(Reading time: 11 - 21 minutes)

“அதற்கு காரணம் அந்த சரவணன் தான். உன்னை ஒரு சக மனுஷியாக பார்க்காமல், அத்தனை தூரம் அந்தக் குடும்பம் மட்டம் தட்டினார்களே . அது எனக்குள் அவ்வப்போது கோபத்தைக் கிளறி விட்டது. அவர்கள் முன்னாடியே நீ வெற்றி பெற்றவளாக நிற்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அதை நீ விரும்பி செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்த போது தான், நம்முடைய வரவேற்பிற்கு நீ சொன்ன யோசனைகள் பற்றித் தெரிய வந்தது. வித்தியாசமாகவும், அதே சமயம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியும் உன் யோசனைகள் இருப்பதாக அம்மா கூறினார்கள். அதை வைத்துத் தான் உன்னை அம்மாவோடு ஆபீஸ்க்கு போகச் சொன்னேன். முதலில் நீ தடுமாறினாலும் , இப்போ விஷயங்களை எளிதாக ஹான்டில் செய்யும் அளவிற்கு வந்துவிட்டாய். முக்கியமாக சரவணன் போன்ற மனிதர்களைக் கண்டு பயம் கொள்ளாமல், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் அளவிற்கு தயாராகி விட்டாய்.”

“சரி. டாக்டர் கிட்டே போக அப்படி என்ன அவசரம்?

“நீதான் காரணம்.”

“நானா?

“ஆமாம். ரேஸ் சென்றபோது ஏற்பட்ட விபத்தின் போது மயக்கம் போட்டாயே. அப்போது சேகரும் உடன் இருந்தான் இல்லியா? அவன் உன்னை செக் செய்து விட்டு, எதற்கும் எல்லா டெஸ்ட்டும் எடுத்து விடலாம் என்று என்னிடம் சொல்லி விட்டுச் சென்றான். அதற்கு முன் நம் ரிசெப்ஷன் போதே அவனிடம் உன்னைக் கூட்டிக் கொண்டு போக அப்பாயின்ட்மென்ட் கேட்டு இருந்தேன். ஆனால் நம் திருமணம் நடந்த விதம் கேட்டவன், கொஞ்ச நாள் உன்னை இயல்பாக இருக்க விட்டு, தேவை என்றால் பார்துக் கொள்ளலாம் என்றான். ஆனால் நான் அடிபட்ட நேரத்தில் என்னை நீ கவனித்துக் கொண்ட போதும், உன்னைத் தவிர வேறே யாரையும் என்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டதும், எனக்கு உன் மனதைப் புரிய வைத்தது. நம் வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்ல எண்ணித்தான் சேகரிடம் கேட்டேன். அவன்தான் என்னை ஒரு கவுன்செல்லிங்க் எடுத்துக் கொள்ளச் சொன்னான். மற்றது எல்லாம் நான் ஏற்கனவே சொன்னதுதான் ரித்து. “ என்றவன்,

“எனக்கு எப்போவும் நீ மட்டும் தான். இன்னொரு விஷயம் உன்னைத் தவிர என் மனசில் வேறே யாரும் என் மனைவி என்ற இடத்தில் யோசிச்சது இல்லை ரித்து. கல்யாணத்திற்கு தயாராக இல்லாததால் திருமணம் என்றவுடன் கொஞ்சம் யோசித்தேன் அவ்வளவு தான். உனக்கு இப்போ எந்த சந்தேகமும் இல்லையே.” என்று கேட்டான்.

“இல்லை அத்தான். “ எனக் கூறவே,

“அப்போ இனிமேல் இந்த மித்ராவும், ஷ்யாமும் சேர்ந்து ..” என்று அவள் காதோரம் சொல்ல, அதைக் கேட்ட மித்ரா வெட்கத்துடன் அவன் மார்பில் சரணடைந்தாள்.

அன்றைய இரவு ஷ்யாம் தன் மனைவி ரிதுவோடு அவர்களின் வாழ்க்கையைத் தொடங்கினான்.

மறுநாள் காலையில் ஷ்யாமிற்கு முன்னால் மித்ரா எழுந்து கொள்ள, அவனைப் பார்த்தவளுக்கு முகம் சிவந்தது. இரவு தன்னை மென்மையாகவும், ஆசையாகவும் கையாண்ட தன் கணவனை எண்ணிப் பெருமிதபட்டாள். அவ்வப்போது அவள் தயங்கினாலும், அவனின் செயலால் அவளை அந்த பதட்டத்திலிருந்து மீட்டான் ஷ்யாம்.

அதனால் அதிகம் பதட்ட்ப்படும்போது வரும் மயக்கம் அப்போது வரவில்லை.

இதை எல்லாம் எண்ணியவள் முதலில் சென்றுக் குளித்து வருவதற்குள், ஷ்யாம் எழுந்து இருந்தான். அவள் வெளியே வரவும், வேகமாக அவளை மீண்டும் வளைத்தான்.

மித்ரா நெளிந்து விலகவும், ஆசையாக முத்தமிட்டு விட்டு, தானும் குளிக்கச் சென்றான்.

இருவரும் கீழே இறங்கி வர, அவர்களைப் பார்த்த மைதிலிக்கு புரிந்தார் போல் இருந்தது. எப்போதுமே அவர்கள் வித்தியாசமாக நடந்தது இல்லைதான். ஆனால் இன்றைக்கு அவர்கள் நெருக்கத்தில் ஒரு அன்னியோன்யம் தெரிந்தது.

காலை உணவின் போதும் மித்ராவை சீண்டிக் கொண்டே இருந்தான் ஷ்யாம். மித்ரா ஒருவிதமாக நெளிந்து கொண்டே இருக்க, அதைக் கவனித்த சுமித்ராவோ

“ஹேய். மத்து. காலையிலேயே என்னடி நாகினி டான்ஸ் ஆடிட்டு இருக்க?” என்று கலாயிக்க, மித்ரா அசடு வழிந்தாள்.

மைதிலி ராமிடம் கண்ணைக் காட்ட, ராம்

“ஷ்யாம்” என,

“என்னப்பா?”

“அந்த ஜெர்மனி கஸ்டமர் வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?

“ஆமாம்பா.. பர்ஸ்ட் லாட் எக்ஸ்போர்ட் பண்ணியாச்சு. இனிமேல் ரெகுலர் ஆர்டர் ப்ரோசெஸ் பண்ணினால் போதும்”

“ஹ்ம்ம்.. அப்படின்னா நீயும், மித்ராவும் எங்கியாவது கொஞ்ச நாள் போய் ரிலாக்சா இருந்துட்டு வாங்களேன்” என, ஷ்யாம் விழிகள் பளிச்சிட்டது.

அதற்குள் சுமித்ரா “அப்பா, ஹனிமூன்னு சொல்லுங்களேன். என்ன ஒரு வழ வழா , கொழ கொழா.. “ என்றாள்.

மைதிலி “சின்னப் பொண்ணா, லட்சணமா இரு. அதிகப் பிரசங்கித்தனமா பேசிகிட்டு இருக்க” என

“மைதிலி மாதா, உன் மருமகள விட நான் ஒரு வயசு தான் கம்மி. நியாபகம் வச்சுக்கோ.. என்னமோ என்னை செர்லாக் பேபி மாதிரி சொல்றியே. “

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.