(Reading time: 11 - 22 minutes)

“அரசே!!ஏன் ஏதேதோ பேசுகிறீர்கள்..நம் சிகங்காவதி நிச்சயம் நலமுடன் இருப்பாள்..”

“நலமுடன் இருக்க அவள் ஒன்றும் புகுந்த அகத்திற்குச் செல்லவில்லை அடிமையாய் கைதியாய் சென்றிருக்கிறாள் மேகலை..என் மனம் தெளிந்துவிட்டது,நிச்சயம் என் மகள் இந்தப் பூமியில் இல்லை.அவளின் ஆன்மா இந்நேரம் இங்கு எங்கோ நின்று கண்ணீர் மல்க எனைத்தான் பார்த்துக் கொண்டிருக்கும்.எனைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டீர்களே என அந்த ஆன்மா கதறுமே!!

அதோ தெரிகிறது என் மகளின் உருவம்..அதோ அங்கே என்னை அழைக்கிறாள்.”

“அரசே!!!என்னவாயிற்று அங்கு யாரும் இல்லை.”

“உனக்குத் தெரியவில்லை மேகலை.அதோ என் மகள் எனை ஏக்கத்தோடு பார்த்து நிற்காள்.தனியாக தவித்துக் கொண்டிருக்கிறாள்.எனை அவளோடு வருமாறு அழைக்கிறாள்.மகளே சிவகங்காவதி இதோ நானும் வருகிறேன்.உனக்குத் துணையாய் நான் இருக்கிறேன் மகளே கலங்காதே.வந்துவிட்டேன் மகளே வந்துவிட்டேன்!!”,என்றவர் தன் மார்பில் கை வைத்தவாறே அப்படியே கீழே சரிந்து விழுந்தார்.

மணிமேகலையோ கண்முன் நடக்கும் அத்தனையும் கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.அவரை எழுப்ப முயற்சித்தவளுக்கு எதுவும் முடியாமல் போக அவசரமாய் அரண்மனை வைத்தியரை அழைத்து வர ஆள் அனுப்பினாள்.

வைத்தியர் வந்து பரிசோதித்து பார்த்து அவர் உயிர் பிரிந்து விட்டதை உறுதிப்படுத்தினார்.ஒட்டு மொத்த பாளையமுமே சோகத்தில் ஆழ்திருக்க நடப்பது ஏதும் தெரியாமல் கங்காம்மா படுக்கையில் இருக்க மேகலை தான் ஆணுக்கு ஆணாய் பெண்ணுக்குப் பெண்ணாய்அத்தனையையும் கவனித்தாள்.

சேதிராயனின் மரணத்தை வைத்து பாளையத்தைக் கைப்பற்றும் ஆசையில் பலர் பேச்சுகளைத் தொடங்க அத்தனை பேரின் பேச்சுகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து அரசவையை சீர்படுத்தினாள் மணிமேகலை.

சிவகங்காவதியின் இதயமோ நிலையின்றி தவித்துக் கொண்டிருந்தது.ஏதோ சரியில்லை என்று புரிந்தாலும் என்னவென்பதை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.திக்கற்றோருக்குத் தெய்வமே துணை எனும் வழியில் வழக்கமான தன் தியானத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டவளுக்கு நடந்த காட்சிகள் அனைத்தும் மனக் கண்ணில் விரிய மூடியிருந்த விழிகளில் இருந்து கண்ணீர் அதுவாய் வழியத் தொடங்கியிருந்தது.

வெகுநேரமாகியும் அவள் அப்படியே அமர்ந்திருப்பதை கண்ட காவலாளிகளின் மூலம் செய்தி நஸீமின் செவிகளை எட்டியது.

“நிச்சயம் ஏதோ மாயாஜாலம் செய்கிறாள்.ஆண்களுக்கு நிகராண வாள்வித்தையும் பாரசீக மொழியையுமே கற்றுத் தேர்ந்தவளுக்கு மாயாஜாலமா கடினமான காரியம்?இருக்கட்டும் இந்த நஸீமிடம் எந்த மாயாஜாலமும் பலிக்கப் போவதில்லை.நானே வருகிறேன் அவளின் வித்தைகளை நேரில் காண எனக்கும் ஆவலாய் இருக்கிறது.”,என்றவன் பாதாளச் சிறைக்குச் சென்றான்.

கால்கள் மடக்கி கண்கள் திறந்திருந்த நிலையில் சிலையென அமர்ந்திருந்தாள் சிவகங்காவதி.நஸீமின் கண்ணசைவில் அவளின் சிறைக் கதவை திறந்து உள்ளேச் சென்ற காவலாளி ஒருவன் தன் கையிலிருந்த ஈட்டியால் அவளை லேசாய் தட்டினான்.

உணர்வு பெற்றவளாய் அங்கிருந்த அனைவரையும் ஒருமுறை பார்வையால் கவனித்தவள் நஸீமைக் கண்டு மெதுவாய் எழுந்து நின்றாள்.

“என்னவாயிற்று இளவரசியாரே!வெகுநேரமாய் ஏதேதோ வித்தைகள் காட்டிக் கொண்டிருந்தாயாம் என்னவாயிற்று?”

“வாய் வார்த்தை உதிர்க்கும் முன் கண்கள் கண்ணீரை வெளிப்படுத்த தன்னைத் தானே தேற்றியவளாய்,”எனக்காக ஒரு உதவி செய்ய வேண்டும்.இதற்காக நாளை எனக்கான வேலையில் இருமடங்கேனும் செய்துகொடுக்கிறேன்.முடியாது என்று மட்டும் மறுத்து விடாதீர்கள்.”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கண்ணம்மாவின் " உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்கத் தவறாதீர்கள்..

“அப்படியென்ன தலை போகிற காரியம்?உதவி?கூறு கேட்கலாம்”

“என்..என் தந்தை..தந்தையின் உயிர் பிரிந்துவிட்டது.ஒரு மகளாய் ஒரே வாரிசாய் அவருக்காக செய்ய வேண்டிய சில இறுதிக் கடமைகள் எனக்கிருக்கிறது.அவற்றை செய்வதற்கு தங்களின் அனுமதி வேண்டும்.”

“என்ன!!!!என்ன இது புதுநாடகம்?எத்தனையோ மைற்கல்கள் கடந்து இருக்கும் உன் தந்தை மரணித்தது உனக்கெப்படித் தெரியும்?எனைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது?”

“சில விடயங்களை எந்த கேள்வியுமின்றி நம்பித்தான் ஆக வேண்டும்.இதுவும் அப்படியே.எனக்கான அத்தனை நல்லதும் கெட்டதும் என் ஈசன் வழி என்னை வந்தடையும் அதற்கு தூரமோ காலமோ தடை கிடையாது.இன்னும் தங்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமானால் நான் இங்கு இப்படி இருப்பேன் என்பதும் எனக்கு எப்போதோ தெரியும்.

அந்த வழிப்பறி நாடகம் எங்கள் அரசருக்காகத் தான் என்று தெரிந்து தான் அவருக்குப் பதிலாக நான் அன்று களம் கண்டேன்.தங்களிடம் வந்து மாட்டிக் கொண்டேன்.நாட்டின் நலனுக்கு அரசர் தான் முக்கியமேயன்றி அவரின் மகள் அல்லவே!அதனால் தான் இந்த முடிவிற்கு வந்தேன்.ஆனால்..ஆனால் இப்போது அந்த அரசரே!!!அவரின் மகளுக்காக தன் உயிரைத் தொலைத்து நிற்கிறார்.!!”என்றவளுக்குத் துக்கம் தொண்டையை அடைத்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.