(Reading time: 15 - 30 minutes)

காலையில் எழுந்ததுமே சாத்விக் பன்னீரை தேடி அவுட்ஹௌசிற்கு வந்துவிட்டான். முதலில் தூங்கினால் தானே எழுந்திருப்பதற்கு, யாதவியை நேருக்கு நேராக பார்த்ததில் அவன் ஏதோ மாய உலகில் இருந்தான்.

நேற்று மது அருந்திய போதை மயக்கம் இன்னும் தெளியாத நிலையில் பன்னீர் உறங்கிக் கொண்டிருக்க, சாத்விக் தான் அவரை எழுப்பும்படி ஆயிற்று, அடித்து பிடித்து எழுந்தவர், சாத்விக் தன்னை தேடி வந்திருப்பதை பார்த்தவர், பதட்டத்தோடு..

“என்ன தம்பி எதுவும் முக்கியமான வேலைங்களா?” என்றுக் கேட்டார்.

“ஆமாம் முக்கியம் தான், ஆனா அதுக்கு முன்ன நீங்க ஏன் பார்ட்டில இப்படி நடந்துக்கிட்டீங்க.. டீசண்ட்டான பாரட்டில இப்படி நடந்துக்கலாமா?” என்றுக் கேட்டான்.

“அது தம்பி.. ரொம்ப நாள் கழிச்சு பழைய ப்ரண்ட்டை பார்த்ததால கொஞ்சம் ஓவரா போயிடுச்சு.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன் தம்பி.. சரி என்ன முக்கியமான விஷயம் தம்பி..”

“இன்னைக்கு யாதவியை போய் பார்த்து பேசணுமே..” என்று அவன் சொல்லவும்,

நேற்று போதையில் இருந்ததால், யாதவியை பார்த்தது ஏதோ கனவு போல் அவருக்கு தோன்ற, இப்போது தான் அது நிஜத்தில் நடந்தது என்று உரைத்தது. நேற்று நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்தது.

இத்தனை நாள் மகளுக்கு மனதளவில் சாபம் விட்டுக் கொண்டிருந்தவருக்கு மீண்டும் மகளால் தனக்கு லாபம் கிடைக்க போவதில் மகிழ்ச்சியாக தான் இருந்தது.

ஆனால் யாதவிக்கும் சாத்விக்கிற்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது? விபாகரனையும் வேண்டாமென்றவள், சாத்விக்கையும் விட்டுவிட்டு எவனோடு ஓடிப் போனாள்? அந்த வீட்டில் எப்போது அடைக்கலமானாள்? என்ற பல கேள்விகள் அவரை வண்டாய் குடைந்தது? அதையே அவர் சாத்விக்கைப் பார்த்து கேட்க,

“எல்லாத்துக்கும் உங்களுக்கு சீக்கிரம் விடை தெரியும் அங்கிள். சிலதுக்கு தான் நான் பதில் சொல்ல முடியும்.. சிலதுக்கு பதில் யாதவிக்கிட்ட தான் உண்டு..

முதலில் போய் நாம அவளை அழைச்சிட்டு வருவோம்.. என்னத்தான் அந்த வீட்ல அவ பாதுகாப்பாக இருந்தாலும், நேத்து அவ சுடுதண்ணியை  கையில் எடுத்துக்கிட்டு வந்தது எனக்கே பார்க்க கஷ்டமா இருந்துச்சு.. இதுக்கு மேலேயும் அவளுக்கு எந்த கஷ்டமும் வரக் கூடாது.. வாங்க அவளை போய் முதலில் கூட்டிட்டு வருவோம்..” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

“அதுக்கு ஒருப்போதும் நான் சம்மதிக்க மாட்டேன்..” என்றப்படி வசந்தன் அங்கு வந்தார்.

“இவரை எப்படி மறந்தோம்.. நாம நினைச்சதை இவர் நடக்க விட மாட்டார் போலேயே..” என்று பன்னீர் மனதில் நினைத்துக் கொண்டார்.

“சாத்விக் நீ நேத்து பார்ட்டில நடந்துக்கிட்டது கொஞ்சம் கூட சரியில்ல.. நீ சாதாரண ஒருத்தன் கிடையாது.. எல்லோருக்கும் தெரிஞ்ச பிரபலம்.. நீ நேத்து நடந்துக்கிட்டதோட ரியாக்‌ஷனை பார்..” என்று சொல்லி அன்றைய செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.

அதை கையில் வாங்கியவன் அதில் இருந்த செய்தியை படித்து முடித்தான். இதுவரை அவனைப் பற்றிய செய்திகளை பொருட்படுத்தாதவனுக்கு, இதில் யாதவியையும் சேர்த்து எழுதியிருந்தது அவனுக்கும் பிடிக்கவில்லை தான், ஆனால் அதில் எழுயியிருந்ததை போல் அவனது பார்வை எந்த பெண்கள் இடத்திலும் இருந்ததில்லை. அது யாதவியிடம் மட்டும் தான் எப்போதும் நிலைத்து நிற்கும் என்று நினைத்து தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

“உனக்கும் சுஜனாவிற்கும் கல்யாணம் பேசியிருக்க நேரத்துல நீ இப்படியெல்லாம் நடந்துக்கக் கூடாது சாத்விக்.. ஏற்கனவே நேற்று நடந்ததுக்கே நான் சுஜனா அப்பாவுக்கு என்ன பதில் சொல்லப் போறேன்னு தெரியல.. இதுல நீ வேற யாதவியை இங்கு கூட்டிட்டு வரணும்னு சொல்ற.. அது கண்டிப்பா நடக்கக் கூடாது..” என்று வசந்தன் கண்டிப்பாக கூறினார்.

