(Reading time: 15 - 30 minutes)

தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 12 - சித்ரா. வெ

Maiyalil manam saaintha velai 

புவனா யாதவியின் அறையில் அவள் அருகில் அமர்ந்து அவளது சூடுபட்ட காயத்தில் மருந்து போட்டுக் கொண்டிருக்க, பாலா, ரூபினி, மதுரிமா அனைவரும் அவர்களைச் சுற்றி நின்றுக் கொண்டிருந்தனர். சிறிது நேரத்திற்கு முன்பு நடந்த விஷயங்கள் அனைவருக்கும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

சாத்விக் ஒருப்பக்கம் அவளிடம் உருகி அன்போடு பேச, இதில் பன்னீர் தான் அவளது தந்தை என்பது தேவியாக அவளை அறிந்தவர்களுக்கு அதிர்ச்சி தான், தந்தை உயிரோடு இருக்கிறார் என்றால், தனம் அவளது அன்னை இல்லையா? அப்படியென்றால் தனத்தின் மகள் என்று சொல்லிவிட்டு அவள் ஏன் இத்தனை காலம் இங்கு இருக்க  வேண்டும்? சாத்விக்கிற்கும் தேவிக்கும் என்ன சம்பந்தம்? என்று பல கேள்விகள் அவர்களுக்குள் எழுந்தது.

புவனாவிற்கு தேவி தனத்தின் பெண் இல்லை என்பதும், அவள் உண்மையான பெயர் யாதவி என்பதும், அவளுக்கு தந்தை இருக்கும் விஷயமும் அவர் அறிந்தது தான், ஆனால் அதற்கு மேல் அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. சாத்விக் வந்து யாதவியோடு பேசியது அவருக்கே அதிர்ச்சியான விஷயம் தான்,

ஆனால் யாதவி முன்பு அழுதது அவள் பன்னீரை பார்த்த காரணத்தினால் என்பது மட்டும் அவருக்கு புரிந்தது. தந்தையை பார்த்ததும் அவளுக்கு பழைய ஞாபகங்கள் அனைத்தும் நினைவிற்கும் வந்திருக்க வேண்டும், அதுமட்டுமில்லாமல் அன்னையின் நினைவும் அவளுக்கு அதிகம் வந்திருக்க வேண்டும், என்று அவரே யூகித்துக் கொண்டார்.

அதனால் யாதவி அங்கிருந்து அவள் அறைக்கு ஓடியதும், பன்னீர் அன்பாக இருப்பது போல் நடித்தப்படியே அவள் பின்னால் செல்ல முயற்சித்தார். அப்போது புவனாவோ,

“இங்கப்பாருங்க அவளுக்கு காலையிலிருந்து உடம்பு சரியில்ல.. இப்போ இங்க நடந்த சம்பவம் அவளுக்கு அதிர்ச்சியை வேற கொடுத்திருக்கும்.. எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்.. இப்போ அவளை தொந்தரவு செய்யாதீங்க..” என்று சொல்ல,

“என்னோட மகளை பார்க்கக் கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு.. நான் அவக்கிட்ட இப்பவே பேசணும்..” என்று பன்னீர் எகிறினார்.

யாதவி இங்கு பாலாவின் வீட்டில் இருக்கிறாள் என்பதே சாத்விக்கிற்கு அதிர்ச்சி தான், இருந்தாலும் பாலா மற்றும் புவனாவின் நடவடிக்கையும் பேச்சுமே அவள் இங்கு பாதுகாப்பாகவும் நலமாகவும் இருக்கிறாள் என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லிவிட்டது. இங்கு தான் அவள் இத்தனை காலமாக இருக்கிறாள் என்றால், அவளுக்கு கண்டிப்பாக அவனைப் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கும், கண்டிப்பாக அவன் மீது கோபமோ இல்லை வருத்தமோ இருப்பதால் தான் அவள் ஒதுங்கி யாருக்கும் தன்னை தெரியப்படுத்தாமல் இருக்க வேண்டும், இதோ இப்போது இந்த பார்ட்டிக்கு அவன் வந்திருப்பது கூட அவளுக்கு தெரிந்திருக்கலாம், அதனால் அவள் இங்கே வர விரும்பாமல்,அந்த பதட்டத்தில் தான் அவள் விழப் போனது கூட என்று புரிந்ததால்,

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அங்கிள்.. அவங்க சொல்றதும் சரி தான்.. யாதவி இங்க இருப்பது தெரிஞ்சு போச்சுல்ல.. மெதுவா பேசிக்கலாம்..” என்றான்.

