(Reading time: 13 - 25 minutes)

“அவர் அப்படிக் கேட்டு இருந்தா அதுக்கு வேறே காரணம் தான் இருக்கும். உன்னை மாதிரி நினைப்பு எல்லாம் என் அத்தானுக்கு இருக்காது. இனிமேலும் இதே மாதிரி பேசிட்டுத் திரிஞ்சா, ஏன் எங்கிட்ட பேசினாலே, நான் நேரடியா உங்க அம்மா கிட்டே பேசி, உங்க பையனை அடக்கறீங்களா? இல்லை என் பாட்டி கிட்டே சொல்லட்டுமான்னு கேட்ட்ருவேன். என் பாட்டிக்கு உங்க பக்கத்திலே என்ன மரியாதை இருக்குன்னு உனக்கேத் தெரியும். அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க, ஒட்டு மொத்த சொந்தமும் உங்களைத் தள்ளி வச்சிரும் பார்த்துக்கோ”

அவளின் இந்த பதிலில் சரவணன் வாயடைத்து நின்றான். அவள் சொல்வது போல் அவள் பாட்டி அவர்களின் சொந்தத்தில் செல்வாக்கானவர். சொந்தங்களின் நல்லது கெட்டதுகளிலும் அவர் பங்களிப்பு நிறைய இருக்கும். அதனால் அவர் பேச்சை யாரும் மீறுவது கிடையாது.

அவளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்று இருந்த போது, தூணின் மறைவிலிருந்து ஷ்யாம் வெளியில் வந்தான்.

“என்ன சரவணன்? உங்கள் பேச்சு எல்லைத் தாண்டி போய்க் கொண்டு இருக்கிறதே? மித்ரா தனியாக வருவதும், போவதும் அவளின் விருப்பம். அவளோடு யார் எப்போது வரவேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மித்ராவோ, நாங்களோ தான். அதில் உங்களுக்கு என்ன கவலை? ஏற்கனவே உங்களுக்கு ஒருமுறை வார்னிங் கொடுத்து இருக்கிறேன். இது இரண்டாவது முறை. இனியும் இது தொடர்ந்தால், என்னைப் பற்றி பிசினஸ் சர்க்கிளில் கேட்டுப் பாருங்கள். எதிரியை இல்லாமல் அடிப்பவன். “ என்று கடுமையான குரலில் கூறவும், அவனைப் பற்றித் தெரிந்த சரவணன் மனதிற்குள் பயந்தான். ஆனால் வெளியில் கெத்தாக

“உங்க சங்கார்த்தம் எனக்கு எதுக்கு?” என்று கூறியவன் சொல்லிக் கொள்ளாமல் திரும்பி சென்றான்.

அவன் போவதைப் பார்த்து விட்டு, இருவரும் திரும்பி அடுத்தவரைப் பார்த்தனர்.

மித்ரா அவள் காரில் ஏறப் போவதைப் பார்த்தவன், அவள் கையைப் பிடித்து திருப்பி, ஹாச்பிடலினுள் அழைத்துச் சென்றான். அவன் கையை உதறப் போனவள், அவனின் முறைப்பில் விட்டு விட்டாள்.

உள்ளே சென்று அவள் ரிபோர்ட்சை கேட்டு வாங்கி வெளியில் வந்தவன், அவளைத் தன்னுடைய காரில் ஏற்றினான்.

மித்ரா “நான் வந்த கார் அங்கே இருக்கே?” என்று கேள்வியாக கேட்கவும், அவன் திரும்பி அவளைப் பார்த்துவிட்டு நேராக அமர்ந்தான். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

பத்து நிமிடத்தில் கார் கண்ணாடி யாரோ தட்ட, நிமிர்ந்து பார்த்தவள், அவர்கள் அலுவலக டிரைவர் நிற்பதைக் கண்டாள்.

மித்ரா நிமிர்ந்ததும், ஷ்யாம் “சாவி” என்று கேட்க, அவள் கொடுத்ததும், டிரைவரிடம்

“நீங்க கார் எடுத்துட்டு கம்பெனிலே விட்டுட்டு , வீட்டுக்கு போயிடுங்க. காலையில் அங்கிருந்து வீட்டிற்கு எடுத்துட்டு வாங்க” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.

அவர் கிளம்பியதும் ஷ்யாமும் காரை கிளப்பினான். ஹாஸ்பிடல் விட்டு வெளியில் வந்து போக்குவரத்தில் கலந்ததும்,

“ரிபோர்ட்ஸ விட்டுட்டு வர அளவிற்கு என்ன அவசரம்?

“ஹ்ம்ம்.. வேண்டுதல்” என்று மித்ரா நக்கலாக பதில் அளிக்கவும், அவளைத் திரும்பி முறைத்தவன்,

“ஒழுங்கா பதில் சொல்லு” என்று கோபமாகக் கேட்டான். என்னதான் மித்ரா வெளியில் தைரியமாக நடமாடினாலும், உள்ளுக்குள் தொட்டார் சிணுங்கி தான். சட்டென்று துடுக்காகப் பேசி விட்டாலும், அவன் கோபமாகக் கேட்டதைப் பார்த்து, பயத்தோடு பதில் சொன்னாள்.

“நான் டாக்டர் கிட்டே பேசிட்டு வெளியில் ஏதோ யோசனையோடு வந்து விட்டேன். அப்போ இவனும் எங்கிட்ட வந்து ஏதோ கேட்க ஆரம்பிச்சான். அதற்கு பதில் சொல்லப் போய் ரிபோர்ட்ஸ் அங்கே இருக்கு என்பதை மறந்துட்டேன்.”

“அவன் அடிக்கடி உன்னை டார்ச்சர் பண்ணினான் என்றால், இத்தனை நாள் சொல்லாமல் இருப்பியா?

“ஆமாம். ரொம்பதான் அக்கறை” என்று மெல்லியதாக மித்ரா முணுமுணுக்க,

“சத்தமா பேசு” என்ற அதட்டலில்,

“அன்னிக்கு நீங்க ஆபீஸ்லே அவனை திட்டி அனுப்பியதற்கு பிறகு , இன்னைக்கு தான் வந்தான். “

“ஹ்ம்ம்” என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் வண்டி ஓட்டுவதில் கவனம் திரும்பினான்.

மித்ரா “ஹ.. இவர் பெரிய இவரு.. இவருக்குத் தேவையானதை மட்டும் கேட்டுட்டு உடனே விட்டுடுவாரு. பக்கத்தில் உக்கார்ந்து இருக்கிறவளைப் பற்றி என்ன அக்கறை? “ என்று மனதிற்குள் பொரும,

அவளின் மனசாட்சியோ “இப்போ உன் அத்தான் பேசினால் மட்டும், நீ அப்படியே ஆஹா .. என்னே என் பாக்கியம் அப்படின்னு அவர் கிட்டே பேசிடப் போறியா? நீதான் கோபமா இருக்கியே” என்று கூறியது

“ஆமாம்ல.. நான் கோபமா இருக்கேன்” என்று எண்ணியவள், மூஞ்சை உர்ரென்று வைத்துக் கொண்டாள்.

ஓரக்கண்ணால் அவளைக் கவனித்த ஷ்யாமிற்கு மெல்ல புன்னகை தோன்றியது. சிறு வயதில் கோபம் வந்தால் ஊஞ்சலில் ஏறி உட்காரும்போது இருக்கும் அவளின் முக பாவம் அப்படியே இப்போதும் இருந்தது. மனதிற்குள் “ஒ.. மேடம் கோபமா இருக்காங்களாமா?” என்று எண்ணிச் சிரித்துக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.