பத்தினர் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வங்காள விரிகுடா கடலையும் அரேபிக் கடலையும் மட்டுமே பார்த்திருந்த வானதிக்கு மகா சமுத்திரம் பிரமிப்பை ஊட்டியது,

தான் ஒரு டைவர் மரைன் போட்டோகிராபர் என்பதை மறந்து அந்த குடும்பத்தின் கடைக்குட்டியாக அனைவருடனும் ஆனந்தமாக பொழுதைக் கழித்தாள்.

“பாப்பா கடல் ரொம்ப ரொம்ப ஆழமா இருக்குமா”  மோட்டார் படகொன்றில் பயணித்து மற்றொரு தீவிற்கு போகும் போது தேன்மொழியிடம் கேட்டாள் வானதி.

கயல்விழி வடிவமைத்த அழகிய ஆடையைக் கடல் காற்று கொஞ்ச கடல் தேவதையென அப்படகின் கம்பிகளைப் பற்றிக் கொண்டிருந்த தேன்மொழி வானதியின் பேச்சில் கவனம் கலைந்தாள்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அக்கா என்ன கேட்டீங்க” வானதியின் புறம் திரும்பியவளின் முகத்தைப் பார்த்த பெரியவளுக்கு அப்படி ஒரு ஆச்சரியம்.

பருவத்தின் எழிலில் தேகம் பூரித்திருக்க, பெண்மையின் மென்மை மெல்ல முகை விரிக்கும் பதினாறு வயதில் ஏற்படும் இனம்புரியாத ஈர்ப்புகளும் கனவுகளும், கூடவே  மனதில் ஒரு சஞ்சலமும் தடுமாற்றமும். வானதி அதை கடந்து வந்திருக்கிறாள்.

இளங்கோவின் பார்வையில் அக்கறையில் மனம் ரெக்கை கட்டி பறப்பதும், அவன் கோபத்தில் பாராமுகத்தில் வாடி வதங்கிப் போவதுமாய் இருந்த அந்நாளை நினைத்துப் பார்த்தாள்.

திருமணமாகி இந்த ஐந்து வருடங்களில் கணவனின் சாசுவதமான பரிபூரண அன்பில் நிறைந்திருக்கும் மனதில் குடிகொண்டிருக்கும் அமைதி முகத்தில் பொலிவாய் சுடர் விடுவதை நத்தம் காணும் வானதிக்கு அதே போல ஒரு பொலிவை தேன்மொழியின் முகத்தில் கண்டு தான் ஆச்சரியம் கொண்டாள்.

தான் கேட்க வந்த கேள்வியை மறந்து தேன்மொழியின் தாடையை மெல்ல பற்றி முகத்தை கூர்ந்து நோக்கினாள் வானதி.

“என்னாச்சு அக்கா”

“பாப்பா நீ எப்போவுமே என் கண்ணுக்கு குழந்தையாக தான் தெரிஞ்சுட்டு இருந்த. இப்போ உன்னைப் பார்க்க ரொம்ப வித்தியாசமா இருக்கு” வானதி சொல்ல அவளை கட்டிக் கொண்டாள் தேன்மொழி.

“அக்கா எனக்கே தெரியல. இந்தக் கடல் மேல் ஏதோ ஒரு அலாதி காதல் எனக்குள்ள பொங்கி வழிகிறது. இந்து மகாசமுத்திரத்தை நான் அறியாதவள் இல்லை. இந்தோனேசியாவில் ஸ்கூபா டைவிங் நிறைய செய்திருக்கேன். ஆனா இதோ இந்த செஷல்ஸ் கடல் மேல ரொம்பப் பிரியம் ஏற்படுது. உங்களோட இங்க வந்திருக்கிறேனே அதனாலே இருக்குமான்னு தெரியல” வானதியின் அணைப்பில் இருந்து முற்றிலும் விலகமால் மெல்ல கடலை நோக்கி தன் பார்வையை செலுத்தினாள்.

கண் பார்க்கும் தூரத்தில் சிறு தீவுகள் தென்பட அதற்கும் அப்பால் இன்னும் பல தீவுப்பகுதிகள் உள்ளன என அவள் உள்ளுணர்வு உணர்த்தியது.

அந்த உணர்வில் அவள் தேகம் சிலிர்க்க அந்த நடுக்கத்தை வானதியும் அறிந்தாள்.

“பாப்பா என்னடா, என்கிட்ட சொன்னா தானே தெரியும்” வானதி கேட்கவும் தனது மனதில் முகை விரித்த உணர்வுகளை எப்படி வார்த்தைகளால் உரைப்பது என்று தெரியாமல் மௌனித்தாள் தேன்மொழி.

“என் வாழ்வோடு மிக ஆழமாக பின்னிப் பிணைத்திருக்கப் போகிறது இந்தக் கடல். அது மட்டும் தானக்கா இப்போ எனக்குள்ள தோணுது”

“நீ உன்னோட போட்டோகிராபியை சுயமாக முதன்முதலில் இங்கே தானே ஆரம்பிக்க போற. அதனாலே இப்படித் தோன்றியிருக்கும்” அவளின் உணர்வுகளுக்கு விடையை கண்டுபிடித்துச் சொன்னாள் வானதி.

வருங்காலத்தில் வானதியின் கூற்று உண்மையாகத் தான் போகிறது. மாபெரும் மாற்றத்தை தேன்மொழியின் புகைப்படம் ஏற்படுத்தத் தான் போகிறது.

ஆனாலும் அதையும் தாண்டிய ஒரு பந்தம் அங்கே ஏற்படவிருக்கிறது. அந்த உள்ளுணர்வில் சமிக்கை அதை தான் உணர்த்தியது என்று அப்போது தேன்மொழியும் அறிந்திருக்கவில்லை தான்.

தோழமைகளே! சில பர்சனல் சூழ்நிலைகளால் சிறிய அத்தியாயம் தான் கொடுக்க முடிந்தது. வரும் அத்தியாயங்களில் அதை ஈடு செய்ய முயற்சிக்கிறேன்.  அவசரமாக எழுதி அனுப்பிய காரணத்தினால் பிழைகளை சரி பார்க்க முடியவில்லை. சென்ற அத்தியாயத்திற்கு கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள். தனிப்பட்ட முறையில் பதில் அளிக்க இயலாமைக்கு மன்னிக்கவும்

தொடரும்

Episode # 07

Episode # 09

Go to Senthamizh thenmozhiyaal story main page

{kunena_discuss:1218}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.