(Reading time: 12 - 24 minutes)

ப்ரித்வி ஓரளவு யூகித்தான் தான். முதலில் ட்ரெயினில் வம்பு வளர்த்தார்கள் என்றபோது அந்த நேர இன்ட்யுசனில் என்று நினைத்து இருந்தான். ஆனால் இங்கே வரை தொடர்ந்து வந்ததும் தான் திட்டமிட்டதோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் தான் விசாரிக்கவும் செய்தான். கிடைத்தத் தகவல்கள் அவனுக்குக் கவலையை ஏற்படுத்தியது.

இத்தனைக்கும் அவனுக்குத் தகவல் கொடுத்தவர்கள் அந்த செல்வம் பிரச்சினை செய்ததே கிருத்திகாவிடம் என்பதைச் சொல்லவில்லை. அது அவர்களுக்குத் தெரியவும் இல்லை.

ப்ரிதிவிக்கு கிருத்திகா பற்றியே கவலையாக இருந்தது. சற்று அதிகத் துணிச்சலுடன் இருக்கிறாளோ என்ற எண்ணம் ஓடியது. பெண்களுக்கு அதிலும் குழந்தையைக் கூட வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும் இந்தக் காலத்தில் இந்த துணிச்சல் மிகவும் தேவையான ஒன்றே.

ஆனால் அதீதத் துணிச்சலே ஆபத்தை வரவேற்கவும் செய்யும் என்பதும் உண்மையே. இந்த இரண்டு நாட்களில் அவன் அறிந்த அளவில் கிருத்திகா  தனியாக எங்கும் செல்லவில்லை என்றாலும் தனக்கு ஆபத்து என்ற போதும் கத்தவோ, அதை மற்றவர்களிடம் சொல்லவோ இல்லை என்பது அவனுக்கு சரியான அணுகுமுறையாகத் தோன்றவில்லை.

இந்த யோசனைகளோடு அவன் இருக்க, திடீர் என்று மாணவர்கள் மத்தியில் சலசலப்பு சத்தம் கேட்டது. அங்கே அவர்களின் பேராசிரியர் மயக்கம் போடும் நிலையில் இருக்க, மற்ற மாணவர்கள் அவரைத் தாங்கிப் பிடித்து இருந்தனர்.

என்னவென்று விசாரித்தால் அங்கேயும் கிருத்திகாவின் திருவிளையாடலே. கோட்டையில் எல்லோரும் ஓரிடத்தில் நின்று சன் செட் பார்த்துக் கொண்டு இருக்க, க்ருதிக்கா மட்டும் அந்தக் கோட்டையின் சுவர்களை ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தாள்.

அப்படி செய்து கொண்டு வரும்போது ஓரிடத்தில் கைப்பிடி போன்ற அமைப்பு இருக்க அதை மாற்றி மாற்றித் திருகியதில் சுவர் லேசாகப் பிளந்தது. ஒருவர் மட்டும் உள்ளே செல்லும் அளவு வழி வந்ததும் அதற்கு மேல் சுவர் நகரவில்லை.

கிருத்திகா எல்லோரையும் அழைக்கத் திரும்பியவள் , அவர்கள் சூரியனைப் படம் எடுப்பதில் மும்முரமாக இருக்கவே , தான் மட்டும் உள்ளே சென்றாள். அவள் செல்லவும் உள்ளிருந்து ஒரு இடத்தைத் தொடவும், அந்த வழி மூடிவிட்டது.

உள்ளே ஒரே இருட்டாக இருக்கவே உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும், சர்வ வல்லமை படைத்த செல் போன் கையில் இருக்க, அதில் டார்ச் ஆன் செய்தாள். அந்த மெல்லிய வெளிச்சத்தில் நீளமான பாதையில் பயணித்தவள், அது நேராக அந்த கோட்டையின் தர்பார் அறையில் சென்று முடிந்ததைக் கண்டாள்.

அதைப் பற்றிய குறிப்பைத் தன் நோட்டில் எழுதி விட்டு, மீண்டும் வந்த வழியேத் திரும்பினாள்.

அதற்குள் சன் செட் பார்த்து முடித்தவர்கள் கிளம்பலாம் என்று முடிவு செய்து அவரவர் குழுவினைச் சரிபார்க்க , ஒரு ஆள் மட்டும் குறைவதைக் கண்டுத் திகைத்தனர்.

யார் என்று சரிபார்க்கும் போது கிருத்திகா இல்லாததைக் கண்டுத் திகைத்து விழித்தனர்.

அப்போது அந்த சுவற்றில் விரிசல் வரவும் எல்லோரும் பயப்பட, அதிலிருந்து கிருத்திகா வேறு வரவும் அவளின் புரொபசருக்கு மயக்கமே வந்து விட்டது.

அந்த நேரத்தில் தான் ப்ரித்வியும் அவர்கள் அருகில் வந்து இருந்தான்.

கிருத்திகாவின் தோழிகள் ,

“ஏய், கிருத்திகா எங்கே போயிருந்தாய்? என்னவோ அலாவுதீன் பூதம் மாதிரி இந்த சுவற்றிலிருந்து வருகிறாயே? “ என்று கேட்டனர்.

“ஹேய், நீங்கள் எல்லோரும் சன் செட் பார்த்துக் கொண்டு இருக்கவும், நான் இந்த சுவரை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்தேன்.” என்றுக் கூறி, அவள் சுவற்றில் கதவு போல் இருந்ததைச் சொல்லி, அது தர்பார் ஹால் வரைக்கும் சென்றதைச் சொல்லி முடித்தாள்.

அவள் சொன்னதில் மற்றவர்களுக்கு ஆச்சர்யம் வர, ப்ரித்வி மெதுவாக விளக்கினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சசிரேகாவின் "காணும் இடமெல்லாம் நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“இது ஒற்றர்களுக்கான வழி ஆக இருக்கும். அவர்கள் தகவல் கொடுக்கவோ, அல்லது தகவல் தெரிந்து கொள்ளவோ இந்த வழியை உபயோகப் படுத்தி இருப்பார்கள்.”

“அது கதவு போல் மரமாக இருந்தால் தான் சாத்தியமாக இருக்கும்?”

“ஒரே கல்லாக இருக்கும் இந்த சுவர். இதை இயக்க உள்ளுக்குள் இரும்போ, மரத்தினாலோ தளவாடங்கள் செய்து அதையும் மறைத்து வைத்து இருப்பார்கள். அந்தக் கைப்பிடியைத் திருகியதும் , தளவாடங்கள் மூலம் கல்லை நகர்த்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும். ரகசியம் காக்க, மற்ற இடங்களைப் போலவே இதையும் வர்ணம் அடித்து இருப்பார்கள்”

எல்லோரும் அந்த வழியில் போகலாமா என்றுக் கேட்க, வேண்டாம் என்று மறுத்தவன்,

“அந்தப் பாதை எப்படி இருக்கும் என்று தெரியாது. அதோடு பழங்காலத்துக் கோட்டை இது. எந்த இடத்தில் விரிசல், சேதம் இருக்கும் என்பதும் தெரியாது. கிருத்திகா சென்று வந்து இருக்கிறார் என்றால் அது அவரின் லக்தான். எல்லோரும் செல்லும் போது ஆபத்து இருக்கலாம். அதனால் போக வேண்டாம். வேண்டும் என்றால் இந்த இடத்தை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்றான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.