அதில் சிறிது எரிச்சலான சாத்விக்.. “அப்பா யாதவி ரொம்ப நாள் கழிச்சி கிடைச்சிருக்கா.. அவளை கூட்டிட்டு வந்து வச்சிக்கிற உரிமை பன்னீர் அங்கிளுக்கு இருக்கு.. அதை நாம வேண்டாம்னு சொல்ல முடியாது..” என்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“அதை நான் வேண்டாம்னு சொல்லல.. ஆனா யாதவி இந்த வீட்டுக்கு வரக் கூடாது அவ்வளவு தான், அப்புறம் சீக்கிரம் உனக்கும் யாதவிக்கும் எங்கேஜ்மெண்ட் நடக்கும்.. அதுக்குள்ள எந்த கிறுக்குத்தனமும் செய்யாம இரு..” என்றவர், பன்னீரையும் ஒருமுறை கோபமாக பார்த்துவிட்டுச் சென்றார்.

பன்னீர் பாவமாக சாத்விக்கை பார்க்க, “கவலைப்படாதீங்க அங்கிள். யாதவியோடு நீங்க இருக்க நல்ல வீடா பார்க்கிறேன்..” என்றவன்,

“நீங்க நினைக்கறதெல்லாம் நடக்காதுப்பா.. நான் யாதவியை பார்த்துட்டேன்.. அவ என்னோட யாதவியாக தான் இன்னமும் இருக்கிறா ப்பா.. அவளுக்கும் எனக்கும் தான் கல்யாணம்..” என்று மனதிற்குள் அவன் சொல்லிக் கொள்ள, விதியோ அவனை வேடிக்கையாக பார்த்து சிரித்தது.

காலையில்  செய்தித்தாளில் படித்த செய்தியை நினைத்து அலுவலகத்தில் விபாகரன் கோபமாக உட்கார்ந்திருந்தான். இதுபோல் யாதவியைப் பற்றி எந்த செய்தியும் வந்துவிடக் கூடாதென்று தான் அவளை இத்தனை நாள் ரகசியமாக அவன் தேடினான். ஆனால் இன்று இப்படி ஒரு செய்தி வந்ததை பார்த்தவனுக்கோ, பொது இடத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பது சாத்விக்கிற்கு தெரியாதா? என்று அவன் மேல் கோபம் வந்தது.

அதையும் மீறி யாதவியை அங்கு வரவழைத்த ராகிணி மீதும் கோபம் வந்தது. ஏற்கனவே ராகிணியும் ரூபினியும் அவளை வேலைக்காரியாக நடத்துவதாக பாலா சொல்லக் கேட்டிருக்கிறானே..

யாதவி வேலைக்காரியா? நினைத்ததெல்லாம் நல்லப்படியாக நடந்திருந்தால் அவன் சாம்ராஜியத்திற்கு அவள் மகாராணி அல்லவா? ஆனால் எல்லாம் எளிதாக கிடைத்திருந்தால், தொழிலில் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை அவனால் உருவாக்கியிருக்க முடியுமா? ஒன்றை இழந்து தானே ஒன்றை பெற வேண்டியிருக்கிறது. யாதவியின் புறக்கணிப்பு அவனை தொழிலில் தீவிரமாக ஈடுப்படுத்தியது. அதுதான் அவனது தற்போதைய உயரத்திற்கு காரணம்.

ஆனாலும் யாதவி மீது அவனுக்கு கோபம் வரவேயில்லை. இப்போதும் அவளை கஷ்டப்படுத்திய ராகிணியை அவன் தண்டிக்க நினைத்தான். ஆனால் எப்படி என்று தெரியவில்லை.

வேறு யாரக இருந்திருந்தாலும் தொழில் ரீதியாக அவர்களை முடக்கியிருப்பான். அதுதான் அவனுக்கு தெரியும், ஆனால் அவர் பாலாவின் மாமியார், பாலா தான் இப்போது அவர்களின் தொழில்களை பார்த்துக் கொள்கிறான். அதனால் அவனால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது. அப்படியும் விடாமல் அவர்களை பற்றிய தகவல்களை சேகரிக்க சொல்லியிருந்தான்.

அதற்கு பலனாக அவனது பி.ஏ ஒரு செய்தியை கொண்டு வந்தான்.

“சார் அவங்க பிஸ்னஸ் எல்லாம் பாலா சார் தான் பார்த்துகிறார். ஆனால் அடையார்ல அவங்களுக்குன்னு ஒரு ஜிம் இருக்கு.. அதுக்கு பல வி.ஐ.பிஸ் தான் வருவாங்க.. அதை முழுக்க பார்த்துப்பது ராகிணி மேடம் தான்..” என்று அவன் சொன்னதும்,

“அப்போ 24 மணி நேரத்துக்குள்ள அந்த ஜிம் இயங்கக் கூடாது.. என்ன பண்ணனுமோ பண்ணுங்க.. ஆனா வேலையை சரியா முடிச்சுட்டு சொல்லுங்க..” என்று கட்டளையிட்டவன், அவன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.

மையல் தொடரும்..

Episode # 11

Episode # 13

Go to Maiyalil manam saaintha velai story main page

{kunena_discuss:1211}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.