அதற்குள் கோபத்தை மறைத்துக் கொண்டு சாத்விக் அருகில் வந்த வசந்தன், “சாத்விக் நாம கிளம்புவோமா?” என்றுக் கேட்டார். இதற்கு மேல் இங்கு நடப்பவற்றை பார்க்க அவருக்கு பொறுமை இல்லை.

“சரி கிளம்பலாம்..” என்று கூறிய சாத்விக்,

“அங்கிள் நீங்களும் இங்க இருந்து சீக்கிரம் கிளம்புங்க.. நான் சொன்ன மாதிரி எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்..” என்று கூறியவன், அனைவரிடமும் விடைப் பெற்றுக் கொண்டான்.

அடுத்து புவனா யாதவியை பார்க்க உள்ளே போகவும், பாலாவோ ரூபினியை பார்த்து,

“எதுக்கு உங்க அம்மாவுக்கு தேவையில்லாத வேலை..” என்று கோபப்பட்டான்.

இங்கு நடப்பவற்றை வியப்போடு பார்த்திருந்தவளுக்கு அவன் கோபமாக பேசவும், முகம் மாறிப் போனது. எதுவும் பேசாமல் அமைதியாகவே நின்றாள்.

யாதவி விழப் போனதும் தாங்கி பிடித்ததோடு சரி, அடுத்து எனக்கு யாதவியை தெரியும் என்பது போல் விபாகரன் காட்டிக் கொள்ளவில்லை.

தேவி என்று பாலா அழைத்ததிலேயே அவள் இங்கு எப்படி இருக்கிறாள் என்பது அவனுக்கு தெரிந்துவிட்டது. பாலா அடிக்கடி தேவியைப் பற்றி பேசுபவன், தேவி பற்றிய அனைத்தையும் கூறியிருக்கிறான்.

தேவி தான் யாதவி என்பதால் தேவியை பார்க்க வேண்டும் என்று அவனுக்கு தோன்றியது போல, இங்கு வந்ததும் யாரோ நெருங்கியவர் இருப்பது போல் தோன்றியதும் யாதவியால் தானா? என்று விபாகரன் நினைத்துக் கொண்டான்.

ஆனால் அதற்கு மேல் யாதவியை அவன் நெருங்க நினைக்கவில்லை. அவள் நலமாக இத்தனை நாள் இருந்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்டான். அவளை ஒருமுறை நேரில் பார்த்தும்விட்டான். அதுவே போதும் என்று தான் அவனுக்கு தோன்றியது. அதனால் தான் அவனுக்கு யாதவியை தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவில்லை. அவனே வாய் திறக்காததால் மஞ்சுளாவும் அர்ச்சனாவும் கூட எதுவும் பேசவில்லை. முதலில் அவளை தெரிந்தவளாக காட்ட அவர்கள் விரும்பவில்லை என்றே சொல்லலாம்.

“சரி பாலா நாங்க கிளம்பறோம்..” என்று விபாகரன் தன் குடும்பத்தாரோடு விடைப் பெற்றான். அவன் சென்றதும் சுஜனாவின் குடும்பமும் விடைப் பெற்றது.

ரூபினி முன்னதாகவே தன் அன்னை, தந்தையை கிளம்ப சொல்லியிருக்க, மீதி உள்ளவர்களை கவனித்து அனுப்பும்படி அஜயிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு பாலா வீட்டுக்குள் செல்ல, ரூபினியும் மதுரிமாவும் அவன் பின்னால் சென்றனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.